Tuesday, October 31, 2006

பெயர் மாற்றம் : புதுச்சேரி அரசு மெத்தனம்

பாண்டிச்சேரி என்பதை "புதுச்சேரி" என்று மாற்ற வேண்டும் என்பது புதுவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கை கடந்த 1-10-2006 அன்று நிறைவேறியது.

மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

ஆனால், இந்த உத்தரவு குறித்து புதுவை அரசு ஒரு அலட்சிய போக்கோடு நடந்து கொள்கிறது.

புதுச்சேரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று செய்தித்தாளில் ஒரு விளம்பரம் செய்ததோடு முடித்துக்கொண்டது. பெயர் மாற்றம் செய்ததை விழா எதுவும் எடுத்து புதுவை அரசு அறிவிக்கவில்லை.

பல்வேறு விழாக்களை கொண்டாடிவரும் புதுவை அரசு இதற்கு விழா எடுப்பதில் எவ்வித அக்கரையும் காட்டவில்லை. பொதுவாக எந்த மாநிலத்திலும் இவ்வாறு விழா எடுக்காமல் பெயர் மாற்றம் செய்வதில்லை.

ஆனால், புதுவையில் உள்ள அரசியல் வாதிகள் இதைப் பற்றி கண்டு கொள்வதாகவும் தெரியவில்லை. ஏனெனில் புதுவை அரசியல் கட்சிகளுக்கு செல்ல வேண்டிய கமிசன் தொகை சரியாக அவர்கள் அவர்களுக்கு சென்று விடுகிறது. மற்ற மாநிலங்களைப் போல் அல்லாது ஆளும் கட்சி எதிர் கட்சி என்று பாராமல் தொகை சரியாக போய் சேர்ந்து விடும். இதுதான் புதுவையின் மற்றொறு சிறப்பு.

இவ்வாறு விழா எடுக்காமல் இருந்தமைக்கு வேறு காரணமும் சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த கோரிக்கையை புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மு. இராமதாசு தொடர்ச்சியாக இப்பெயர் மாற்றத்திற்கு பாடுபட்டவர் என்பது புதுவை மக்கள் அறிந்த உண்மை. இவர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த உறுப்பினர் என்பதால் காங்கிரசு அரசு அதனை காரணமாக வைத்து விழா எடுக்கவில்லை என்றும் சொல்லப் படுகிறது.

புதுச்சேரி எனப் பெயர் மாற்றம் செய்து ஒரு மாதம் ஆகியும் புதுவைத் தலைமை செயலகத்தில் இன்னும் "பாண்டிச்சேரி" என்றே உள்ளது. அரசின் வாகனங்கள் பலவற்றில் "பாண்டிச்சேரி அரசு" என்றே உள்ளது. புதுவைக்கு வரும் பேரூந்துகளில் இன்னும் பாண்டிச்சேரி என்றே அனைத்தும் எவ்வித மாற்றமும் நிகழாமலே உள்ளது. புதுவைத் தொடர்வண்டி நிலையத்தில் இன்னும் பாண்டிச்சேரி என்றே உள்ளது.

இந்நிலையில் புதுவையில் சில அமைப்புகள் அரசு அலுவலகம் மற்றும் பேரூந்துகளில் பாண்டிச்சேரி என்பதை மாற்றி புதுச்சேரி என்பதற்காக பெயர் மாற்று, பெயர் அழிப்புப் போராட்டம நடத்த இருப்பதாக செந்தமிழர் இயக்கத்தின் தலைவர் ந.மு. தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

மேலும், புதுச்சேரிக்கான ஆங்கில எழுத்து "PUDUCHERRY" என்பது புடுச்சேரி என்று உச்சரிப்பில் உள்ளது, அதனை "PUDHUCHERRY" H சேர்க்கவேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் சில அரசு வாகனங்களில் "PUDUCHERRY" என்றே எழுதப்பட்டுள்ளது.

அதே போல் புதுவை விடுதலை நாளையும் புதுவை அரசு கொண்டாடவில்லை.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவால் பிரஞ்சு அரசின் சிறப்புத்தூதர் பியர் லேந்தி மற்றும் பிரென்சு இந்தியாவுக்கான இந்திய கான்சல் ஜெனரல் கேவல் சிங் ஆகியோருக்கும் இடையே 1-11-1954 ஆண்டு ஆளுனர் மாளிகையில் காலை 6.45 மணிக்கு பேச்சு வார்த்தையின் அடிபடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடிப்படையில் தான் புதுச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனை விழாவாக கொண்டாடவேண்டும் என்று புதுவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்ததன் விளைவாக 2004 ஆண்டு மட்டும் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம அவர்களை வைத்து விடுதலைப் பொன்விழா நடத்தினார்கள். அதன் பின் விழா எதுவும் புதுவை அரசு எடுக்கவில்லை. இவ்வாண்டும் அத்தகைய கோரிக்கையை பலர் வைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே அது போனது.

ஆனால், இந்திய அரசும், பிரெஞ்சு அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இரு நாட்டு நாடாளுமன்றமும் அறிவித்த 16-08-1962 ஆண்டு அறிவித்ததை மட்டும் புதுவை அரசு விடுதலை நாளாகக் கடைபிடித்து வருகிறது.