Friday, December 17, 2010

புதுச்சேரியில் குறும்படம், ஆவணப்பட பயிற்சி பயிலரங்கு டிசம்பர் 26 முதல் 31 வரை

நிழல் - பதியம் - நண்பர்கள் தோட்டம்
இணைந்து நடத்தும்
குறும்படம்/ஆவணப்படப் பயிற்சிப் பயிலரங்கு

பயிற்சி நாள்கள்  26.12.2010 முதல் 31.12.2010 வரை,
நேரம்:: காலை 9.00 மணி முதல் இரவு 7.30 வரை, 
இடம் : எஸ்.ஆர். திருமண நிலையம்,
259, திருவள்ளுவர் சாலை,   புதுச்சேரி-13 (மணிமேகலை பள்ளி அருகில்)

பயிற்சிக் கட்டணம் : ரூபாய்: 2000 மட்டும்.,
மாணவர்களுக்கு ரூபாய் 1500 மட்டும்,
மகளிருக்கு ரூபாய் 1000 மட்டும்.

காலை, மதியம், இரவு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேநீர்; காலை 11.00,க்கும் மாலை 4.30 சிற்றுண்டியுடன் தேநீரும் வழங்கப்படும்.

இரவு உணவுக்குப் பின் சிறந்த குறும்படங்கள் மற்றும் உலகப்புகழ் பெற்ற திரைப்படங்கள் காட்டப்படும்.


தமிழகத்தை சேர்ந்த தேர்ந்த திரைப்படத்துறையினர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள்.

பயிற்சி அளிக்கப்படும் பிரிவுகள்
  1. குறும்பட-ஆவணப்பட வரலாறு மற்றும் கோட்பாடு :  நிழல் ஆசிரியர் ப.திருநாவுக்கரசு
  2. நடிப்புக் கலை : சுரேஷ் வரன் கூத்துப்பட்டறை
  3. நடிப்பின் இலக்கணம் : தம்பிச்சோழன் கூத்துப்பட்டறை
  4. ஒளிப்பதிவு : சி.ஜெ ரமேஷ்குமார் ஒலிப்பதிவாளர் 
  5. திரைக்கதை எழுதுதல் : பாலு மணிவண்ணன் - இணை இயக்குனர்
  6. நிழற்படம் எடுத்தல் & ஒளி ஒழுங்கமைவு:  பாரதி வாசன் - தமிழ்நாடு குறும்பட ஆவனப்பட படைப்பாளிகள் சங்க செயலாளர்
  7. படத்தொகுப்பு :
பயிற்சியின் சிறப்பு

தகுதிறன் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களால் நடத்தப்பெறவுள்ள இப்பயிற்சியின் மூலம் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களைத் தாங்களாகவே திரைக்கதை அமைத்து, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்து, இயக்கித் தயாரிக்கும் அளவுக்குப் பயிற்சி பெறுவோர் திறன்படுத்தப்பெறுவர் என்பதே இப்பயிற்சியின் சிறப்பாகும்.

தனியுடைமையாளர்கள் ஊடகங்களை விழுங்கிவரும், இந்த நேரத்தில் மாற்றுத்திரைக்கான அவசியம் ஏற்பட்டுள்ளதால் நண்பர்கள் தோட்டம் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எனவே, நண்பர்கள் இயன்ற அளவு இப்பயிற்சியில் கலந்து கொண்டும், மாணவர்கள் மற்றும் நண்பர்களைப் பங்குபெறச் செய்தும் ஒரு புதிய மாற்றுத்திரைக் கலைஞர்களை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
ப. திருநாவுக்கரசு
தொடர்பு எண்: 99944 55959

Monday, December 13, 2010

மத்திய அரசா? மலையாளிகள் அரசா?

‘‘ஆ.ராசா மீது வந்த புகார்களுக்கு பதிலளிக்காமல் ஒன்றரை வருடமாக மௌனம் காத்தது ஏன்?’’

‘‘மத்திய ஊழல் கண்காணிப்புத் துறைக்கு ஊழல் குற்றம் சாட்டப்-பட்ட தாமஸையே ஆணையர் ஆக்கியிருப்பது என்ன நியாயம்?’’

-இப்படி அடுத்தடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கின் டர்பனை உருவி தலையில் குட்டிக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

கோர்ட் இப்படியென்றால்... திரும்பிய திசையெல்லாம் ஊழல் வழியும் ஆட்சி என ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட... ஆடிப்போயிருக்கிறார் மன்மோகன் சிங்.

‘‘இப்படியொரு பதவியில் இருப்பதை விட, கவுரவமாக விலகி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் அவர் எந்த நேரமும் ராஜினாமா செய்யலாம்’’ என்கின்றன பிரதமர் அலுவலக வட்டாரத்தினர்.

மேலும் அவர்கள், ‘‘மத்திய நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவி மீது வெகுநாட்களாக மோகம் உண்டு. அதேநேரம் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் பிரதமர் பதவியை எதிர்பார்த்து சோனியாவின் சிபாரிசுக்காக காத்திருக்கிறார்.

பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவி என்பது 2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே பேசப்பட்ட விஷயம். காங்கிரஸின் மூத்த தலைவரான அவருக்கு பிரதமர் பதவி என பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், ஏ.கே. அந்தோணி பிரதமர் பதவிக்கு ஆசைப்பட ஒரே காரணம், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல... மத்திய அரசிலும், சோனியாவைச் சுற்றியிருக்கும் அத்தனை பேரும் மலையாளிகள் என்பதால்தான்’’ என்கின்றனர்.

டெல்லியில் நிலவும் மலையாளிகள் ராஜ்யம் பற்றி தலைநகர பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சோனியா காந்திக்கு உதவியாளராக இருக்கும் ஜார்ஜ் கேரளத்துக்காரர். இவர்தான் தன் மாநிலப் பாசத்தில் அரசியல் அதிகாரத்தில் இருந்து நிர்வாக அதிகாரம் வரை அத்தனை இடங்களிலும் மலையாளிகளை நுழைத்து வருகிறார்...’’ என்று கொஞ்சம் எரிச்சலாகவே கருத்துக்களைக் கொட்டினார்கள்.

‘‘நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ், உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது ஆகிய ஐந்து அமைச்சர்கள் இப்போது இருக்கிறார்கள். வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!

அமைச்சரவையில்தான் இப்படி மலையாளிகளுக்கு அதீத முக்கியத்துவம் என்றால், முக்கியத் துறைகள் அனைத்-திலும் உயர்பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் யாவரும் மலையாளிகள்தான்.

மத்திய அரசில் மொத்தம் 40 முக்கியத் துறைகள் இருக்கின்றன. இதில் முக்கியமான 20 துறைகளுக்கும் அதிகமான துறைகளுக்குப் பொறுப்பு வகிப்பவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான்’’ என்றவர்கள், அந்த மலையாள அதிகாரிகளின் பெயர்களை கடகடவென வாசித்தனர். (பார்க்க பெட்டியில்)

பட்டியலை முடித்துவிட்டு தொடந்தவர்கள்...

‘‘இந்தியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த மலையாளிகளுக்குத்தான். மத்திய அமைச்சரவை, மத்திய அரசு மட்டுமல்ல... இரண்டையும் ஆட்டி வைக்கும் சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான்.

சோனியாவின் டிரைவர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், மார்க்கெட்டுக்கு போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக டெல்லி போலீஸார் அறுபது பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்’’ என்று முடித்தனர் அவர்கள்.

மேலும் ‘‘இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் அரக்கத் தனங்களுக்கு ஒருவிதத்தில் மலையாள அதிகாரிகளும் காரணம். சிவசங்கர்மேனன், எம்.கே.நாராயணன், ஜி.கே.பிள்ளை, நிருபமா ராவ் ஆகிய கேரள அதிகாரிகள் தங்களின் தமிழர் எதிர்ப்பு உணர்வை மத்திய அரசோடு இணைந்து ஈழத் தமிழர் பிரச்னையில் காட்டி வருகின்றனர்’’ என்கிறார்கள்.

இது தொடர்பாக காங்கிரஸ் மேல்மட்டத் தலைவர்களிடம் விசாரித்தால், ‘‘நிர்வாகப் பொறுப்புகளில் இப்போது மலையாளிகள் ஆதிக்கம் இருப்பது நிஜம்தான். அதற்காக இன ரீதியிலான சாயம் பூச வேண்டியதில்லை’’ என்றார்கள்.

கேரள அதிகாரிகள் பட்டியல்...

‘‘என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர், வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர், டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர், என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர், பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர், கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர், ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர், மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர், நிருபமா ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர், சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர், ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர், சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர், கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர், பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர், சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர், வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர், ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர், கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர், கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர், ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர், வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர், பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர், ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம், சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர், ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்... இப்படி நீளுகிறது பட்டியல்.

Saturday, November 13, 2010

ஈழத் தமிழர்களைக் கடிக்கும் நாயாக விளங்குகிறார் சோனியா-தங்கபாலு

ஈழத் தமிழர்களைக் காக்கும் தாயாக விளங்குகிறார் சோனியா என்று தங்கபாலு பொய்யான தகவலைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால் அவரின் செய்தி தலைப்பு நாம் அளித்துள்ள தலைப்பு போல் இருந்திருக்க வேண்டும்.

தமிழர்களை அவர் எவ்வளவு கேவலமானவர்களாக நினைத்து இந்த அறிக்கையை அவர் விட்டார் என்று தெரியவில்லை. மக்கள் எல்லாவற்றையும் அறிவார்கள். இணையம், பத்திரிக்கை, தொலைக்காட்சி என்ற பல்வேறு ஊடகங்கள் இருந்து மக்களுக்கு இந்த செய்திகளை அளித்த போதிலும் தமிழக காங்கிரசு தலைவர் சூடு சொரணை ஏதுமில்லாமல் பொய்யான அறிக்கையை விடுவது அவரின் அயோக்கியத்தனத்தையும் அடிமை புத்தியையும் எடுத்துக் கூறுவதாக உள்ளது.
....................
முழுமையான தகவல் கீழே
சென்னை: சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார். ஆனால் அறிக்கைவிட்டு வாய் வீச்சைக்காட்டும் வைகோ இலங்கை தமிழர்களுக்காக இழந்தது என்ன? என்று கேட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைப்போர் நிகழ்வுகள் தொடங்கிய காலத்திலும், அது நடைபெறும் நேரத்திலும் அது முடிவுக்கு வந்து சுமூக சூழ்நிலை முழுமையாக உருவாகப்போகும் இன்றைய காலக்கட்டம் வரை அனைத்து நிலைகளிலும் சோனியாகாந்தியின் மனிதாபிமான வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளை வைகோ மறந்திருக்கலாம். ஆனால், தமிழக மக்களும், இலங்கைவாழ் தமிழர்களும் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள்.
http://thatstamil.oneindia.in/news/2010/11/12/thangabalu-vaiko-sonia-gandhi-eelam-tamils.html

Thursday, June 03, 2010

புதுச்சேரி தினகரன் செய்தி ஆசிரியர் தருமராசனுக்கு கண்ணீர் அஞ்சலி

தருமராசன் புதுச்சேரி தினகரன் ஆசிரியர்

புதுச்சேரி தினகரன் செய்தி ஆசிரியரும் நண்பருமான தருமராசன் 03-06-2010 இரவு 2 மணியளவில் மரணமடைந்தார். சென்ற 29-05-2010 அன்று இரவு என்னை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நான் பேச இயலவில்லை. மறுநாள் 30-05-2010 காலை 7.00 மணிக்கு அவரோடு பேசினேன். அது தான் அவரோடு நான் இறுதியாக பேசியவை.

அமைதியானவர், பழக இனியவர், எதற்கும் அலட்டிக் கொள்ளாதவர், இன்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தவர்கள் எண்ணிக்கையை பார்த்தால் அவர் எத்தகைய நட்பாளர்  என்பது தெரியும்.

அவருடைய சொந்த ஊரான கடலூரிலிருந்து 15 கீ.மீ தொலைவில் இருக்கும் பூண்டியாங்குப்பத்தில் 100 க்கும் மேற்பட்ட கார்களில் வந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்த காத்திருந்தார்கள்.

புதுச்சேரியின் அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ரெங்கசாமி, பா.ம.க வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார். உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்கள் திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி மற்றும் பலர்  அங்கு கூடியிருந்தார்கள்.

ஜீனியர் விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக சேர்ந்து புதுச்சேரி தினமலர் நாளேட்டில் செய்தியாளராகவும், பின்னர் தமிழன் எக்பிரஸ் உள்ளிட்ட பத்திரிக்கையில் பணியாற்றிய தருமராஜன் இப்போது தினகரன் செய்தி பத்திரிக்கையின் செய்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு எனக்கு நட்பு உண்டு. அவரின் இழப்பு என்னை போன்ற பல நண்பர்களுக்கு பேரிழப்பாகும்.

அவரின் பிரிவால் துயரத்துடன்
கண்ணீருடனும் கவலைகளோடும்

இரா.சுகுமாரன்


Friday, May 14, 2010

முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு

முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்

மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு

இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு
சென்னை, 17. 29.04.2010.
தமிழீழ மக்கள் மீது, சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை.இனவெறியின் கோரப் பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.


முள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.


முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது. இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும்.


முள்ளிவாய்க்கால் பேரழிவுப் போர் தொடங்கப்பட்ட நாளான மே 16 (16.05.2010) அன்று மாலை தஞ்சாவு+ர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, சாணுரப்பட்டி (செங்கப்பட்டி) பகுதியில் அமைந்துள்ள தனியார் இடம் ஒன்றில், இச்சிலை நிறுவப்படுகின்றது.

சிலை திறப்பு நிகழ்வுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தையார் திரு. ச.குமரேசன் கலந்து கொள்ள இசைவு தந்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட முத்துக்குமார் சிலையை அன்பளிப்பாக வழங்கி, இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. ம.செந்தமிழன், சிறப்புரையாற்றுகிறார்.


சிலை திறப்பு நிகழ்வை முன்னிட்டு, பிற்பகல் 2 மணிளவில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் வகையில், சுடரோட்டம நிகழ்வு நடைபெறுகின்றது. பு+தலூர், ஆவாராம்பட்டி, நந்தவனப்பட்டி வழியாக சாணுரப்பட்டிக்கு இச்சுடரோட்டம் வந்தடைகிறது.


மாலையில், ‘முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்’ என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா; ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.


முள்ளிவாய்க்கால் முடிவல்ல, புதியதொரு தொடக்கம் என்பதை இவ்வுலகிற்கு நாம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தமிழகத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது. தாய்த் தமிழகத்தில் எழுகின்ற எழுச்சியே தமிழீழ மக்களின் நலன் காக்கும் என்பதை உறுதியாக நம்பிக் களம் இறங்க வேண்டிய சூழல் இது என்பதை முன்வைத்தும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் தமிழகமெங்கும் உள்ள இன உணர்வாளர்கள், கட்சி வேலிகளைக் கடந்து ஒன்று கூட வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன விடுதலைக்கான சூளுரை தினமாக நெஞ்சிலேந்தி, விடுதலைப் பாதையில் அணிதிரள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. தமிழ் உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பெருந்திரளாக பங்கெடுக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.


சிலை திறப்பு மற்றும் வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இளந்தமிழர் இயக்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சிலை திறப்பு நிகழ்வில், பங்களிப்பு செலுத்த விரும்பும் உணர்வாளர்கள், elanthamizhar@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி அல்லது +91-9841949462 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு
நோர்வே ஈழத்தமிழா அவை வாழ்த்து!


ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சிலை எழுப்புவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில், நோர்வே ஈழத்தமிழர் அவை இளந்தமிழர் இயக்கத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.


நோர்வே ஈழத்தமிழர் அவையின் தலைவர் வைத்திய கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்கள் எழுதியுள்ள அக்கடிதத்தை மகிழ்வுடன் யாம் வெளியிடுகின்றோம்.


இளந்தமிழர் இயக்க பணி சிறக்க வாழ்த்துகள்!