Friday, December 23, 2005

அறிவியலா? அற்புதமா?

(எனது வானொலி ஒலிபரப்புக் கவிதையிலிருந்து)
அந்தரத்தில் உலவிவரும் உலகம் இன்று
அதிசயத்தின் களஞ்சியமாய் மிளிர்தல் கண்டும்,
பந்தைப்போல் சுழன்றுவரும் நிலவை யின்றும்,
பாம்பொன்று விழுங்குவதாய் கதைகள் சொல்வார்.
சந்திரனும் பூவுலகும் ஒன்றுக் கொன்று
சரிநேராய் நேர்க்கோட்டில் செல்லும் போது
கதிரொளிகள் மறைப்பு தனைபாம்பு என்று
பகன்றிட்டால் சிறுவர்களும் நகைப் பாரன்றோ!

சந்திரனில் ராக்கெட்டில் பயணம் செய்தோர்
செவ்வாய் க்கோள் வியாழனையும் கடந்தே இன்று
நெடுந்தூர கோளொன்று புளுட்டோ நோக்கி,
நெடுநாளாய் வாயேஜர் பயணம் அன்று,
அறிவியலின் வளர்ச்சியினால் கணிப்பொறிகள்,
அற்புதங்கள் நிகழ்த்திவரும் காலப்போக்கில்,
மொழிபெயர்ப்பு இசையமைப்பு கணிப்பொறிகள்,
இக்கால அறிவியலுக் கோர் எடுத்துக்காட்டு.

விண்கலங்கள் அனுப்பிவைத்த புகைப் படங்கள்
விளம்புகின்ற பலவுண்மை அறிந்த போதும்!
விண்ணுலகில் தேவர்களும் வாழ்வதாக
விளக்குகின்ற பேரெல்லாம் அறிவுப்பேதை!
சொற்கலவை உவமையுடன் இனிமை சேர்த்து
கற்பனையாய் கதைகளையே எழுதிக்காட்டி!
பற்பலவாய் அறியாமைக் கதைகள் சொல்லும்
அறிவிலிகள் செயலினையே காலம் வெல்லும்!.

நீண்டதொரு காவியுடை அணிந்தே நின்று
நெடுநீள பட்டையுடன் கொட்டை கட்டி!
பிறவியெனும் நெடுங்கடலை நீந்திச் செல்ல
பொடிநடை யாய்தலந் தோரும் முக்தித்தேடி!
மண்டியிட்டு தரைபுரண்டு நீண்ட தூரம்,
இல்லாத சொர்க்கத்தை தேடித்தேடி!
எங்கெங்கோ இந்நாட்டில் பயணம் செய்வார்
வெளிப்படை யாய்செல்வ தானால் வெட்கக்கேடு!

No comments: