Tuesday, March 06, 2007

தமிழக மீனவர்கள் படுகொலை: கண்டனப் பொதுக்கூட்டம்

புதுச்சேரியில் வரும் 08-03-2007 அன்று மாலை 5.00 மணியளவில் சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெறுகிறது.

தோழர் தியாகு சிறப்புரையாற்றுகிறார்.
தோழர் லோகு அய்யப்பன் தலைமை வகிக்கிறார்.

------------------------------------

ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்க சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ உதவியா?

இலங்கைக் கடற்படை இந்தியக் கடற்பரப்புக்குள் மீன்பிடித் தொழில் செய்து வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுப் படுகொலை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது, தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சிகள் இதனைக் கண்டித்தும் தமிழக மீனவர்களின் மீதான இத்தாக்குதல் நின்றபாடில்லை. அண்மையில் கடந்த 15 நாட்களுக்கு முன் மீண்டும் சிங்கள இனவெறிக் கடற்படை தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய அரசு, கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது.

14.02.2007: நாகப்பட்டிணம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறிமுதல் செய்துள்ளது, துப்பாக்கிச் சூட்டில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்து பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

16.02.2007: புதுக்கோட்டை அருகே அய்யம்பட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்களைச் சுற்றி வளைத்த சிங்கள கடற்படை மீனவர்களை கடுமையாகத் தாக்கியதோடு அவர்களின் வலைகள், படகுகளைச் சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

24.02.2007: இராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படைச் சுட்டதில் அருள்தாசு என்பவர் பலத்த காயமடைந்துள்ளார், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திற்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. மேலும், அப்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட படகுகளைச் சுட்டுத் துரத்தியுள்ளனர்.

26.02.2007: நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர் நள்ளிரவு 2.00 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போது சிங்களக் கடற்படைச் சுற்றி வளைத்துச் சுட்டுள்ளனர். இதில் மீனவர்கள் கலியபெருமாள், அஜீசுகுமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலியபெருமாள் சிகிச்சைப் பலன் அளிக்காமல் இறந்துபோனார்.


இவை தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குச் சில சான்றுகள். இதுதவிர, அன்றாடம் மீனவர்கள் சிங்களக் கடற்படையின் தாக்குதலைச் சந்தித்து வருகின்றனர். கடலையே நம்பி வாழும் மீனவர்கள் உயிர் அச்சத்துடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி இந்திய அரசும், தமிழக அரசும் கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

காவிரி நதிநீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், பாலாறு அணைக்கட்டும் விவகாரம் என அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு மத்திய
அரசு துணைபுரிந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதிலும். தமிழக மீனவர்களைக் காப்பதிலும் இந்திய அரசு தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது.

பாகிஸ்தான் எல்லையில் ஒரு சிறு சலசலப்பு ஏற்பட்டால் கூட உடனடியாக நடவடிக்கையில் இறங்கி திரும்பித் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது இந்திய இராணுவம். ஆனால், அண்டை நாடான இலங்கைக் கடற்படை அத்துமீறி இந்தியக் கடலுக்குள் நுழைந்து தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றும் இந்திய கடற்படை அமைதியாக இருப்பது ஏன்? தமிழர்களின் நலன் மீது இந்திய அரசுக்கு உள்ள அக்கறை இவ்வளவுதானா? இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி தமிழினத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.


தமிழகத்தின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களைக் காப்பதற்குப் பதிலாக, இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்கியுள்ளது இந்திய அரசு. அண்மையில்கூட இலங்கைக்குக் கடலோர காவல்படைக்குத் தேவையான கப்பல்களை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள இராணுவத்திற்கு உதவி. தமிழக மீனவர்களைக் கொல்ல சிங்கள கடற்படைக்கு உதவி. இந்திய அரசின் மனதநேயம் இதுதானா?

ஈழத் தமிழர்கள் - தமிழகத் தமிழர்கள் உரிமைகளைக் காக்கவும், தமிழர்களின் குரல் தில்லி செங்கோட்டைச் சுவர்களைத் தாண்டி, மத்திய ஆட்சியாளர்களுக்கு எட்டவும் இந்தக் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

4 comments:

இரா.முருகப்பன் said...

தகவலுக்கு நன்றி

புதுவை இந்த மாதிரியான விசயங்களில் எப்போதுமே முன்னணியாக உள்ளது தொடர்பாக நன்றி

ஈழப்பிரச்சனையை இந்தியா கண்டும் காணாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது

Anonymous said...

சார்! இந்தியக் கடற்படை வங்கக் கடலில் என்ன செய்கின்றார்கள்? புலிகளைப் பிடிக்கத் தெரிகிறதே தவிர அப்பாவி மீனவர்களை காப்பாற்றத் தெரியவில்லை.
இது கவலையை மட்டுமல்ல, வெட்கத்தை உருவாக்குகின்றது. இது இந்தியக் கடற்படையின் இயலாமையைக் காட்டுகின்றதா இல்லை அலட்சியத்தைக் காட்டுகின்றதா?

புள்ளிராஜா

Anonymous said...

சார்! இந்தியக் கடற்படை வங்கக் கடலில் என்ன செய்கின்றார்கள்? புலிகளைப் பிடிக்கத் தெரிகிறதே தவிர அப்பாவி மீனவர்களை காப்பாற்றத் தெரியவில்லை.
இது கவலையை மட்டுமல்ல, வெட்கத்தை உருவாக்குகின்றது. இது இந்தியக் கடற்படையின் இயலாமையைக் காட்டுகின்றதா இல்லை அலட்சியத்தைக் காட்டுகின்றதா?

புள்ளிராஜா

Omni said...

Hello from the USA!! :-)