சாகித்திய அகாதமியில் புதுச்சேரிக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று (08-06-2008) காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தமிழ் அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
சாகித்திய அகாதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக புதுச்சேரி அரசின் பரிந்துரையின்படி மகரந்தன, தமிழக அரசின் பிரதிநிதியாக இராம.குருநாதன், பல்கலைக்கழக பிரதிநிதியாக இரா.மோகன் மற்றும் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாக சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தமிழ்மொழியின் ஒருங்கிணைப்பாளராக சிற்பி பாலசுப்ரமணியத்தை மற்ற மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து தேர்வு செய்தனர். மேலே உள்ள நான்கு பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து மேலும் 6 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படியில் புதுச்சேரி மகரந்தன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மூவர் பெயரை ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்ரமணியத்திடம் அளித்துள்ளார். ஆனால், இவர் பரிந்துரை செய்த ஒருவரையும் நியமிக்காமல் தன்னிச்சையாக தனக்கு வேண்டிய ஒருவரை சிற்பி நியமித்துள்ளார். பரிந்துரையின் அடிப்படையிலோ அல்லது மற்ற உறுப்பினர்களை கலந்தாலோசனையின் அடிப்படையிலோ அவர் தேர்வு செய்யாமல் தன்னிச்சையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது புதுச்சேரி இலக்கிய வட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பணத்தில் இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் தமது உறுப்பினர்களுக்கே வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் போது, பொதுமக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க இயலும் என்று இந்த தமிழ் அமைப்புகள் கோருகின்றன.
மேலும் புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒன்பது திட்டமங்களை மகரந்தன் அளித்திருந்தார் அதில் அத்தனையும் அதன் ஒருங்கிணைப்பாளர் நிராகரித்துள்ளார். புதுச்சேரியோ அதன் அருகிலுள்ள மாவட்டங்கள் எதிலும் நிகழ்ச்சி எதற்கும் இதன் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு ஏன் புதுச்சேரி பகுதியிலிருந்து ஒரு பிரதிநிதி என்று புதுவையைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுபபினர். சென்ற பத்து ஆண்டுகளாக புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக இரண்டே இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன.
அத்துடன் ஆரோவில் (தமிழகம்) பகுதியைச் சேர்ந்த இரா.மீனாட்சி என்பவரை சிற்பி அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர். அவர் தமிழ் இன விரோத சிந்தனை கொண்டவர். எனவே, அவரை திரும்பப் பெற வேண்டும். புதிதாக புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கோரினர்.
புதுவைத் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்தாளர் கழகம், பெரியார் திராவிடர்க் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி பூர்வ குடிமக்கள் உரிமைப் பாதுகாப்பு பேரவை, மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழர் தேசிய இயக்கம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், சமூக நீதி போராட்டக் குழு இராவணன் பகுத்தறிவு இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை உள்ளிட்ட 27 அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் ஒரு தொடக்கம் தான் “சாகித்திய அகாதமியின்” நடவடிக்கை ஏதும் மேற் கொள்ளாமல் புதுச்சேரியைத் தொடர்ந்துப் புறக்கணிக்குமானால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment