Monday, January 23, 2006

மறைவாக நமக்குள்ளே

மூடநம்பிக்கைகள் குறித்து
(வானொலியில் ஒலிபரப்பான என் கவிதைத் தொகுப்பிலிருந்து)

மறைவாக நமக்குள்ளே பேசிவரும் பழங்கதைகள்!
புரையோடி இருக்கின்ற சமுதாயப்பேதமைகள்!
அணியாக நமக்கெல்லாம் ஆறறிவு இருந்தாலும்,
பிணியாக அறியாமை பின்தொடரும் நிலைதானே!
அறிவான செய்தியெல்லாம் ஆயிரங்கள் நிறைந்திருக்க!
அறிவற்ற பழங்கதையின் ஆதிக்கம் அழிப்பதற்கு!
தெளிவான அறிவாலே காரணத்தை சிந்தித்தல்!
இனியெனும் நமக்கெல்லாம் இனிதான முடிவாகும்.

விண்ணுலகில் சுற்றுகின்ற நிலவின் மேலே
விடியாமல் ஒருபக்கம் இருட்டாய் உண்டு!
மறுபக்கம் நிறைவான ஒளியைப் பெற்று
மறைந்திருக்கும் இருட்டுக்கு விளக்கம் சொல்லும்!
அதைப்போல அறிவான உலகத்தின் மேல்
அறியாமை இருட்டேதான் நிறைய உண்டு.!
விரைவாக வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின்
விளைவாக புதுமைகளை காண்போம் என்றும்.

விண்ணுலகில் இருக்கின்ற கிரகமெல்லாம்
விதியாக நம்வாழ்வை தடுக்கும் என்போர்
கண்ணெதிரே உலகத்தை மறந்து விட்டு
காணாத கற்பனையில் பறகின்றார்கள்
மின்னுகின்ற வின்மீன்கள் இவர்கள் வாழ்வில்
விளைவித்த பாதிப்பை எங்கே கண்டார்.
வீணான விளக்கங்கள் வேண்டாங்கே
விரிவான அறிவான விளக்கம் தேவை.

நல்லவர்கள் தம் அறிவால் சிந்திதிட்ட
நல்லறிவைக் கேட்காமல் சுவரின் ஓரம்
பல்லிசொல்லும் பலன்கேட்டு முடிவைச்செய்யும்
பரிதாப அறிவு பெற்ற மனிதரெல்லாம்
வில்லாக வளைந்திருக் கும்வானத் தின்கீழ்
வீணான வாழ்வினைத்தான் நடத்துகின்றார்
செல்லரித்த கொள்கையெல்லாம் உண்மைவாழ்வில்
செல்லாத காசாக ஆகிப்போகும்.

சோதிடமாம் சாதகமாம் கேட்ப்போர்க் கெல்லாம்
சாதகமாய் பொய் சொல்லி ஏய்ப்போர் பேச்சை
பேதமையால் அதை நம்பி காரியத்தை
பெரிதாக தொடங்குகின்ற அறியாமையால்,
காற்றடிக்கும் திசைநோக்கி பறக்குமிந்த
காற்றாடி போல் மன்தன் போலியாவான்.
மண்ணுலகில் இருக்கின்ற மதியீனங்கள்
மறைவதற்கு அறிவோடு சிந்திப்போமே!

உலகத்தில் வாழ்கின்ற உயிர்கட்க்கெல்லாம்
உயிர்விட்டு பிரிந்தபின் உயிர்கட்கெல்லாம்
சொர்க்கமென நரகமென விளக்கும் பேச்சு
வீணான கற்பனையும் கதையும் ஆகும்
புரியாத ஒன்றினையே புரிந்ததாக
புதுவிளக்கம் கொடுத்துவிட்டு ஏய்ப்போரிங்கே
இல்லாத ஒன்றினையும் இருக்குமென்றால்
இடித்துரைத்து திருத்துவதும் கடமையன்றோ!

No comments: