Thursday, October 16, 2008

புதுதில்லி அனுபவம் : உழைத்து வாழ வயது ஒரு தடையல்ல!

புதுதில்லியில் ஒரு புதிய அனுபவம், புதுதில்லியில் புதுச்சேரி விருந்தினர் இல்லத்திலிருந்து காலை எட்டு மணியளவில் தானியங்கி  (AUTO)  வருகைக்காக நானும் எங்கள் அலுவலக நண்பர் வெங்கடேசும் சாலையோரம் நின்றிருந்தோம். அப்பொழுது  ஒரு முதியவர் தானியங்கியுடன் எங்கள் முன் வந்தார்.
"புதுதில்லி இந்தியா கேட்"


நாங்கள் செல்லும் இடத்திற்கு எவ்வளவு ரூபாய் என்று கேட்ட போது மீட்டர் போட்டுக் கொள்ளலாம் என்று கூறி பயணத்தை தொடர்ந்தார். அவரை பார்த்த போது  கசங்கிய, கிழிந்த உடை அணிந்திருந்ததை பார்த்தோம். அவரை விசாரித்தபோது அவர் பெயர் பிரித்தம் சிங் என்பதும் அவருக்கு வயது 71 என்பதையும் தெரிவித்தார். அவர் இருக்கைக்கு அருகில் ஒரு கைத்தடியும் இருந்தது. இந்த கைத்தடியோடு தான் அவர் எங்கும் பயணிக்கிறார்.

 இவர் இந்திய விடுதலைக்கு முன் பாகிஸ்தானில் பிறந்து, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போதே புதுதில்லியில் குடிஅமர்ந்தவர் என தெரிவித்தார். தலையில் உள்ள தலைப்பாகையை பார்க்கும் போதும் பேசியதிலிருந்தும் அவர் சீக்கியர் என அறிந்து கொண்டோம். சீக்கியர் இப்படித்தான்  இந்த வயதிலும் கடுமையான உழைப்பவர்களாக இருக்கிறார்கள் என நண்பர் வெங்கடேஷ் சொன்னார்.


வெங்கடேசுடன் முதியவர் பிரித்திம் சிங்

இந்த முதிய வயதிலும் இந்த வேலை செய்கிறீர்களே என்று கேட்டபோது ஆம், "உழைத்தால் தான் வாழ முடியும், சாகிறவரை உழைப்பேன்" என சாதாரணமாக குறிப்பிட்டார். அவர் குடும்பத்தில் அவர் மகன்கள் இருந்த போதும் இவர் தன் மனைவியுடன் தனியாக வசித்துவருகிறார். அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இவர் மீது அக்கரை செலுத்தவில்லை என்பது  அவரிடம் நடத்திய உரையாடலிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டோம். தில்லி அரசு முதியவருக்காக வழங்கப்படும் ஓய்வூதியமாக ரூபாய் 1000/- பெறுவதாகவும் அது அவருக்கு போதுமானதாக இல்லை என்று  குறிப்பிட்டார்.

காலை 8 மணியிலிருந்து எட்டுமணிநேரம் மட்டுமே வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். பயணத்திற்கு மீட்டர்  போட்டு மட்டுமே கட்டணம் வசூல் செய்கிறார். வழக்கமாக ரூபாய் 70/-, 80/- கொடுத்து பயணம் செய்த எங்களுக்கு அவர் வண்டியில் வந்த போது எங்களுக்கு 42/- ரூபாய் மட்டுமே வந்தது, அந்த தொகையை மட்டுமே அந்த பெரியவர் கேட்டார், இருப்பினும் நண்பர் வெங்கடேசு அவரின் கதையை கேட்டு 50/- கொடுத்து சில்லரை வேண்டாம் என தெரிவித்தார், நானும் 50/- ரூபாய் கூடுதலாக கொடுத்தேன், சிறிய தயக்கத்தோடு தான் கூடுதல் பணத்தை வாங்கிக்கொண்டார்.



முதியவருடன் நான்

இவரின் முதுமை, அவரது செயல் எங்களை அதிகம் சிந்திக்க வைத்தது.
உழைத்து வாழ வயது ஒரு தடையல்ல என்பதை எங்களுக்கு உணர்த்தினாலும் இளைய சமூகம் முதியவர்கள் மீது அக்கரை செலுத்த வேண்டும்
என்பதை மற்றவர்களுக்கு வலியுறுத்தவேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டோம்.

அவருடைய நேர்மையான அணுகுமுறையும், தளராத எண்ணங்களும் எங்களை மிகவும் நெகிழ செய்தது.

Friday, September 05, 2008

வைத்திலிங்கம் தலைமையிலான புதுச்சேரி அரசுக்கு ஆயுள் குறைவு

புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது. எனினும் இந்த அரசுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு இல்லை என்பதே இன்று உள்ள நிலையாகும்.

கடந்த சில தேர்தல்களில் காங்கிரசு அரசு தோற்றுவருவதால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசு அரசு தோல்வியை சந்திக்கும் என்ற நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.


அ.இ.அ.தி.மு.க வின் மாநில அமைப்பாளர் அன்பழகன் சென்ற ஆட்சியில் கிடைத்த நன்மைகள் இந்த ஆட்சியில் கிடைக்கப்போவதில்லை என்று புதிதாக பெறுப்பேற்றுள்ள வைத்திலிங்கம் அரசு பற்றி கருத்து தெரிவித்துள்ளார். ரெங்கசாமி, வைத்தியலிங்கம் தலைமையிலான ஒரே காங்கிரசு அரசு என்றாலும் வைத்திலிங்கம் அரசு மீது பலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

கூட்டணியில் உள்ள தி.மு.க முன்னாள் முதல்வர் ந. ரெங்கசாமிக்கே தனது ஆதரவை தெரிவித்திருந்தது. ஆனால், வைத்திலிங்கம் அரசுக்கு தனது ஆதரவை முழுமனதோடு தெரிவிக்க வில்லை என்றே தெரிகிறது. மத்திய அரசில் அங்கம் வகிப்பதாலும் தி.மு.க தலைமைக்கு கட்டுப்பட்டே அவர்கள் அமைதியாக இருப்பதாகவும் தெரிகிறது.

அதேபோல ரெங்கசாமி வன்னியர் இனத்தை சார்ந்தவர் என்பதால் பா.ம.க கட்சியும் ரெங்கசாமிக்கு எதிராக வைத்திலிங்கம் அரசுக்கு மனப் பூர்வமான ஆதரவை வழங்கவில்லை , மத்தியில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிப்பதால் அக்கட்சியும் வேறு வழி இல்லாமல் வைத்தியலிங்கம் அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளது என்றே தெரிகிறது.

அதேபோல சிபிஅய் கட்சியும் வைத்தியலிங்கம் அரசுக்கு ஆதரவு வழங்கவில்லை. இக்கட்சி மறைமுகமாக முன்னாள் முதல்வர் ரெங்கசாமிக்கே தனது ஆதரவை அளித்து வந்தது. ஆனால், தற்போது அமைந்துள்ள புதிய அரசு பற்றியும் ஒரு அதிருப்தியை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

மொத்தம் 30 சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி சட்டப் பேரவையில் மொத்தமாக 10 உறுப்பினர்கள் மட்டுமே காங்கிரசு கட்சியில் உள்ளனர். இந்நிலையில் கூட்டணி கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைதுள்ள காங்கிரசு கட்சி எதிர்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளது.

கூட்டணி கட்சியின் ஆதரவு  சம்பிரயப்பூர்வமானதே தவிர மனப்பூர்வ மானதாக  காங்கிரசின் வைத்திலிங்கம் அரசுக்கு இல்லை என்பதால் "காங்கிரசு கட்சியின் மத்திய அமைச்சரும் புதுச்சேரி மாநிலங்கள் அவை உறுப்பினரான நாரயணசாமி" எதிர்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

புதுச்சேரி காங்கிரசு கட்சி தலைவர் எ.வி. சுப்ரமணியன் எதிர்கட்சிகள் இனிமேல் காட்டு தர்பார் நடத்த முடியாது என்று கூறியுள்ளார். இனிமேல் என்று சொல்வதன் காரணம் ஏற்கனவே தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆதரவு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இராமதாசுவின் ஆதரவு ரெங்கசாமிக்கு இருந்ததால் புதிய ஆட்சி மாற்றத்திற்கு போதிய ஆதரவு இல்லாமல் இருந்ததால் ஆட்சி அமைத்துவிட்டோம் என்ற தைரியத்தில் "எதிர்கட்சிகள் இனிமேல் காட்டு தர்பார் நடத்த முடியாது" என்று கூறியுள்ளார்.

காங்கிரசு கட்சியின்  உறுப்பினர்களின் ஆதரவை இழந்த முன்னாள் முதல்வர் ரெங்கசாமி உண்மையில் முழுமையான ஆதரவை இழந்தவர் இல்லை. எதிர்கட்சிகளின் ஆதரவு எப்போதும் போல இப்போது உள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் ரெங்கசாமி ஆட்சியை இழந்ததற்கான காரணம் அவரைத்தவிர வேறு யாரையும் சொல்வதற்கில்லை. எல்லா விசயங்களிலும் அளவு கடந்த பொருமை இவரின் ஆட்சிக்கு எதிராக இருந்துள்ளது.

செய்தி ஆதாரங்கள் நன்றி:  தினமலர்

Wednesday, August 20, 2008

பிளாகர் தளம் தமிழில் வந்துவிட்டது

தமிழில் பிளாகர்ஸ் தளம் வந்துவிட்டது. இன்று காலை நான் கூகுல் தளம் பார்த்தபோது Google.co.in offered in: Hindi Bengali Telugu Marathi Tamil என தெரிந்தது, ஏற்கனவே இந்தி, பெங்காலி, தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய 5 மொழிகளை மட்டுமே கூகுல் இந்தியாவில் இந்திய மொழிகள் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று மாலை நான் பார்த்தபோது Google.co.in offered in: Hindi Bengali Telugu Marathi Tamil Gujarati Kannada Malayalam Punjabi என இருந்தது, கூடுதலாக குஜராத்தி, கன்னடம், மலையாளம் பஞ்சாபி ஆகிய நான்கு மொழிகளில் புதிதாக சேவை வழங்கப்பட்டிருந்தது.

பிளாகர்ஸ் ட்ராப்டில் தமிழுக்கான வசதி புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது, தேவையானோர்கள் இந்த தளத்திற்கு செல்ல http://draft.blogger.com/ முகவரிக்கு சென்று உள்ளே செல்ல வேண்டும். . பின்னர் மொழி பகுதியில் தமிழ்மொழியை தேர்வு செய்தால் உங்கள் பிளாக் தளத்தின் கட்டுப்பாட்டு பகுதி முற்றிலும் தமிழாக மாறிவிடும்.

தமிழ் மொழி தேர்வு செய்தால் அதன்பின் வரும் பின்னூட்டங்களின் மின்னஞ்சல்கள் வரும்போது மின்னஞ்சலின் தலைப்பில் எழுத்துறுக்கள் சரியாக வரவில்லை, வரைவு பிளாகர் என்பது சோதனை அடிப்படையில் இப்போது வெளியிடப்பட்டுள்ளதால் முழுமையான சரிசெய்யப்பட்ட அளவில் இது பிளாகர் தளத்தில் வெளியிடப்படும் என்று கருதலாம்.

முயற்சியுங்கள், தமிழை பயன்படுத்துங்கள் தமிழராகிய நீங்கள் தமிழை பயன்படுத்தாமல் ஆங்கிலம் பயன்படுத்தினால் யார் தமிழை பயன்படுத்துவது?

அதனால் இப்போதே தமிழுக்கு மாறுங்கள்,



Wednesday, July 23, 2008

அமெரிக்க மோகன் சிங்கின் வெற்றி - பண நாயகத்திற்கு கிடைத்த வெற்றி

அமெரிக்க மோகன் சிங் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். இது இந்திய பணநாயகம் எவ்வளவு பலமானது என்பதை நமக்கு வலியுறுத்தி உணர்த்தியுள்ளது.

வெற்றி பெறுவதற்கு காங்கிரசு அரசு கொட்டிக்கொடுத்த கத்தை கத்தையாகப்பணம் வாக்குமாறி போடுதல், வாக்களிக்க வராமால் இருத்தல், பாராளுமன்றத்திற்கே வராமல் இருத்தல் ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணமெல்லாம் எங்கிருந்து வந்தது? இவையேல்லாம் மக்கள் வரிப்பணத்தில் திருடியவை தான்.............. இவ்வாறு கொடுக்கப்பட்ட பணத்தை இந்திய பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டள்ளது. இவர் நடவடிக்கை எடுக்கப்போராராம், ............................... இவரே பதவிவிட்டு விலகத்தயாரில்ல! அவுங்க மேல இவரு நடவடிக்கை எடுக்கப்போராராம்?.................. நீங்க நம்பித்தான் ஆகனும்...........................

இதுக்கு பேருதான் இந்திய பணநாயகத்தின் வெற்றி.

ஆட்சியே போனாலும் பரவாயில்லை, ஆனால் அமெரிக்க எசமானுக்கு சேவை புரிவதில் மட்டும் அமெரிக்க மோகன் சிங் தயங்கியதில்லை. இந்த மோகன்சிங்குக்கு இந்தியாவைவிட அமெரிக்கதான் தேவை. அப்படி என்ன ஆட்சியை விட அமெரிக்க ஒப்பந்தம் தான் முக்கியமா? என்றால் ஆம், எசமான் சொல்வதை ஏவல் சிங் செய்து தான் ஆகவேண்டும்.

இவருக்குத் தெரியும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை என்று அதனால் தான் இவ்வளவு அவசரம் காட்டினார். ஆட்சி போனாலும் பரவாயில்லை அணு ஒப்பந்தந்தத்தை நிறைவேற்று என அமெரிக்க மோகன் சிங்கிற்கு எசமான் அமெரிக்கா உத்தரவை ஏற்று இந்த நாடகம் முடிந்துள்ளது.

இந்தியாவிற்கு உடனடியாக ஒரு அடிமை சாசனம் எழுத அதரவாக 275 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். எதிராக 256 பேர் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

Saturday, June 14, 2008

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நடத்தும் இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் கருத்தரங்கம் - சுவரொட்டி

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நடத்தும் இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் அதன் பயன்பாடும் கருத்தரங்கம் இன்று மாலை 5.30 மணியளவில் தொடங்க இருக்கிறது.

நிகழ்ச்சி இடம் புதுச்சேரி பேருந்து நிலையதிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, புதுச்சேரி அண்ணாசிலை அருகில் உள்ள கம்பன் கலை அரங்கம் அருகில் ரூபாய் 2.50 கொடுத்து டெம்போவில் வந்து இரங்கலாம், அருகில் உள்ள பெட்ரோல் வங்கியை ஒட்டிய வழியாக நடந்தால் சுமார் 120 அடி நடந்தால் கிழக்கு நோக்கி செல்லும் வீதி கந்தப்பா வீதி இடதுபுறமாக இரண்டாவது கட்டிடம் "ஓட்டல் லீ ஹெரிட்டேஜ்" அனைவரும் வருக.


(சுவரொட்டியில் திருவள்ளுவர் படம் சரியாக இல்லை, எனவே திருவள்ளுவர் படம் "போட்டோ சாப் வேலைப்பாடு")

இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் " புதுச்சேரியில் கருத்தரங்கு

இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வரும் திங்கள் அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது, இடம் “ஓட்டல் லெ ஹெரிட்டேஜ் பாண்டிச்சேரி“ 128 கந்தப்பா தெரு, அண்ணாத்திடல் பின்புறம் புதுச்சேரியில் நடக்க உள்ளது.

இதில் தமிழ்மணம் நிர்வாகி திரு சொ. சங்கரபாண்டி அவர்கள்இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் பற்றியும்,

தமிழ்மணத்தின் நிறுவனரான திரு காசி. ஆறுமுகம்தமிழ்மணம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பிலும்

திரு தமிழ் சசிஉலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் வலைப்பதிவுகள்

என்ற தலைப்பில் கருத்துரையாற்றுகின்றனர். அனைவரும் வருக,
அழைப்பு இணைத்துள்ளேன்.

வருக வருக அனைவரும் வருக.

Thursday, June 12, 2008

சாகித்திய அகாதமியைக் கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

சாகித்திய அகாதமியில் புதுச்சேரிக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று (08-06-2008) காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தமிழ் அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
சாகித்திய அகாதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக புதுச்சேரி அரசின் பரிந்துரையின்படி மகரந்தன, தமிழக அரசின் பிரதிநிதியாக இராம.குருநாதன், பல்கலைக்கழக பிரதிநிதியாக இரா.மோகன் மற்றும் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாக சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழ்மொழியின் ஒருங்கிணைப்பாளராக சிற்பி பாலசுப்ரமணியத்தை மற்ற மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து தேர்வு செய்தனர். மேலே உள்ள நான்கு பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து மேலும் 6 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படியில் புதுச்சேரி மகரந்தன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மூவர் பெயரை ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்ரமணியத்திடம் அளித்துள்ளார். ஆனால், இவர் பரிந்துரை செய்த ஒருவரையும் நியமிக்காமல் தன்னிச்சையாக தனக்கு வேண்டிய ஒருவரை சிற்பி நியமித்துள்ளார். பரிந்துரையின் அடிப்படையிலோ அல்லது மற்ற உறுப்பினர்களை கலந்தாலோசனையின் அடிப்படையிலோ அவர் தேர்வு செய்யாமல் தன்னிச்சையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது புதுச்சேரி இலக்கிய வட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பணத்தில் இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் தமது உறுப்பினர்களுக்கே வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் போது, பொதுமக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க இயலும் என்று இந்த தமிழ் அமைப்புகள் கோருகின்றன.

மேலும் புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒன்பது திட்டமங்களை மகரந்தன் அளித்திருந்தார் அதில் அத்தனையும் அதன் ஒருங்கிணைப்பாளர் நிராகரித்துள்ளார். புதுச்சேரியோ அதன் அருகிலுள்ள மாவட்டங்கள் எதிலும் நிகழ்ச்சி எதற்கும் இதன் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு ஏன் புதுச்சேரி பகுதியிலிருந்து ஒரு பிரதிநிதி என்று புதுவையைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுபபினர். சென்ற பத்து ஆண்டுகளாக புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக இரண்டே இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன.

அத்துடன் ஆரோவில் (தமிழகம்) பகுதியைச் சேர்ந்த இரா.மீனாட்சி என்பவரை சிற்பி அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர். அவர் தமிழ் இன விரோத சிந்தனை கொண்டவர். எனவே, அவரை திரும்பப் பெற வேண்டும். புதிதாக புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கோரினர்.

புதுவைத் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்தாளர் கழகம், பெரியார் திராவிடர்க் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி பூர்வ குடிமக்கள் உரிமைப் பாதுகாப்பு பேரவை, மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழர் தேசிய இயக்கம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், சமூக நீதி போராட்டக் குழு இராவணன் பகுத்தறிவு இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை உள்ளிட்ட 27 அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் ஒரு தொடக்கம் தான் “சாகித்திய அகாதமியின்” நடவடிக்கை ஏதும் மேற் கொள்ளாமல் புதுச்சேரியைத் தொடர்ந்துப் புறக்கணிக்குமானால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் தெரிவித்தார்.

Sunday, April 06, 2008

நேபாளம் செல்கிறார் புதுவை கோ.சுகுமாரன்

புதுச்சேரி, ஏப். 5: நேபாள நாட்டில் நடக்கும் தேர்தலையொட்டி சர்வதேச தேர்தல் பார்வையாளராக புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்ட மைப்பின் செயலர் கோ.சுகுமாரன் அங்கு செல்கிறார்.

அரசியல் நிர்ணய சபைக் கான தேர்தல் நேபாளத்தில் இம் மாதம் 10-ம் தேதி நடக் கிறது. இதையொட்டி நேபாளத்தைச் சேர்ந்த 148 அரசுசாரா அமைப்புகள் சார்பில் 92 ஆயிரத்து 245 பேரும், உலக அளவில் 500- க்கும் மேற்பட்டவர்களும் தேர்தல் பார்வையாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்9,801 தேர்தல் மையங்களையும், 20 ஆயிரம் தேர்தல் பூத்துகளையும் பார்வையிடுகின்றனர். கடந்த 1999-ல் நடந்த பொதுத் தேர்லின்போது நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்களை விட இது 30 மடங்கு அதிகம்.

அரசியல் நிர்ணய சபை தேர்தல் பார்வையாளர் கள் அமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் சுகுமா ரன் நேபாளம் செல்கிறார். வரும் ஏப்ரல் 7 முதல் 14- ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து தேர்தல் பணிக ளைப் பார்வையிடுகிறார். பின்னர் திரும்புகிறார்.

தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர தேர்தல் நடக் கும் எந்தப் பகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்கள் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.


Saturday, February 09, 2008

புதிய ஒருங்குறி பற்றி பொன்னவைகோ அவர்களிடம் ஒரு நேர்காணல்...........!!!

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் தனது சொந்த ஊரான விழுப்புரம் வானூர் வட்டம், செங்கமேடு கிராமத்திலுள்ள நடுநிலைப் பள்ளிக்கு தனது சொந்த செலவில் கணினி ஒன்று வழங்கி, அந்த ஊரின் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் கணினி பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளார்கள்.

இலவச கணினி வழங்கி பயிற்சி அளிக்கு விழா வரும் திங்கள் கிழமை பிப்ரவரி 11-ஆம் நாள் காலை 10 மணி அளவில் அந்த ஊரின் நடுநிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை திரு பன்னீர்செல்வம் செய்து வருவதாக வெள்ளி அன்று இரவு துணைவேந்தர் அவர்கள் எனக்கு தொலைபேசியில் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சி பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்து அவர்களை அழைத்துவரும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டுள்ளது. வானூர் பகுதியின் பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு இந்த செய்தி தெரிவித்துள்ளேன்.

இந்நிகழ்ச்சியில் அனவரும் கலந்து கொள்ளுமாறு நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.

....................

சென்ற மாதம் 23, 24 சனவரி 2008 – இல் யுனிகோடு நிறுவனத்துடன் சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்அவர்களும், முனைவர் பொன்னவைகோ அவர்கள் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் அறிந்திருப்பீர்கள்,


வாய்ப்பிருந்தால் புதிய யுனிகோடு நிலைமைகள் பற்றி அவரிடம் ஒரு உரையாடல் அல்லது காட்சிப்படம் எடுக்கலாம் எனத் திட்டம். எனவே, முனைவர் பொன்னவைக்கோ அவர்களிடம் புதிய ஒருங்குறி தொடர்பாக குறிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய தகவல் ஏதெனும் இருந்தால் அன்புகூர்ந்து எனக்கு எழுதும் படி நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

நாளை ஞாயிறு (10-02-2008) மற்றும் திங்கள் அன்று அவரை புதுச்சேரியில் சந்திப்போம். நண்பர்கள் கேள்விக்கான பதில் அவரிடம் கேட்டு வரும் திங்கள் அன்று தெரிவிக்கப்படும் என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, December 01, 2007

சற்று முன் செய்தி புதுச்சேரியில் குண்டு வெடிப்பு




புதுச்சேரியிலிருந்து திருப்பதி நோக்கி செல்ல இருந்த தொடர் வண்டியை இலக்காக வைத்து மர்ம நபர் புதுச்சேரி தொடர் வண்டி நிலையம் அருகில் வெடிகுண்டு வைத்திருந்தனர். அங்கு விளையாடச் சென்ற சிறுவர்கள் அந்த குண்டை எடுத்த்தால் பிற்பகல் ஒரு மணியளவில் அந்த குண்டு வெடித்து ஒரு சிறுவன் இறந்தான் மூன்று சிறுவர்கள் காயமடைந்தனர்

இந்த தொடர்வண்டி பிற்பகல் 2.45 மணியளவில் திருப்பதிக்கு புறப்பட வேண்டும். அதற்கு சற்று முன்னதாக தொடர் வண்டி சாலையில் அந்த குண்டு வைக்கப் பட்டிருந்தது.

இது பற்றி புதுச்சேரி காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.