Thursday, April 23, 2009

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தடா சட்டத்தில் கர்நாடகா போலீசால் கைது உண்மை அறியும் குழு அறிக்கை

அதிரடிப்படையால் கொல்லப்பட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கடந்த 4 மாதங்களாக கர்நாடக மாநில மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும் நோக்கத்துடன் கீழ்க்கண்டவாறு ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த 9 பேர் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் வருமாறு:
1)       அ.மார்க்ஸ், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.
2)       மு.சிவகுருநாதன், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.
3)       கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.
4)       பேராசிரியர் சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), தமிழ்நாடு.
5)       ஜி.சி.ஜெகதீஷ், சோஷலிசத்திற்கான புதிய மாற்று, பெங்களூரூ.
6)       டாக்டர் லக்ஷ்மிநாராயணா, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), பெங்களுரூ.
7)       மரிதண்டியா (எ) புத்தா, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), மைசூரூ.
8)       ஆர்.மனோகரன், சிக்ரம், கர்நாடகா.
9)       பிரசன்னா, மாவட்ட மனித உரிமை ஒருங்கிணைப்பாளர், மைசூரூ.
     இக்குழு, நேற்று (22.4.2009) மாலை மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துலட்சுமியை சந்தித்தது. மேட்டுரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சென்ற டிசம்பர் 25 நள்ளிரவில் கர்நாடக போலீஸ் அவரைக் கைது செய்துள்ளது. சாம்ராஜ் நகர் முதன்மை அமர்வு நீதிபதி அளித்துள்ள வாரண்ட் அடிப்படையில் அவரையும் மேலும் நால்வரையும் (சீனிவாசன், பொன்னுசாமி, பசுவா மற்றும் டைலர் மணி) போலீஸ் அடுத்தடுத்து கைது செய்தது.
     அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், ஆயுத மற்றும் வெடிமருந்துச் சட்டம் மற்றும் தடா சட்டப் பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த 4 வழக்குகளும் வனத் துறை அதிகாரி சீனிவாசன் கொலை வழக்கு (1991), ஷகீல் அகமது கொலை வழக்கு (1992), போலீஸ் எஸ்.பி. கோபால் ஒசூர் மீது தாக்குதல் வழக்கு (1993), பாலாறு வெடிகுண்டு வழக்கு (1993) என அழைக்கப்படுகின்றன.
     முத்துலட்சுமியுடன் பேசிய அடிப்படையில் இந்த கைதுகள் குறித்த எங்கள் பார்வைகள் வருமாறு:
1)       இந்த 4 வ்ழக்குகளிலும் தொடர்புடைய சம்பவங்கள் 1991-க்கும் 1993-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நிகழ்ந்தவை. இவ்வழக்குகளில் 8 பெண்கள் உள்ளிட்ட 126 பேர் கைது செய்யப்பட்டனர். தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட்ட இவ்வழக்குகளின் இறுதியில் 109 பேர் குற்றமற்றவர்கள் என 9 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டனர். வெறும் 8 பேர் மட்டுமெ தண்டிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை பின்னர் உச்சநீதிமன்றத்தில் மரண தணடனையாக மாற்றபட்டது. இந்த நால்வரும் இன்றளவும் சிறையில் வாடுகின்றனர். இவர்களின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன.
2)       இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதே அன்று தேடப்பட்டுக் கொண்டிருந்த வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமியை பிடித்துச் சென்ற அதிரடிப்படையினர் அவரை 2 ஆண்டுக் காலம் தமது பண்ணாரி முகாமில் சட்டவிரோத காவலில் வைத்திருந்தனர். பின்னர் அவர் இம்முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும், அவர் கணவர் கொல்லபடும் வரை கடும் கண்காணிப்பின்கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். நீதிபதி சதாசிவா விசாரணை ஆணையத்தின் முன்னும் அவர் தனது பாதிப்புகளைச் சொல்ல அனுமதிக்கப்படவில்லை.
3)       கடந்த 18 ஆண்டுகளாக அவர் மீது வாரண்ட் ஒன்று நிலுவையில் இருப்பதாக அதிரடிப்படையினர் சொல்லி வந்த போதும், இந்த வழக்குகள் தொடங்கி முடியும் வரை அவரை இவற்றில் வழக்குகளில் தொடர்புபடுத்தி விசாரிக்கவில்லை. 18 ஆண்டுகள் ஆனபின் இப்போது திடீரென அவரும் மற்ற நால்வரும் தற்போது நடைமுறையில் இல்லாத தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4)       இவ்வழக்குகள் நான்கும் 2001-ம் ஆண்டிலேயே விசாரிக்கப்பட்டு தீர்ப்புகளும் வழங்கப்பட்டுவிட்டன. இவ்வழக்குகளில் முக்கிய குற்றவாளியான வீரப்பன் 2004-ம் ஆண்டில் கொல்லப்பட்டும் விட்டார். ஒரு வழக்கு இவ்வாறு தன் தர்க்கபூர்வமான முடிவை எட்டிய பின்னர் மீண்டும் அதை தோண்டியெடுத்து புதுப்பித்துள்ளதை திட்டமிட்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக எமது குழு கருதுகிறது.
5)       வீரப்பன் கொல்லப்பட்ட பின்னர் அவரது மனைவியான முத்துலட்சுமி அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை ஒன்றுதிரட்டி அதிரடிப்படையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நியாயம் கேட்டுப் போராடியுள்ளார். ஆண்டு தோறும் அவர் கணவர் கொல்லபட்ட தினத்தில் நட்த்தப்பட்ட மாநாடுகள் குறைந்தபட்சம் மூன்று. மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பலரும் அதில் கலந்துக் கொண்டுள்ளனர். இம்மாநாடுகளில் இரண்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
அ) அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட அத்துணை பேருக்கும் இழப்பீடு வ்ழங்குவது.
ஆ) மனித உரிமை மீறலுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகளைத் தண்டிப்பது.
6)       நீதிபதி சதாசிவா ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்பு தேசிய மனித உரிமை ஆணையம் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட 83 பேருக்கு இழப்பீடு வழங்க ஆணையிட்டது. இன்றைய தேதியில் 80 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இரு மாநில அரசுகளும் இதற்கென 2.8 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன. இன்னும் மூவருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
7)       இங்கொன்றை குறிப்பிட வேண்டியுள்ளது. பொறுப்பு மிக்க மனித உரிமை அமைப்புகளின் கணக்கீட்டின்படி கூட்டு அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 100; வன்புணர்ச்சி செய்யப்பட்ட பெண்கள் 60; முடமாக்கப்பட்டோர் 300. எனவே, இன்னும் பல பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை.
8)       இந்நிலையில், முத்துலட்சுமி இவ்வாறு பதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுப்பியது முற்றிலும் நியாயமானதே. இது மிகவும் அடிப்படையான மனித உரிமைக் கோரிக்கையே.
9)       முத்துலட்சுமி மற்றும் நால்வரையும் இவ்வாறு சிறையில் அடைத்திருப்பதையும் வழக்கை விரைவாக நடத்தாமல் வேண்டுமென்றே தாமதிப்பதையும் இக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பருவமடைந்த இரண்டு பெண்களுக்குத் தாயான இந்த ஏழை விதவைக்குப் பிணை அளிக்க்க் கூடாது என கர்நாடக போலீஸ் மறுப்புத் தெரிவிப்பதை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
10)   மனித உரிமை அமைப்புகளாலும், பல்வேறு அரசியல் கட்சிகளாலும் கடுமையாக கண்டிக்கபட்டு, இன்று நீக்கப்பட்டுள்ள கறுப்புச் சட்டமான தடாவை கர்நாடக அரசு ஒரு ஏழை அபலைக்கு எதிராக பயன்படுத்தி இருப்பதையும் இக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
11)   முத்துலட்சுமியும், மற்றவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென இக்குழு கோருகிறது. அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
12)   கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது நடந்த பேச்சுவார்த்தைகளில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க இரு மாநில அரசுகளும் ஒத்துக் கொண்டன. ஒவ்வொரு மாநில அரசும் இதற்கென 5 கோடி ரூபாய் ஒதுக்கின. இந்நிதி இதுவரையில் பயன்படுத்தப்படவில்லை. அதிரடிப்படையால் பாதிக்கபட்டுள்ள எஞ்சியுள்ள பலருக்கும் இறந்துப் போனவர்களின் வாரிசுகளுக்கும் இத்தொகை பிரித்தளிக்கப்பட வேண்டுமென இக்குழு கோருகிறது.
13)   பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தயக்கம் காட்டும் இந்த அரசுகள் தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக பாதிக்கப்பட்டவர்களால் குற்றம்சாட்டப்பட்ட பல போலீஸ் அத்காரிகளுக்கு பல கோடி ரூபாய் வீரப்பரிசுகளும், பதவி உயர்வுகளும் வழங்கியுள்ளதை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட அதிரடிப்படையினர் சட்டத்தின்முன் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூப்பிக்கப்படுகிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
14)   வழக்கு விசாரணை வேகமாக நடத்தப்பட வேண்டும். தந்தையை இழந்து தாயின் அரவணைப்பும் இல்லாமல் படித்துக் கொண்டிருக்கும் இரு பெண்களை மனதில் கொண்டு முத்துலட்சுமியை உடனடியாக பிணையில் விடுவதற்கு போலீஸ் மறுப்பு தெரிவிக்க கூடாது என இக்குழு கோருகிறது. ஏற்கனவே தமிழக போலீஸ் தொடுத்துள்ள வழக்கில் கைது செய்யாமல், சம்மன் அளித்து அழைத்த போது ஆஜராகி வழக்கு விசாரணையில் முத்துலட்சுமி ஒத்துழைத்து உள்ளதைக் இக்குழு சுட்டிக்காட்டுகிறது.
மைசூரூ
23.04.2009.

தொடர்புக்கு: அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையார், சென்னை-600 020. செல்: 9444120582, 9894054640.

No comments: