Tuesday, March 28, 2006

மன்மோகன் சிங் அமெரிக்க உளவாளி ?

நரசிம்மராவ், சந்திராசாமி, சுப்ரமணியசாமி, துக்ளக் சோ, சந்திரசேகர், மன்மோகன்சிங், ஆகியோரை அமெரிக்க உளவாளி என்பார்கள்.

இதில் துக்ளக் சோ, தவிர மற்றவர்களுக்கு இராசீவ் கொலையில் நேரடித்தொடர்பு இருப்பதாகவே அனைவரும் பேசினர்.

எந்த விருந்தினரையும் வரவேற்க பிரதமர் விமான நிலையத்திற்குச் செல்லும் வழக்கம் கிடையாது. ஆனால் அதையெல்லாம் மீறி, புஷ்ஷையும், லாரா புஷ்ஷையும் வரவேற்க விமான நிலையத்திகே வந்து ஆச்சரியப் படுத்தினார் பிரதமர் மன்மோகன்“ (இந்தியா டுடே-தமிழ், பக்கம்-16, மார்ச் 15, 2006).

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. எஜமான விசுவாசம், இந்த எஜமான விசுவாசத்திற்கும், இராசீவ் கொலைக்கும் இவர்களுக்கு கிடைத்த பரிசும் தான் பிரதமர் பதவி, அதிகாரம் எல்லாம்.

இராசீவ் கொலையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ-விற்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. கீழ்க்கண்ட செய்திகள் அவற்றை உறுதிப் படுத்துகிறது.

அமெரிக்க சேவகர் சந்திராசாமியின் அடியாளான பப்லு ஸ்ரீவத் சவா என்பவர் ஜெயின் கமிசன் முன் சாட்சியமளித்த போது தில்லி சந்திராசாமியின் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியை அப்படியே விவரித்தார்.

ராசீவ் காந்தி கொலைச் செய்தி கேட்டதும், சந்திராசாமி “மகிழ்ச்சியில் கூத்தாடினார்“ என்றார் ராவைப் பிரதமராக்கப் போகிறேன் என்று கூறிய சந்திராசாமி, மோதிலால் நேரு சாலையில் இருந்த நரசிம்மராவுக்கு தொலைபேசி செய்து அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தார் என்று பப்லு சாட்சியமளித்துள்ளார். (இந்தியா டுடே- 21 பிப் 1997).

இராசீவ் அந்த தேர்தலில் பிரதமராகும் வாய்ப்பு அதிகமிருந்தது. ஆனால், இராசீவின் பேச்சுக்கள் அவர் ஒரு அமெரிக்க எதிர்ப்பாளர் என்பது அவரது அப்போதைய பேச்சுக்களில் தெளிவாக தெரிந்தன. எனவே அமெரிக்கா அவரை கொலை செய்ய முடிவு செய்தது என்பதற்கான சூழ்நிலைகள் இங்கே விளக்கப்படுகிறது.

1. தென்னாசியப்பகுதியில் இந்தியா ஆற்ற வேண்டிய பங்கு அதிகரித்துள்ள நிலையில் இந்தியத் தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளுக்கு இலக்குக்கு உள்ளாககூடும். அந்த அந்நிய சக்தி நிச்சயம் சோவியத் நாடு அல்ல என்றார். அமெரிக்காவா? என செய்தியாளர்கள் கேட்டமைக்கு ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தார் இராசீவ் காந்தி.(தி. இந்து- 24-05-1991).

2. பாகிஸ்தான் அதிபர் ஜியா- விமானவிபத்தில் இறந்தார். இதுபற்றி இராசீவ் கூறுகையில் , இது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை. நானும், ஜியாவும் காசுமீர் பிரச்சனையில் ஒரு முடிவை எட்டும் நிலையில் இருந்தோம். அதுபிடிக்காமல் வெளிநாட்டு சக்திகள் இப்படி செயல்படுகின்றன. (பிரண்ட்லைன் 08-06-1991).

3. பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் ராசீவை பிரதிநிதிகள் முலம் சந்தித்து இக்கொலை நடப்பது தொடர்பாக பிப்ரவரி மாதமே எச்சரித்துள்ளார். ஒரு அரசியல் கொலைக்காக சி.ஐ.ஏ, மொசத் (இஸ்ரேல் உளவு நிறுவனம் ) இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக பாலஸ்தீன விடுதலை இயக்க புலனாய்வுப்பிரிவு உயர் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன என்ற விவரத்தை அராபத் தெரிவித்தார். (புரோப் பத்திரிக்கை 1991- ஜுலை).

4. ஆர்.டி.எக்ஸ் வெடி சாதனம் சர்வதேச தீவிரவாதக் குழுவால் மட்டுமே உருவாக்க முடியும். இந்த குண்டு வகை அமெரிக்க குண்டு வகையை சார்ந்தது என தடைய அறிவியல் துறை இயக்குனர் டாக்டர் பி. சந்திரசேகரன் கூறினார். (தினமணி 25-05-1991).

5. சந்திராசாமிக்கு இராசீவ் கொலையில் தொடர்பு இருந்தது என அரியானா மாநில பா.ஜ.க அரசியல்வாதி ரமேஷ்தலால் கமிசன் முன் சாட்சியமளித் துள்ளார். ராசீவ் கொலையில் எனக்குள்ள தொடர்பை வெளியே சொல்லக்கூடாது என என்னை சந்திராசாமி மிரட்டினார். (தி. இந்து- 5-12-95).

6. தேர்தல் வந்ததும், நரசிம்மராவ் பிரதமராவதற்கு, தனக்கு வேண்டிய அரசியல் வாதிகள் வியாபார நண்பர்கள் மூலம் சந்திராசாமி செயல்பட்டார். ( இல்லஸ்டிரேட்டட் வீக்லி 21-06-91).

7. பிரதமாரான நரசிம்மராவ் இராசீவ் கொலையில் குற்றவாளிகள் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

8. பிரதமர் அலுவலகத்திலிருந்து பல கோப்புகள் அதற்காக மறைக்கப்பட்டன அவற்றில் சில.
1. WR/JSS/90Vol.III (இராசீவ் பாதுகாப்பான கோப்பு)
2. 12014/5/911- A.S/DIII(வர்மா கமிசனின் அதிகாரம் தொடர்பானது)
3. இராசீவை கொலை எங்கு கொலை செய்யலாம் என்ற பேச்சை உளவுத்துறை இடைமறித்து கேட்ட விவரம் அடங்கிய கோப்பு. உள்ளிட்ட பல கோப்புகள் காணாமல் போயின.

இராசீவை கொலை செய்ய அன்னிய சக்திகள் தொடர்ந்து முயற்சித்தன. இராசீவ் கொலையை அன்னிய சக்திகளுடன் சந்திராசாமி தான் வகுத்தார். (கே.கே. திவாரி முன்னால் மத்திய அமைச்சர்-அவுட் லுக் 1-12-97).

ஆனால் நரசிம்மராவ், சந்திராசாமி, மற்றும் சி.ஐ.ஏ விற்கு தொடர்பே இல்லாதது போல வழக்கை முடித்து இருக்கிறார்கள். ஏன் பல சாட்சியங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏன் என்பதெல்லாம் நரசிம்மராவுக்கும் அன்றைய சி.பி.ஐ.யின் கார்திகேயனுக்குமே விளங்கும்.

வழக்கு முடிந்த போது இராசீவ் கொலைக்கு பழிவாங்கி விட்டோம் என்றார் கார்த்திகேயன். கார்த்திகேயன் அவர்களின் கருத்துப்படி நீதி மன்றம் நீதி வழங்கவில்லை, பழி வாங்கியுள்ளது. என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சந்திராசாமிக்கும், நரசிம்மராவுக்கும் நேரடியாக கொலையில் தொடர்பு இருந்தது. நரசிம்மராவ் அவரின் சீடரான மன்மோகன் சிங்கை அன்றைய நிதியமைச்சராக்கினார். அமெரிக்க விசுவாசத்திற்காக மன்மோகன் அன்றே அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பை குறைத்தார். இப்படித் தொடர்ந்த இவரின் அமெரிக்க சேவை இன்றும் தொடர்கிறது.

நரசிம்மராவின் அமெரிக்க சேவையை (உளவு வேலையை) இன்று மன்மோகன் தொடர்கிறார்.

இதுதான் மன்மோகன் தேசப்பற்று...??

(உதவிய நூல் :ராசீவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்
க. இராசேந்திரன்)

Friday, March 24, 2006

என்னங்க நாடு? எல்லாமே பிராடு.............

காவிரியில் தண்ணீர் இந்த ஆண்டு வருமா? ......?????. கடலூர், தஞ்சை, நாகை மாவட்டம் உள்ளிட்ட மக்களின் கவலை இது. ஆனால் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் இந்த மக்களின் வாழ்வு அன்றுமுதல் இன்றுவரை பல ஆண்டுகளாக கேள்விக் குறியாகவே உள்ளது.

கர்நாடகத்தில் உள்ள தேசியம் பேசுகிற காங்கிரசு, பாரதிய சனதா, பொதுவுடைமைக் கட்சிகள் அங்கு காவிரியில் தண்ணீர் விடவேண்டாம் என்றும், தமிழகத்தில் உள்ள அதே கட்சிகள் இங்கு காவிரியில் தண்ணீர் விட வேண்டும் என்றும் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றன.

இவர்கள் அனைவரும் அங்காங்கே மக்களை ஏமாற்றுவதிலுள்ள அக்கறை உதவுவதில் இல்லை. 1987 கவிஞர் அறிவுமதி எழுதிய பாடல் இங்கே வெளியிடப்பட்டுள்ளது. அப்போது உள்ள அதே நிலை இப்போதும் உள்ளது. எத்தனையோ தேர்தல் வந்தாச்சு, மக்கள் வாழ்வில் விடிவில் மாற்றம் இல்லை. ஆனால் மக்களின் நிலை இன்னும் மோசமாகித்தான் போனது.

எத்தனைத் தேர்தல் வந்தாலும், ஆட்சியாளர்கள் மாறினாலும் மக்கள் பிரச்சனைக்கு விடிவு இல்லை.


விடிவு எப்போது?.........?????


பிறகு வாக்களித்து என்ன பயன்?.

என்னங்க நாடு எல்லாமே பிராடு.............

தண்ணிக்கேட்டுப் போனாக்கா தண்ணிக்காட்டுறாங்கடா!
தண்ணி காய்ச்சும் பசங்களுக்கே சலாம் போடுறாங்கடா!

என்னங்க நாடு எல்லாமே பிராடு.............


ஓட்டிக் கேக்க வரும்போது கிழவிக்குத்தான் முத்தம்
கோட்டை ஏறி போனபின்னே குமரிக்குத்தான் முத்தம்

வாக்குப்பெட்டி வயித்துக்குத்தான் ஓட்டு சோறு கெடைக்குது
ஓட்ட்ப்போட்ட நம்ம வயிறோ ஒடுக்கு விழுந்து கெடக்குது.

இடைத்தேர்தல் வந்தாத்தான் ஏதோ கொஞ்சம் நடக்குது
ஜெயிச்சிப் போன எம்.எல்.ஏ செத்தாக்கா நல்லது.

என்னங்க நாடு? எல்லாமே பிராடு.............

திருடனுக்குத் திருடன் தானே தேர்தலிலே நிக்கிறான்
ஜெயிச்சி வந்தா தேசததையே கூறு போட்டு விக்கிறான்,
சட்டசபைக்குள்ளாற மட்டமான பேச்சுங்க,
குள்ளநரி கூட்டங்களின் குட்டு வெளியாச்சுங்க.

வரிகட்டா நடிகர்கள சரிக்கட்டும் ஆட்சி
வெக்கங்கெட்ட செய்திகள வெளியிட்டா போச்சு

என்னங்க நாடு? எல்லாமே பிராடு.............
கங்கைநீரை ஊத்திஊத்தி கும்பாபிசேகம் நடக்குது
தண்ணிதேடி சனங்களெல்லாம் மைலுகணக்கில் நடக்குது.

வீராணம் திட்டமெல்லாம் புஸ்வானம் ஆச்சு!
தெலுங்குகங்க திட்டத்திலும் மண் விழுந்துப்போச்சு!
எழப்பாழ எல்லோருக்கும் இலவசமா செருப்பு!
இனி ஓட்டுக் கேக்க வரும்போது அதனாலே இருக்கு!.

என்னங்க நாடு? எல்லாமே பிராடு.............

கவிஞர் கே.அறிவுமதி (1987 மே மனஓசை இதழில்)

Friday, March 17, 2006

வலைப்பதிவினர் அடிதடி!

எனது வலைப்பதிவில் தேர்தலைப் புறக்கணிப்போம் (பகுதி-1) என்ற எனது தலைப்பிலான செய்தியில் பின்வருமாறு ஒரு பின்னூட்டம் இருந்தது.

புதுச்சேரி இரா.சுகுமாறன் அவர்களே,

(மாறன் என்பதே சரி) உங்களின் எண்ணமும் வெளிப்படையான அலசலும் உண்மையிலேயே என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றது இந்த பேருலகில் என் ஜாதி மட்டுமே ஜாதி மீதி எல்லாம் பேதி என்று குதிக்கும் அந்த .......................... டோண்டு வலைப்பதிவில் பின்னூட்டியதால் என் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறீர்கள். இது முதல்முறை என்பதால் உங்களுக்கு எனது எச்சரிக்கை. இன்னொருமுறை அவனுக்கு பின்னூட்டினால் என்ன செய்வேன் என்பதை எனது வலைப்பதிவுக்கு வந்து என்பெயரிலான கமெண்டுகளை படித்துப் பார்க்கவும்.

இது உண்மையான போலிடோண்டுதான் பின்னூட்டினான் என்பதற்காக எனது வலைப்பதிவிலும் சேமிக்கிறேன்.

என்றவாறு என்வலைப்பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார்கள்.

ஒரு இணைய முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது.


“இது என்ன முன் சண்டை என்பதெல்லாம் எனக்கு விளங்கவில்லை. இருப்பினும் என்னை வைத்து இந்த சண்டை மீண்டும் தொடந்திருப்பதால் நான் பதில் சொல்லலாம் என நினைத்தால், அதன் தன்மை பதில் சொல்லும் நிலையில் இல்லை என்பதை என்னால் உணரமுடிந்தது.


இருப்பினும் நான் பதில் சொல்ல நினைத்த விசயம் தொடர்பாக சில சிறு குறிப்பை மட்டும் பதிவு செய்துவிட்டு செல்லலாம் என்றே நான் கருதுகிறேன்.

இணையத்தில் பிராமிணர், பிராமிணர் அல்லாதவர் சண்டை கருத்துப்பூர்வமானதாக இருக்க வேண்டும். வெறும் திட்டுதல் போன்றவற்றால் அதை சாதிக்கமுடியும் என்று நான் கருதவில்லை. எதிர்ப்பது பார்ப்பனர்களையா? பார்ப்பனியத்தையா? என்ற கேள்வி எழுகிறது. பிராமிணர்களாக இல்லாமலே பார்ப்பனியர்களாக (அக்கருத்தை நடைமுறை செய்பவர்களாக) பிற சாதி இந்துக்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி அந்த கருத்துக்கள் பதிந்துள்ளன.

எனவே, விவாதம் என்பது கருத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். தனிப்பட்ட தாக்குதல் இலக்கை அடையாமல் வேறு வழியில் திசை திருப்பவே பயன்படும்.

Monday, March 13, 2006

தேர்தலைப் புறக்கணிப்போம் (பகுதி-1)

வாக்களிப்பது உங்கள் கடமை,

கொள்ளை அடிப்பது எங்கள் உரிமை,

உங்கள் கடமையை நீங்கள் செய்யத்தவறினால் நீங்கள் பிணத்திற்குச் சமம், சனநாயக நாட்டில் கொள்ளை அடிப்பதற்கான அங்கீகாரமான வாக்கை நீங்கள் வழங்காவிட்டால் உங்களின் வாக்களிக்கும் அதிகாரம் பறிக்கப்படவேண்டும். அப்படி வாக்களிக்காதவர்கள் சனநாயக நாட்டில் வாழத்தகுதியற்றவர்கள், இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசின் சலுகைகள் பெற அவர்களை தகுதியற்றவர்கள் என அறிவிக்க வேண்டும், கட்டாய வாக்களிக்க சட்டத்திருத்தம் செய்யவேண்டும் என்றெல்லாம் பேசி இந்த போலி சனநாயகத்தை பாதுகாக்க முனைகிறார்கள் பலர்.

நிலையான ஊழலுக்கும், உத்தரவாதமான கொள்ளைக்கும் அங்கிகாரம் வழங்குவதற்குத் தான் வாக்களிக்க வேண்டியுள்ளது.


நல்லவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பினால் எல்லாம் சரியாகிவிடும். எனவே, நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறார்கள்.

மழைநீர் சுத்தமாகத்தான் பொழிகிறது, அது தெருக்களில் பெய்த பின் சாக்கடையில் கலந்து அது சாக்கடையாகவே மாறிவிடுகிறது.
"எத்தனை வாசனையுள்ள இனிப்பான பொருட்களை நாம் உண்டாலும் அது அது நாற்றமடிக்கும் மனிதக்கழிவாகவே வெளிவருகிறது".

அப்படித்தான் எத்தனை பெரிய உத்தமர்களையும் இந்த அரசியல் அமைப்பு ஊழல்வாதிகாளாக மாற்றிவிடுகிறது.

ஒருகாலத்தில் "மிஸ்டர் கீளின்" என்று அழைக்கப்பட்ட ராசீவ் காந்தி பிற்காலத்தில் மிகப்பெரிய பீரங்கி ஊழலில் பேசப்பட்டதை மறந்துவிட வேண்டாம்.

அரசியல் வாதிகள் மக்களின் நம்பிக்கையை, நன்மதிப்பை இழந்து நீண்ட நெடுங்காலமாயிற்று. கடந்தகால தேர்தல் முடிவுகள் அவற்றை நமக்கு உணர்த்துகிறது. வாக்களிப்பவர்களின் விகிதம் ஒவ்வொரு 10 ஆண்டுகளில் பின்வருமாறு குறைந்துவருகிறது. 1962, 67 தேர்தல்களில் சராசரி 73.62 சதவிகிதம், 80, 86, 89 களில் சராசரி 69.6 சதவிகிதம், 1991, 96, ஆண்டுகளில் 63 சதவிகிதம், 2001 ஆம் ஆண்டில் 59.07 சதவிகிதம், என குறைந்து வந்துள்ளதை காணலாம். அரசியல் வாதிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததைத்தான் இந்த விகிதம் நமக்குக் காட்டுகிறது.

வட இந்திய மாநிலம் ஒன்றில் "சக்திமான்" நாடகத்தொடரைப் பார்த்த சிறுவன் அதனை உண்மைச் சம்பம்பவம் என நம்பிக் கொண்டிருந்தான். ஒருநாள் தான் குடியிருந்த 5-வது மாடியிலிருந்து சக்திமான் என்னைக்காப்பாற்று என்று கூறி கீழே குதித்தான். தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அவனைக்காப்பாற்ற அங்கே சக்திமான் வரவில்லை. அதைப் போலத்தான் இந்த "தேர்தல் நாடகத்தை" பார்த்து இது உண்மை என்று நம்பி தேர்தலில் வாக்களித்து தற்கொலைக்கு ஒப்பாக பலர் நடந்து கொள்கிறார்கள்.


இங்கு வாக்களிப்பவர்களைப்பற்றி சற்று பார்க்காலாம். நகர்ப்புறங்களின் வாக்கு விகிதம் கிராமப்புறங்களைவிட எப்போதும் குறைந்தே காணப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மக்கள் கல்வி அறிவு , அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் வாக்களிப்பவர்களாக உள்ளனர். இந்த சனநாயகம் தழைத்து ஓங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு வாக்குப்பதிவுகள் அனைத்தும் நடைபெறுவதில்லை. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் வழங்கும் ரூ 50, 100, க்கும், சில மது பானங்களுக் காகவும் வாக்களிப்பவர்களும் இதில் அடங்குவார்கள்.

அது போகட்டும் நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் உறுப்பினர்களுக்கு என்ன உரிமைகள் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? நரசிம்மராவ் நாடாளு மன்றத்திற்குத் தெரியாமல் ?காட்? ஒப்பந்ததில் கையப்பமிட்டார். பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்காக?. காட் ஒப்பந்தத்தில் யாரைக்கேட்டு கையெழுத்துப்போட்டார். இந்த பாராளுமன்றம் எதற்காக?.

இப்போது மன்மோகன் சிங் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையப்பம் இட்டாரே! அந்த ஒப்பந்ததில் என்ன இருக்கிறது என்று மக்களிடம் தெரிவித்தாரா? இந்திய அணு ஆய்வுகளை அமெரிக்கா சோதனையிட வழிவகுக்கும் இரகசிய ஒப்பந்தம் மன்மோகன் அரசால் சென்ற ஆண்டு கையப்பம் இடப்பட்டது. அதன் விவரங்களை வெளியிடுமாறு அதன் ஆட்சிக்கு ஆதரவு தரும் பொதுவுடமைக் கட்சிகள் பலமுறை கேட்டாலும் அவை அவர்களுக்காவது கொடுக்கப்பட்டதா? பாராளுமன்றத்தில் உறுப்பினர்களிடம் இவை விவாதிக்கப்படுவது இல்லை. நீங்கள் அனுப்பும் உறுப்பினர்களை ஆட்சியாளர்கள் ஒருபொறுட்டாகவே எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. எதையுமே விவாதிக்காமல் அமெரிக்க சேவை செய்யும் அமைப்பாகவே இந்திய அரசு மாறிப்போயுள்ளது.


தேசபக்தி என்று அரசியல் வாதிகள் சொல்வதை மக்கள் எப்போதும் இந்திய தேசபக்தி என தவறாகவே புரிந்து கொள்கிறார்கள். அது உண்மையில் அமெரிக்க தேசபக்திதான்.


அன்று வெள்ளையன் வியாபாரத்திற்கு வந்தான். பின்னர் ஆட்சி அவர்களிடம் சென்றது . இன்று, இப்போது ஆட்சி நம்மிடம் உள்ளது. ஆனால் நமது பட்ஜெட்டை அமெரிக்க எடுபிடிகளான உலகவங்கியும், சர்வதேச செலாவணி நிதியமும் போடுகிறது. பட்ஜெட் போடும் பேனா நமது ஆட்சியாளர்கள் கையில், ஆனால் அமெரிக்காதான் இவர்கள் கையைப்பிடித்து எழுதுகிறது. நீங்கள் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பினாலும் என்ன பயன்?. எதையும் விவாதிக்காமல் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டிற்கு இந்தியாவை எலம் விடுகிறார்கள் ஆட்சியாளர்கள்.


ஈரான் எரிவாயுத்திட்டத்தை அமெரிக்காவின் கட்டளைப்படி கைவிட்டது இந்திய அரசு. அத்திட்டத்தினை முனைப்புடன் செயல்படுத்த முனைந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் மணி சங்கர் அய்யர் அப்பொறுப்பிலிருந்து அமெரிக்க கட்டளைப்படி தூக்கி எறியப்பட்டார். இது தான் இவர்களின் தேசபக்தி.


மத்திய அரசின் நிலைதான் இப்படி என்றால் மத்திய அரசின் கைக்கூலிகளாகவே மாநில அரசுகள் செயல்படுகின்றன. இந்த அதிகாரமில்லாத ஆட்சியை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்படி நடந்தாலும் எத்தனை முறை மக்கள் திரும்ப திரும்ப வாக்களிப்பது ஏன்?


"மனிதன் தண்ணீரின் குணத்தை ஒத்தவனாக இருக்கிறான்." "எத்தனைமுறை சூடேற்றினாலும் அவன் குளிந்து போகிறான்".

"எவ்வளவு உயரமான மலையின் உச்சியில் அவனை வைத்தாலும் அவன் பள்ளத்தை நோக்கியே பாய்ந்தோடிவருகிறான்".

அப்படியேதான்!

"அவன் எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் மறந்து போகிறான்". "அந்த மறதிதான் இந்த தேர்தல் கொள்ளையர்களுக்கு சாதகமாகிப் போகிறது".

அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

தேர்தலைப் புறக்கணிப்போம்!!

தேர்தலைப் புறக்கணிப்பு இதற்கு தீர்வாகுமா?

தேர்தலைப் புறக்கணித்தால் தீயவர்கள் ஆட்சிக்கு வ்ந்துவிடமாட்டார்களா?

இதற்கெல்லாம் பதில்?..........?........?

தொடரும்.....

Wednesday, March 08, 2006

வைகோ அன்றும் இன்றும்

வைகோ அன்று

“பாசிச செயலலிதா அரசை மக்கள் சக்தியைக்கொண்டு தூக்கியெறியும் வரையில் ஓயமாட்டான் இந்த வைகோ..“ (தாம் கைது செய்யப்பட்ட போது 11-07-2002)

வைகோ இன்று

“செயலலிதாவை ஆட்சியில் அமர்த்துவது தான் இன்றைய கொள்கை“ பெரும்பான்மை இல்லை என்றாலும், இவர் ஆட்சியில் பங்கு கேட்கமாட்டார். தமிழகத்தை முற்றாக செயலலிதா மட்டுமே மக்களை மொட்டை அடிக்க வேண்டும், இது தான் இவரது இன்றைய கொள்கை.

வைகோ அன்று

“தர்மபுரியில் பேருந்துகள் அ. தி.மு.க வினரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு மூன்று கல்லூரி மாணவிகள் துள்ளத்துடிக்க இறந்து போனார்கள். அப்படிப்பட்ட வன்முறைகளில் ம.தி.மு.க தொண்டர்கள் ஈடுபடமாட்டார்கள் அமைதியான முறையில் செயலலிதா அரசுக்கு எதிர்த்து போராடுவார்கள்“. (தாம் கைது செய்யப்பட்ட போது 11-07-2002)

வைகோ இன்று

அந்த செய்தி மறந்து போச்சி! தீயிட்டுக் கொளுத்தப்பட்டு மூன்று கல்லூரி மாணவிகள் துள்ளத்துடிக்க இறந்து போனதைப்பற்றி இப்போது பேசமாட்டார். (தேர்தல் முடிந்த பின் செயலலிதா அவமானப்படுத்திய பின் பேசுவாரோ என்ன்வோ!)

வைகோ அன்று

“எத்தனைக் கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் வழங்க முடியாத விளம்பரத்தை தம் கட்சிக்கு செயலலிதா வழங்கியிருப்பதாக அன்று ஆனந்தபட்டார்கள்“ இந்த ஆனந்தம் எல்லாம் தாம் பா.ஜ.க கூட்டணியில் உள்ளதால் அவர்கள் நிச்சயம் காப்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையால் தான். ஆனால் அது இயலாமல் போனது, அப்போது தான் அவர்கள் உணர்ந்தார்கள்.பொடாவை ஆதரித்தது தவறு என்று.

வைகோ இன்று

ஆனால் பின்னர் தாம் பொடாவை ஆதரிக்கவில்லை, என்று பேசிவருகிறார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி 2002 வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்ட பின்
மதுரையிலிருந்து அழைத்துவரப்பட்ட வைகோ பகல் 2-55 மணிக்கு வேலூர் மத்திய சிறை வாசலில் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், “பொடாவையும் ஆதரிக்கிறேன்......“ “விடுதலைப்புலிகளையும் ஆதரிக்கிறேன்“ என்று சொல்லி விட்டுத்தான் சிறைக்கு சென்றார். இதை ஜீனியர் விகடன் பதிவு செய்துள்ளது. (ஜீனியர் விகடன் 17-07-2002 பக்கம் 34)

செயலலிதா அன்று

தேவைப்பட்டால் ம.தி.மு.க-வையே தடை செய்வோம். அந்தக் கட்சியின் இரண்டு மத்திய அமைச்சர்களையும் கூட பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யத் தயங்கமாட்டோம்.“ என்றார்.

செயலலிதா இன்று

“அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை.பழைய விசயங்களை திரும்பிபார்த்து அதையே நினைத்துக் கொண்டிருப்பதில் நம்பிக்கை இல்லை“.

செயலலிதா இப்படி நினைத்துத்தான் இதனை சொல்லியிருப்பார். பழைய விசயங்களை நினைவு படுத்தினால் கூட்டணியிலிருந்து போய்விடுவார் என்று நம்பிக்கை இல்லை.எனெனில் நாங்கள் கவனிக்க வேண்டியவர்களுக்கு முறையாக கவனித்து விட்டோம்.

Monday, March 06, 2006

வைகோ வேட்டி இல்லாமல் நின்றுகொண்டிருக்கிறார்

04-03-2006
அன்று காலையில் அண்ணாவிற்கு மாலை அணிவித்து விட்டு செயலலிதாவை பார்க்க சென்றார் வைகோ.

பதவி எங்களுக்கு துண்டுபோல – அது

பறந்து போனாலும் கவலையில்ல,

கொள்கை எங்களுக்கு வேட்டிப்போல - அது

போனால் எங்கள் மானம் போல!


என்று அண்ணா சொன்னார். அண்ணா சொன்னபடிப் பார்த்தால் தம்பி இன்று வேட்டி இல்லாமல் நின்று கொண்டிருக்கிறார். மேடைகள் தோரும் அண்ணா வழிவந்தவன் என்று பேசும் வைகோ."மானம்" "சுயமரியாதை" இவைதாம் தம் கொள்கைகள் என பொதுக் கூட்டங்களில் முழங்கினார். ஆனால் அவற்றை மொத்த விலைக்கு இப்போது விற்றிருக்கிறார்.

தமிழக அரசியல் வாதிகள், தமிழ் மக்களைப் போன்றே "சூடு சொரணை யற்றவர்கள்" "எட்டி உதைத்தாலும் எலும்பை வீசினால் வாலைக் குழைத்து வரும் நாய்களைப் போன்றவர்கள்" இவர்கள் என்பதை அறிந்தே தான் செயலலிதா எவ்வளவு கேவலமாக இவர்கள் அனைவரையும் நடத்தினாலும் கடைசி நேரத்தில் பெட்டிக்குள் அடக்கிவிடுகிறார். தன்னுடைய புலி ஆதரவு கொள்கைக்காகத் தான் வைகோ சிறையிலடைக்கப்பட்டார்.

தாம் கைது செய்யப்பட்டபோது "செயலலிதா ஆட்சி ஒழிக" "கொடுங்கோலாட்சி" என்றெல்லாம் விமர்சித்தார். ஆனால் எதிரியுடன் கூட்டணி சேர்ந்தது ஏன் எனக்கேள்வி எழுகிறது. கூட்டணியில் கொள்கை இல்லை அதனால் தான் இந்த சீட்டுக் கம்பெனியில் சேர்ந்தேன் எனபது போல் வைகோ அறிவித்துள்ளார். இனிமேல் தன்மானம் சுயமரியாதை எல்லாம் வீண்பேச்சுக்கள் தான் என்பதை அனைவரும் உணரவேண்டும்.


அதனால் தான் "அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை. பழைய விசயங்களை திரும்பிபார்த்து அதையே நினைத்துக் கொண்டிருப்பதில் நம்பிக்கை இல்லை" என்று செயலலிதா கூறி இருக்கிறார்.

பதிலுக்கு "பொடா சட்டத்தை கொண்டுவந்தது பா.ஜ.க. தலைமையிலான தேசிய சனநாயக கட்சி அரசு, அதை செயலலிதா நடைமுறை மட்டுமே செய்தார்".என்று செயலலிதா தம்மை கைது செய்ததற்கு சமாதானம் சொல்கிறார் வைகோ.

தி.மு.க. பொதுக்குழுவில் ம.தி.மு.க வை மரியாதைக் குறைவாக பேசியது தொண்டர்கள் மனதைக் காயப்படுத்திவிட்டது. விலகியதற்கு அதுவும் ஒரு காரணம் என்று விளக்கம் அளித்துள்ளார். அப்படி “மானம்" “மரியாதை"ப் பற்றிப் பேசும் வைகோ தம்மைக் கைது செய்த அ.தி.மு.க உடன் மானம் இழந்த முறையில் தான் தஞ்சமடைந்துள்ளார். 25 சீட்டுக்கள் கொடுக்காததால் தான் நான் கூட்டணியை விட்டு விலக நேர்ந்தது என விளக்கம் அளித்தாலும் ம.தி.மு.க வின் பிற தலைவர்களுக்கு முறையாக சேரவேண்டியவை சேர்ந்துள்ளதாகவே கூறப்படுகிது. அதனால் தான் அவர்கள் இத்தனை கொள்கைப் பிடிப்புடன் இருந்துள்ளார்கள்.

எப்போதும் மிகப்பெரிய கொள்கை வித்தியாசம் உள்ளது போல் காட்டிக்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கு மானம் மரியாதை என்பது எதுவுமே எங்களுக்கு இல்லை, அவ்வப்போது எதையாவது பேசுவது தான் எங்களுக்கு கொள்கை மக்களே விழித்துக் கொள்ளுங்கள் என்பதைதான் இந்த நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகிறது.