Monday, November 03, 2008

புதுச்சேரியில் இலங்கைப் பிரச்சனை ஒட்டி விடிய விடிய ஆர்பாட்டம் 400க்கும் மேற்பட்டோர் கைது

புதுச்சேரியில் சிங்கள இனவெறி அரசின் தமிழினப் படுகொலையை கண்டித்து முருங்கப்பாக்கத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழ் அமைப்புகள் சார்பாக பட்டினிப்போர் நடைபெற்றது,

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு செயலாளர் பாவாணன், பெரியார் திராவிடர் கழகம் லோகு அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த அழகிரி, விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வம், ராஷ்டிய ஜனதா தளம் சஞ்சிவி, , செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, பகுஜன் சமாஜ் கட்சி தங்க. கலைமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ”சோனியாகாந்திக்கும் இராசீவ் கொலையில் தொடர்பு உள்ளது” என்று சுப்பிரமணியசாமி எழுதியதை எந்த காங்கிரசுக்காரர்களும் எதிர்க்கவில்லை எங்களைப் போன்றவர்களை எதிர்க்கிறீர்கள் என தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த இரா.அழகிரி பேசினார், மேலும் உள்ளூர் பிரச்சனை தொடர்பாக இளைஞர் காங்கிரசு பிரமுகர் ”பாண்டியனை” கண்டித்து அழகிரி பேசியதை தொடர்ந்து பாண்டியனுக்கும் உண்ணாவிரத போராட்டக்குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதை ஒட்டி தமிழ் உணவாளர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்ததில் 150 க்கும் மேற்பட்டோர் அங்கு ஒன்று கூடினர். எனக்கும் அழைப்பு வந்ததின் பேரில் நானும் களத்தில் நேரில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.

பாண்டியனை கண்டித்து பேசியதற்கான மன்னிப்பு கோரவேண்டும் என தரக்குறைவாக பேசி பாண்டியன் மற்றும் அவருடன் வந்த சிலர் கேட்டனர். அதை தொடர்ந்து பிரச்சனை வளர்ந்தது. இதனைத்தொடர்ந்து காங்கிரசார் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தக்கூடாது என்றும் இவ்வாறு பேசியவர்களை கைது செய்யவேண்டும் கூறி சாலை மறியல் செய்தனர். இதில் புதுச்சேரி காங்கிரசு தலைவர் சுப்ரமணியன் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால், சோனியாகாந்தி மற்றும் இராசீவ் கொலை தொடர்பாக கொச்சைப்படுத்தி பேசியதாலேயே பிரச்சனை செய்ததாக இளைஞர் காங்கிரசு பாண்டியன் பத்திரிகை தொலைகாட்சிகளில் பேட்டி கொடுத்துள்ளார்.

ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல. பிரச்சனையை திசைதிருப்பி மத்திய அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் வல்சராசுக்கு இந்த பட்டினிப்போராட்டம் நடத்திய கட்சிகள் மீது ஏற்கனவே இருந்த முன் விரோதத்தை பயன்படுத்திக் கொண்டு பிணையில் வர இயலாத (case under Section 153 (trying to provoke with the intent of causing riot)) 186, 294, 506/2, 34 IPC, Section 14 (Pondicherry act)  ஆகிய பிரிவின் கீழ் தந்தை புதுச்சேரி பெரியார் திராவிடர்க் கழக தலைவர் லோகு. அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத்தின் திரு, இரா. அழகிரி, மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றகழகத்தை சேர்ந்த மூவர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு ஒரு பொய்வழக்காகும், ஏனெனில் ஏற்கனவே துறைமுக விரிவாக்கத்திட்டதின் போது இவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி இந்த விரிவாக்கத்தை தடுத்தனர், இதனால் உள்துறை அமைச்சர் வல்சராசுக்கு வரவேண்டிய பல கோடி தொகை வர இயலாமல் போனது எனவே இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி போராட்டக்காரர்களின் மீது பொய் வழக்குப் போட்டு பழிவாங்கத்துடிக்கிறது காங்கிரசு அரசு.


கைது செய்யப்பட்ட மற்றவர்களை இரவு 8.00 மணியளவில் விடுதலை செய்வதாக காவல் துறை அறிவித்தது. ஆனால் பொய் வழக்கு போடப்பட்ட 3 பேர்களை விடுதலை செய்யாவிட்டால் தாங்களும் வெளியேற மாட்டோம் என 100 க்கும் மேற்பட்டோர் கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் முழக்கமிட்டனர், ஆனால் காவல் துறை படியவில்லை, மேலிடத்து உத்தரவு படி செய்வதாக காவல் துறை சொன்னது.

இரவு நேரம் 12 மணியளவில் கைது செய்யப்பட்டு பட்டினிப் போராட்டம் நடத்தாமல் போனதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என சாலை மறியல் போராட்டம் நடத்தி அதில் கைது செய்யப்பட்டு விடுதலையான 200 க்கும் மேற்பட்டோர் கோரிமேடு காவல் நிலைய வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர், இவர்களை காவல் துறை உள்ளே அனுமதிக்கவில்லை, உள்ளே இருப்பவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையத்தின் உள்ளேயும் காவல் நிலையத்தின் வெளியேயும் 300 முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர், பெரியார் விடுதலைக்கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிலிருந்தும் இப்போராட்டத்தை நடத்தினார். நள்ளிரவு ஒன்று முப்பது மணிவரை இந்த ஆர்பாட்டம் நடந்தது.

இரவு 12 மணி அளவில் கோரி மேடு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இரவு வெகுநேரமானதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என முடிவு செய்து 10 நிமிடங்களில் இந்த சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட முறை காவல் துறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த்னர். இப்பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் பாவாணன், பகுசன் சமாஜ்வாடி தங்க கலைமாறன் பெரியார் திராவிடர்க்கழகத்தின் ம.இளங்கோ, வீர.மோகன், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வம், செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் ந.மு. தமிழ்மணி உள்ளிட்ட சிலர் காவல் துறையுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் காவல் துறை அதிகாரிகள் பலர் வந்து வழக்கை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்தும் காவல் கண்காணிப்பாளர் ”சிவதாசன்” மட்டும் காங்கிரசார் பிரச்சனை செய்வார்கள் என்று கூறி பொய்வழக்கை உறுதி செய்தார்கள்.

இதனால் ஆத்திரமடைந்தவர்கள் காவல் நிலையத்தில் இடையிடையே காவல் துறையை எதிர்த்து முழக்கமிட்டனர். வழக்குப் போடுவதாக இருந்தால் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதால் கைது என்று வழக்குப் போடுங்கள் என்று காவல் துறையினரை கேட்டும் காவல் துறை அந்த பிரிவில் வழக்கு போடவில்லை, இந்த பொய் வழக்கை கண்டித்து தங்களையும் கைது செய்யுங்கள், இல்லையெனில் வெளியேறமாட்டோம் என்று மீண்டும் மீண்டும் முழக்கமிட்டனர், பின்னர் இறுதியாக மறுநாள் போராட்டம் நடத்த வேண்டி வரலாம் என்பதால் வெளியே இருந்து பணியாற்ற சிலக்குழுக்கள் பிரித்து அனுப்பபட்டது. மறுநாள் மறியல் போராட்டம் உள்ளிட்டவைகளை செய்வதற்காக சிலர் அந்த குழுவிலிருந்து சிலர் வெளியேறினர் இதனால் விடுதலை செய்யப்பட்ட 77 பேர்களுடன் 3 பேர்களுடன் மொத்தமாக 80 பேர் இரவு இரண்டு முப்பது மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

அதிகாலை 3 மணியளவில் கைது செய்தவர்களை ஏற்றி செல்ல வாகனம் வந்தது ஆனால் அதிகாலை 5 மணி வரை காவல் நிலையத்திலேயே வைத்திருந்து பின்னர் புதுவையில் காலப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியை கண்டித்து புதுவையின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை மாலை 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வுக்குப்பின் அடுத்த கட்டமாக 02-11-2008 ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டு மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 30 நிமிடங்கள் நீடித்த இந்த சாலை மறியலின் பின் இரண்டு பேருந்துகளில் 100க்கும் அதிகமானவர்களை கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கில் திங்கள் மாலை 6 மணியளவில் 77 பேர்மட்டும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத்தின் இரா. அழகிரி மறுமலர்ச்சி திராவிடர்க்கழகத்தின் சந்திர சேகர் ஆகியோருக்கு இது வரை பிணை வழங்கப்படவில்லை.

இந்து பத்திரிக்கை செய்தி -
தினத்தந்தி செய்தி
ஒருபார்வைக்காக இணைத்துள்ளேன்.

புகைப்படம்: இரா.சுகுமாரன்
செய்திகள் அனைத்தும் : நேரடி தொகுப்பு

3 comments:

Anonymous said...

பதிவுக்கு நன்றி!

தமிழ் வேந்தன் said...

புதுவையில் இன்று மாணவர்கள் 5000 பேர் ஆளுனரிடம் மனு அளித்ததாக தகவல் படித்தேன். புதுவையிலும் இப்படி நடப்பது மகிழ்ச்சியான தகவல்

அரியாங்குப்பத்தார் said...

புதுச்சேரி நிகழ்வை முழுமையாக தொகுத்தளித்த தோழருக்கு நன்றி!