Monday, December 08, 2008
புதுச்சேரியில்-ஈழம் அறிய வேண்டிய உண்மைகள் நூல் வெளியீடு
இக்கூட்டத்திற்கு ஆனந்தக்குமார் தலைமையேற்று நடத்துகிறார். இக்கூட்டத்தில் வே. ஆனைமுத்து அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் பேராசிரியர் த. பழமலை அவர்களும் கலந்து கொள்கிறார்.
மற்றும் மீனவர் விடுதலை வேங்கைகள் இரா. மங்கையர்செல்வம், மதிமு.க தூ.சடகோபன், தமிழர் தேசிய இயக்கத்தின் இரா. அழகிரி பகுஜன் சமாஜ் கட்சியின் தங்க. கலைமாறன், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு கோ. சுகுமாரன், செந்தமிழர் இயக்கத்தின் ந.மு. தமிழ்மணி, இராஷ்டிரிய ஜனதா தளம் தி. சஞ்சீவி, அம்பேத்கர் தொண்டர் படை சி.மூர்த்தி, புரட்சிப்பாவலர் இலக்கிய பாசறை இராம.சேகர், அகில இந்திய பார்வர்டு பிளாக கட்சியின் மாநிலத்தலைவர் உ.முத்து ஆகியோர் உரையாற்றுகிறாகள்.
விடுதலைச் சிறுத்தைகளின் மாநில அமைப்பாளர் சு. பாவாணன் நூலை பெறுகிறார்.
பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் இதழை பெற்றுக் கொள்கிறார்கள்.
அ. சிவக்குமார் நன்றி செல்கிறார்.
Sunday, November 30, 2008
செயலலிதாவை போல் ஒரு மனநோயாளி யாருமில்லை
படியுங்கள் கருணாநிதி அறிக்கை:
“தம்பி முரசொலி மாறனின் உடல்; கோபாலபுரம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போது; இறுதி அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் தெரியுமே; அடுத்த தெருவில் ஜெயலலிதா வீட்டார் பட்டாசு கொளுத்தி; அது பகல் முழுதும், இரவு முழுதும் வெடித்த சப்தத்தை அவர்கள் எல்லாம் கேட்டார்களே; அது போலத் தான்; இப்போது மழை வெள்ளப் பாதிப்பால் மக்கள், அந்த மக்களின் துயர் துடைத்திட நாம் துடித்துத் தொண்டாற்றும் போது; ஜெயலலிதா மட்டும், அன்று மாறனின் மரணத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடியது போல, இப்போதும் வெள்ளத் துயர் துடைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்த அரசை, நம் உள்ளம் பதறிட வார்த்தைகளைப் பட்டாசாக வெடித்து "மக்களுக்கு நிவாரண உதவியே அரசு செய்யவில்லை'' என்று "டான்சி புகழ்'' ஜெயலலிதா, மகாமகப் புளுகு புளுகுகிறார் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.”
முழுமையான தகவலுக்கு மகாமகப் புளுகு புளுகுகிறார் ஜெயலலிதா: கருணாநிதி : நன்றி வெப்துனியா.


Saturday, November 22, 2008
ஈழத்தமிழனின் அழிவில்தான் அரசியல் செய்ய வேண்டுமா:திருமாவளவன் ஜெயலிதாவுக்கு பகிரங்க கடிதம்!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் அவர்களுக்கு வணக்கம். எளிதில் சந்திக்கவியலாத தலைவர் நீங்கள். கூட்டணியில் இருந்தபோதே இயலவில்லை. இப்போது எப்படி சந்திக்க முடியும்? ஆகவேதான் இந்த மடல்.

மற்ற கட்சித் தலைவர்களிலிருந்து நீங்கள் முற்றிலும் மாறுபட்ட தலைவராக இருக்கிறீர்கள். சொந்தக் கட்சி அலுவலகத்திற்குச் செல்வதையே, பரபரப்பாக்கும் ஒரே பகட்டுத் தலைவர் நீங்கள்தான்.
எதிலும் மாறுபட்ட சிந்தனை! மாறுபட்ட அணுகுமுறை! ஈழத்தமிழர் சிக்கலிலும்கூட அப்படித்தான்! தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவருமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற பாதுகாப்புக் கோரும்போது, நீங்கள் மட்டும் உங்களுக்குப் பாதுகாப்பு கேட்டுக் குரல் எழுப்புகிறீர்கள். எல்லோருமே இந்திய அரசையும் சிங்கள அரசையும் எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பும்போது, நீங்கள் மட்டும் தி.மு.க. அரசை எதிர்த்துப் போராட்டங்களை நடத்துகிறீர்கள்! இருபத்தைந்து ஆண்டுகளாக மின்சாரமே இல்லாமல் இருட்டில் உழலும் ஈழத்தமிழர்களுக்காக, இங்கே எல்லோரும் வெளிச்சம் கேட்டு வெகுண்டெழும்போது, நீங்கள் மட்டும், இங்கே நிலவும் சில மணி நேர மின்வெட்டுக்காக கொதித்து எழுகிறீர்கள்! அரசியல் முரண்பாடுகளையெல்லாம் மறந்து, இனமான உணர்வுடன் இணைந்து மற்ற தலைவர்களெல்லாம் மழையிலே நனைந்து மனிதச் சங்கிலியாய் கைகோர்த்து நிற்கும்போது, நீங்கள் மட்டும் தேர்தல் கூட்டணிக்காக யாரோடு கைகோர்க்கலாமென்று துடியாய்த் துடிக்கிறீர்கள்!
புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில், ஈழத்தமிழினத்தையே அழித்தொழிக்கும் இந்திய - சிங்கள அரசுகளின் கூட்டணியை உடைக்க, ஒட்டுமொத்த தலைவர்களும் ஒன்றுபட்டு முயற்சிக்கும்போது, நீங்கள் மட்டும் தி.மு.க. கூட்டணியை உடைக்கவே படாதபாடு படுகிறீர்கள். சிங்கள இனவெறியர்களால் பட்டினி கிடந்து சாகும் ஈழத்தமிழர்களுக்காக, இங்குள்ள தலைவர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் தம்மால் இயன்ற நிதியைத் தாயுள்ளத்தோடு அள்ளிக் கொடுக்கும்போது, நீங்கள் மட்டும் இரக்கமே இல்லாமல் இறுக்கமாயிருக்கிறீர்கள்! கடுமையான விமர்சனங்களால் கூட்டணி உறவே முறிந்துபோன நிலையிலும், பா.ம.க.வும், இந்திய அரசோடு ஏற்பட்ட முரண்பாடுகளால் கூட்டணியிலிருந்து வெளியேறிய இடதுசாரிகளும்கூட, ஈழத்தமிழரைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தில், முதல்வரின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை அழுத்தமாக வைத்து வலுவாகக் குரலெழுப்பினர். ஆனால், நீங்களோ அந்தக் கூட்டத்திற்கு உங்கள் கட்சியிலிருந்து யாரையுமே அனுப்பாமல் புறக்கணித்துவிட்டீர்கள்.
ஒரு பீகாரியை மும்பையிலே கொன்று விட்டார்கள் என்பதற்காக, பீகார் மாநில கட்சித் தலைவர்கள் அனைவருமே எதிர் எதிர் துருவங்களிலிருந்த நிலைமாறி, ஒன்றுபட்டு நிற்கும்போது, நீங்கள் மட்டும் ஈழத்தமிழினத்தையே அழிக்கும் இனப்படுகொலையைக் கண்டும்கூட, தி.மு.க.வுடனான முரண்பாட்டையே முன்னிறுத்தி, தமிழின ஒற்றுமையைச் சிதைப்பதிலேயே குறியாக இருக்கிறீர்கள்! விடுதலைப்புலிகளால் தங்களின் உயிருக்கு ஆபத்து என்று அடிக்கடி சொல்லுகிறீர்கள்! `கருப்புப் பூனை' பாதுகாப்புக்காகவே விடுதலைப் புலிகளை எதிர்க்கிறீர்கள்!
இருந்தாலும், விடுதலைப்புலிகளைச் சாக்குவைத்து அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறீர்கள். விடுதலைப்புலிகளை தி.மு.க. ஆதரிப்பதாகப் பழி சுமத்தி, காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கும் சிக்கலுண்டாக்கப் பார்க்கிறீர்கள்! `திருமாவளவனைக் கைது செய்' என்று வற்புறுத்தி, விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தி.மு.க.வுக்கும் இடைவெளி உண்டாக்கவும் பார்க்கிறீர்கள்! ஈழத் தமிழன் பூண்டோடு அழிந்தாலும், சிங்களவனை எதிர்ப்பதைக் காட்டிலும் தி.மு.க.வை எதிர்ப்பதுதான் உங்கள் அரசியல் என்பதை நிலைநாட்டி வருகிறீர்கள்! விடுதலைப் புலிகளை எம்.ஜி.ஆர். ஆதரித்தார்! பொருளுதவிகளைச் செய்தார்!
நீங்களும் ஆதரித்தீர்கள்! இது நாடறிந்த உண்மை! ஆனால், உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! அன்றைய நாளிலிருந்து இன்றைய நாள்வரை எப்போதாவது தி.மு.க. விடுதலைப் புலி களை ஆதரித்ததுண்டா? தொடக்கத்திலிருந்து `டெலோ' இயக்கத்தையும், பெரியவர் அமிர்தலிங்கம் போன்றவர்களையும் தானே தி.மு.க. ஆதரித்து வந்தது! அன்றும் இன்றும் தி.மு.க. விடுதலைப்புலிகளைக் கடுமையாக விமர்சிக்கிறது என்பதுதானே உண்மை! ஆனாலும் விடுதலைப்புலிகளைக் காரணம் காட்டி, சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. அதையே இப்போதும் செய்யவேண்டுமென்பதுதானே உங்கள் ஆசை!
உங்கள் ஆசை நிறைவேற, ஈழத்தமிழனின் அழிவில்தான் அரசியல் செய்ய வேண்டுமா? தமிழர்களின் தயவால், தலைவராக வலம் வரும் நீங்கள், தமிழர்களின் வாக்குகளால் ஆட்சியதிகாரத்தைச் சுவைத்த நீங்கள், தமிழர்களைக்கொண்டே மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் நீங்கள், அதே தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி, இளிச்சவாயர்களாக்கி, தமிழினத்துக்கெதிராகவே செயல்படும் போக்கு நியாயம்தானா? இது தமிழினத்துக்கு எதிரான துரோகமென்று ஒரு நொடிப் பொழுதாவது உங்கள் நெஞ்சு உறுத்தவில்லையா? திடீரென்றா புலிகள் ஆயுதமெடுத்தார்கள்! காலம் காலமாய் சிங்களவன் செய்துவரும் கொடுமைகளுக்கு ஒரு வரம்பு உண்டா? உலகமே அறிந்திருக்கும் இந்தக் கொடூரம் உங்களுக்குத் தெரியாதா? எந்த அடிப்படையில் சிங்களவனை ஆதரிக்கும் வகையில் உங்களால் செயல்பட முடிகிறது? `செஞ்சோலை' என்னும் பள்ளியில் குண்டு போட்டு சின்னஞ்சிறு பிஞ்சுகளைக் கொன்றழித்த கொடுமையைக் கண்ட பிறகுமா, நீங்கள் சிங்களவனின் போக்கை ஆதரிக்கிறீர்கள்?
இங்கே தலைவர்கள் எல்லாம் தாயுள்ளத்தோடு பதறும்போது, நீங்கள் மட்டும் எப்படி இப்படி?
நீங்கள் இதிலும் மாறுபட்டவர்தான்! ஆனால், மாறாதவர்!
தோழமை கலந்த வேதனையுடன்...
நன்றி - குமுதம் வார இதழ்
நன்றி தமிழ் செய்தி
Wednesday, November 19, 2008
இறையாண்மை இல்லாத இந்தியா
விடுதலைப் புலிகளுடன் நடந்து வரும் போரின்போது அவர்களுடன் மோதி உயிரை விட விரும்பாத ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவத்தை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார்கள். அவர்களைக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து தலைமறைவாகி விட்டவர்களில் 6749 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ராணுவ கோர்ட்டில் விசாரணைக்கு நிறுத்தப்பட்டனர். விசாரணை முடிவடைந்த 1500 பேர் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
முழுமையான செய்திக்கு ராணுவத்தை விட்டு ஓடிப் போன 1500 சிங்கள வீரர்களுக்கு சிறை படிக்க இங்கே சொடுக்கவும்.
Tuesday, November 18, 2008
ஏய் இராஜபக்சே போரை நிறுத்தடா !!
எம் தாய் தமிழ் சொந்தங்களை சுட்டுக்கொன்று குவிக்கிறாயே ! மானிதாபிமானமற்ற கொடுங்கோலா !!
உடனே போரை நிறுத்து.!
இராணுவ ரீதியாக இனப்பிரச்சனைய தீர்க்க முடியாது என்று புரிந்து கொள்ள உனக்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை.
நீ பூநகரியை பிடித்துவிட்டாய் !!
மாங்குளத்தையும் பிடித்துவிட்டாயாம்.
நாளை நீ கிளிநொச்சியையும் பிடிக்கலாம்.
அறிவுகெட்ட இராஜபக்சே நீ ஒன்றை புரிந்து கொள்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் தன் தந்தையை இழந்த சிறுவன பல ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து தேசம் சென்று தன் தந்தையை கொன்ற கொலை வெறியன் ஜெனரல் டயரை சுட்டு கொன்றதாய் வரலாறு சொல்கிறது. இந்த வரலாற்றிலிருந்து எதையும் பிரிந்து புரிந்து கொள்ளாத ஒரு அடிமுட்டாளாக நடந்து கொள்கிறாய் நீ.
இந்த வரலாற்றிலிருந்து நீ ஒன்றை புரிந்து கொள். இன்று துப்பாக்கி முனையில் செய்கிற உன் முறையிலான அமைதிப்போரின் இறுதி வெற்றி உனக்கல்ல. இன்று இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் போல் எத்தனையோ எனது தாய்மார்கள், குழந்தைகள், சிறுவர்களின் இதயம் எரிந்து கொண்டிருக்கிறது. இதயத்தில் எரிகிற நெறுப்பு ஒரு நாள் மீண்டும் வெடித்து சிதறும் என்பதை மட்டும் மறந்து விடாதே!
உன் துப்பாக்கி முனையிலான அமைதியின் விளைவாக நீயும் ஒருகாலத்தில் ஜெனரல் டயரின் நிலைக்கு உள்ளாவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே!.
Friday, November 14, 2008
புதுச்சேரியில் தமிழீழ ஆதரவு குரல்கள்- சுவரொட்டிகள் மற்றும் நிகழ்வுகள்
நாளை சனிக்கிழமை 15-11-2008 மாலை ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்து இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தி போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தெருமுனைக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில், சின்னக்கடை, நேரு வீதி, ஆனந்த இன் உணவகம் அருகில், முத்தியால் பேட்டை மணிகூண்டு, லாசுப்பேட்டை, பாக்குமுடையான் பேட்டை, சாரம், பெரியார் சிலை, பழையப் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடை பெற உள்ளது.
Monday, November 03, 2008
புதுச்சேரியில் இலங்கைப் பிரச்சனை ஒட்டி விடிய விடிய ஆர்பாட்டம் 400க்கும் மேற்பட்டோர் கைது
இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு செயலாளர் பாவாணன், பெரியார் திராவிடர் கழகம் லோகு அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த அழகிரி, விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வம், ராஷ்டிய ஜனதா தளம் சஞ்சிவி, , செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, பகுஜன் சமாஜ் கட்சி தங்க. கலைமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ”சோனியாகாந்திக்கும் இராசீவ் கொலையில் தொடர்பு உள்ளது” என்று சுப்பிரமணியசாமி எழுதியதை எந்த காங்கிரசுக்காரர்களும் எதிர்க்கவில்லை எங்களைப் போன்றவர்களை எதிர்க்கிறீர்கள் என தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த இரா.அழகிரி பேசினார், மேலும் உள்ளூர் பிரச்சனை தொடர்பாக இளைஞர் காங்கிரசு பிரமுகர் ”பாண்டியனை” கண்டித்து அழகிரி பேசியதை தொடர்ந்து பாண்டியனுக்கும் உண்ணாவிரத போராட்டக்குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதை ஒட்டி தமிழ் உணவாளர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்ததில் 150 க்கும் மேற்பட்டோர் அங்கு ஒன்று கூடினர். எனக்கும் அழைப்பு வந்ததின் பேரில் நானும் களத்தில் நேரில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.
பாண்டியனை கண்டித்து பேசியதற்கான மன்னிப்பு கோரவேண்டும் என தரக்குறைவாக பேசி பாண்டியன் மற்றும் அவருடன் வந்த சிலர் கேட்டனர். அதை தொடர்ந்து பிரச்சனை வளர்ந்தது. இதனைத்தொடர்ந்து காங்கிரசார் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தக்கூடாது என்றும் இவ்வாறு பேசியவர்களை கைது செய்யவேண்டும் கூறி சாலை மறியல் செய்தனர். இதில் புதுச்சேரி காங்கிரசு தலைவர் சுப்ரமணியன் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால், சோனியாகாந்தி மற்றும் இராசீவ் கொலை தொடர்பாக கொச்சைப்படுத்தி பேசியதாலேயே பிரச்சனை செய்ததாக இளைஞர் காங்கிரசு பாண்டியன் பத்திரிகை தொலைகாட்சிகளில் பேட்டி கொடுத்துள்ளார்.
ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல. பிரச்சனையை திசைதிருப்பி மத்திய அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் வல்சராசுக்கு இந்த பட்டினிப்போராட்டம் நடத்திய கட்சிகள் மீது ஏற்கனவே இருந்த முன் விரோதத்தை பயன்படுத்திக் கொண்டு பிணையில் வர இயலாத (case under Section 153 (trying to provoke with the intent of causing riot)) 186, 294, 506/2, 34 IPC, Section 14 (Pondicherry act) ஆகிய பிரிவின் கீழ் தந்தை புதுச்சேரி பெரியார் திராவிடர்க் கழக தலைவர் லோகு. அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத்தின் திரு, இரா. அழகிரி, மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றகழகத்தை சேர்ந்த மூவர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த நிகழ்வுக்குப்பின் அடுத்த கட்டமாக 02-11-2008 ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டு மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 30 நிமிடங்கள் நீடித்த இந்த சாலை மறியலின் பின் இரண்டு பேருந்துகளில் 100க்கும் அதிகமானவர்களை கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கில் திங்கள் மாலை 6 மணியளவில் 77 பேர்மட்டும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத்தின் இரா. அழகிரி மறுமலர்ச்சி திராவிடர்க்கழகத்தின் சந்திர சேகர் ஆகியோருக்கு இது வரை பிணை வழங்கப்படவில்லை.
இந்து பத்திரிக்கை செய்தி -
தினத்தந்தி செய்தி
ஒருபார்வைக்காக இணைத்துள்ளேன்.
புகைப்படம்: இரா.சுகுமாரன்
செய்திகள் அனைத்தும் : நேரடி தொகுப்பு


Thursday, October 16, 2008
புதுதில்லி அனுபவம் : உழைத்து வாழ வயது ஒரு தடையல்ல!
நாங்கள் செல்லும் இடத்திற்கு எவ்வளவு ரூபாய் என்று கேட்ட போது மீட்டர் போட்டுக் கொள்ளலாம் என்று கூறி பயணத்தை தொடர்ந்தார். அவரை பார்த்த போது கசங்கிய, கிழிந்த உடை அணிந்திருந்ததை பார்த்தோம். அவரை விசாரித்தபோது அவர் பெயர் பிரித்தம் சிங் என்பதும் அவருக்கு வயது 71 என்பதையும் தெரிவித்தார். அவர் இருக்கைக்கு அருகில் ஒரு கைத்தடியும் இருந்தது. இந்த கைத்தடியோடு தான் அவர் எங்கும் பயணிக்கிறார்.
இவர் இந்திய விடுதலைக்கு முன் பாகிஸ்தானில் பிறந்து, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போதே புதுதில்லியில் குடிஅமர்ந்தவர் என தெரிவித்தார். தலையில் உள்ள தலைப்பாகையை பார்க்கும் போதும் பேசியதிலிருந்தும் அவர் சீக்கியர் என அறிந்து கொண்டோம். சீக்கியர் இப்படித்தான் இந்த வயதிலும் கடுமையான உழைப்பவர்களாக இருக்கிறார்கள் என நண்பர் வெங்கடேஷ் சொன்னார்.
இந்த முதிய வயதிலும் இந்த வேலை செய்கிறீர்களே என்று கேட்டபோது ஆம், "உழைத்தால் தான் வாழ முடியும், சாகிறவரை உழைப்பேன்" என சாதாரணமாக குறிப்பிட்டார். அவர் குடும்பத்தில் அவர் மகன்கள் இருந்த போதும் இவர் தன் மனைவியுடன் தனியாக வசித்துவருகிறார். அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இவர் மீது அக்கரை செலுத்தவில்லை என்பது அவரிடம் நடத்திய உரையாடலிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டோம். தில்லி அரசு முதியவருக்காக வழங்கப்படும் ஓய்வூதியமாக ரூபாய் 1000/- பெறுவதாகவும் அது அவருக்கு போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டார்.
காலை 8 மணியிலிருந்து எட்டுமணிநேரம் மட்டுமே வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். பயணத்திற்கு மீட்டர் போட்டு மட்டுமே கட்டணம் வசூல் செய்கிறார். வழக்கமாக ரூபாய் 70/-, 80/- கொடுத்து பயணம் செய்த எங்களுக்கு அவர் வண்டியில் வந்த போது எங்களுக்கு 42/- ரூபாய் மட்டுமே வந்தது, அந்த தொகையை மட்டுமே அந்த பெரியவர் கேட்டார், இருப்பினும் நண்பர் வெங்கடேசு அவரின் கதையை கேட்டு 50/- கொடுத்து சில்லரை வேண்டாம் என தெரிவித்தார், நானும் 50/- ரூபாய் கூடுதலாக கொடுத்தேன், சிறிய தயக்கத்தோடு தான் கூடுதல் பணத்தை வாங்கிக்கொண்டார்.
இவரின் முதுமை, அவரது செயல் எங்களை அதிகம் சிந்திக்க வைத்தது.
உழைத்து வாழ வயது ஒரு தடையல்ல என்பதை எங்களுக்கு உணர்த்தினாலும் இளைய சமூகம் முதியவர்கள் மீது அக்கரை செலுத்த வேண்டும் என்பதை மற்றவர்களுக்கு வலியுறுத்தவேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டோம்.
அவருடைய நேர்மையான அணுகுமுறையும், தளராத எண்ணங்களும் எங்களை மிகவும் நெகிழ செய்தது.
Friday, September 05, 2008
வைத்திலிங்கம் தலைமையிலான புதுச்சேரி அரசுக்கு ஆயுள் குறைவு
கடந்த சில தேர்தல்களில் காங்கிரசு அரசு தோற்றுவருவதால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசு அரசு தோல்வியை சந்திக்கும் என்ற நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.
அ.இ.அ.தி.மு.க வின் மாநில அமைப்பாளர் அன்பழகன் சென்ற ஆட்சியில் கிடைத்த நன்மைகள் இந்த ஆட்சியில் கிடைக்கப்போவதில்லை என்று புதிதாக பெறுப்பேற்றுள்ள வைத்திலிங்கம் அரசு பற்றி கருத்து தெரிவித்துள்ளார். ரெங்கசாமி, வைத்தியலிங்கம் தலைமையிலான ஒரே காங்கிரசு அரசு என்றாலும் வைத்திலிங்கம் அரசு மீது பலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
கூட்டணியில் உள்ள தி.மு.க முன்னாள் முதல்வர் ந. ரெங்கசாமிக்கே தனது ஆதரவை தெரிவித்திருந்தது. ஆனால், வைத்திலிங்கம் அரசுக்கு தனது ஆதரவை முழுமனதோடு தெரிவிக்க வில்லை என்றே தெரிகிறது. மத்திய அரசில் அங்கம் வகிப்பதாலும் தி.மு.க தலைமைக்கு கட்டுப்பட்டே அவர்கள் அமைதியாக இருப்பதாகவும் தெரிகிறது.
அதேபோல ரெங்கசாமி வன்னியர் இனத்தை சார்ந்தவர் என்பதால் பா.ம.க கட்சியும் ரெங்கசாமிக்கு எதிராக வைத்திலிங்கம் அரசுக்கு மனப் பூர்வமான ஆதரவை வழங்கவில்லை , மத்தியில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிப்பதால் அக்கட்சியும் வேறு வழி இல்லாமல் வைத்தியலிங்கம் அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளது என்றே தெரிகிறது.
அதேபோல சிபிஅய் கட்சியும் வைத்தியலிங்கம் அரசுக்கு ஆதரவு வழங்கவில்லை. இக்கட்சி மறைமுகமாக முன்னாள் முதல்வர் ரெங்கசாமிக்கே தனது ஆதரவை அளித்து வந்தது. ஆனால், தற்போது அமைந்துள்ள புதிய அரசு பற்றியும் ஒரு அதிருப்தியை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
மொத்தம் 30 சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி சட்டப் பேரவையில் மொத்தமாக 10 உறுப்பினர்கள் மட்டுமே காங்கிரசு கட்சியில் உள்ளனர். இந்நிலையில் கூட்டணி கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைதுள்ள காங்கிரசு கட்சி எதிர்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளது.
கூட்டணி கட்சியின் ஆதரவு சம்பிரயப்பூர்வமானதே தவிர மனப்பூர்வ மானதாக காங்கிரசின் வைத்திலிங்கம் அரசுக்கு இல்லை என்பதால் "காங்கிரசு கட்சியின் மத்திய அமைச்சரும் புதுச்சேரி மாநிலங்கள் அவை உறுப்பினரான நாரயணசாமி" எதிர்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரசு கட்சி தலைவர் எ.வி. சுப்ரமணியன் எதிர்கட்சிகள் இனிமேல் காட்டு தர்பார் நடத்த முடியாது என்று கூறியுள்ளார். இனிமேல் என்று சொல்வதன் காரணம் ஏற்கனவே தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆதரவு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இராமதாசுவின் ஆதரவு ரெங்கசாமிக்கு இருந்ததால் புதிய ஆட்சி மாற்றத்திற்கு போதிய ஆதரவு இல்லாமல் இருந்ததால் ஆட்சி அமைத்துவிட்டோம் என்ற தைரியத்தில் "எதிர்கட்சிகள் இனிமேல் காட்டு தர்பார் நடத்த முடியாது" என்று கூறியுள்ளார்.
காங்கிரசு கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவை இழந்த முன்னாள் முதல்வர் ரெங்கசாமி உண்மையில் முழுமையான ஆதரவை இழந்தவர் இல்லை. எதிர்கட்சிகளின் ஆதரவு எப்போதும் போல இப்போது உள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் ரெங்கசாமி ஆட்சியை இழந்ததற்கான காரணம் அவரைத்தவிர வேறு யாரையும் சொல்வதற்கில்லை. எல்லா விசயங்களிலும் அளவு கடந்த பொருமை இவரின் ஆட்சிக்கு எதிராக இருந்துள்ளது.
செய்தி ஆதாரங்கள் நன்றி: தினமலர்
Wednesday, August 20, 2008
பிளாகர் தளம் தமிழில் வந்துவிட்டது
ஆனால் இன்று மாலை நான் பார்த்தபோது Google.co.in offered in: Hindi Bengali Telugu Marathi Tamil Gujarati Kannada Malayalam Punjabi என இருந்தது, கூடுதலாக குஜராத்தி, கன்னடம், மலையாளம் பஞ்சாபி ஆகிய நான்கு மொழிகளில் புதிதாக சேவை வழங்கப்பட்டிருந்தது.
பிளாகர்ஸ் ட்ராப்டில் தமிழுக்கான வசதி புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது, தேவையானோர்கள் இந்த தளத்திற்கு செல்ல http://draft.blogger.com/ முகவரிக்கு சென்று உள்ளே செல்ல வேண்டும். . பின்னர் மொழி பகுதியில் தமிழ்மொழியை தேர்வு செய்தால் உங்கள் பிளாக் தளத்தின் கட்டுப்பாட்டு பகுதி முற்றிலும் தமிழாக மாறிவிடும்.
தமிழ் மொழி தேர்வு செய்தால் அதன்பின் வரும் பின்னூட்டங்களின் மின்னஞ்சல்கள் வரும்போது மின்னஞ்சலின் தலைப்பில் எழுத்துறுக்கள் சரியாக வரவில்லை, வரைவு பிளாகர் என்பது சோதனை அடிப்படையில் இப்போது வெளியிடப்பட்டுள்ளதால் முழுமையான சரிசெய்யப்பட்ட அளவில் இது பிளாகர் தளத்தில் வெளியிடப்படும் என்று கருதலாம்.
முயற்சியுங்கள், தமிழை பயன்படுத்துங்கள் தமிழராகிய நீங்கள் தமிழை பயன்படுத்தாமல் ஆங்கிலம் பயன்படுத்தினால் யார் தமிழை பயன்படுத்துவது?
அதனால் இப்போதே தமிழுக்கு மாறுங்கள்,
Wednesday, July 23, 2008
அமெரிக்க மோகன் சிங்கின் வெற்றி - பண நாயகத்திற்கு கிடைத்த வெற்றி
வெற்றி பெறுவதற்கு காங்கிரசு அரசு கொட்டிக்கொடுத்த கத்தை கத்தையாகப்பணம் வாக்குமாறி போடுதல், வாக்களிக்க வராமால் இருத்தல், பாராளுமன்றத்திற்கே வராமல் இருத்தல் ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணமெல்லாம் எங்கிருந்து வந்தது? இவையேல்லாம் மக்கள் வரிப்பணத்தில் திருடியவை தான்.............. இவ்வாறு கொடுக்கப்பட்ட பணத்தை இந்திய பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டள்ளது. இவர் நடவடிக்கை எடுக்கப்போராராம், ............................... இவரே பதவிவிட்டு விலகத்தயாரில்ல! அவுங்க மேல இவரு நடவடிக்கை எடுக்கப்போராராம்?.................. நீங்க நம்பித்தான் ஆகனும்...........................
இதுக்கு பேருதான் இந்திய பணநாயகத்தின் வெற்றி.
ஆட்சியே போனாலும் பரவாயில்லை, ஆனால் அமெரிக்க எசமானுக்கு சேவை புரிவதில் மட்டும் அமெரிக்க மோகன் சிங் தயங்கியதில்லை. இந்த மோகன்சிங்குக்கு இந்தியாவைவிட அமெரிக்கதான் தேவை. அப்படி என்ன ஆட்சியை விட அமெரிக்க ஒப்பந்தம் தான் முக்கியமா? என்றால் ஆம், எசமான் சொல்வதை ஏவல் சிங் செய்து தான் ஆகவேண்டும்.
இவருக்குத் தெரியும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை என்று அதனால் தான் இவ்வளவு அவசரம் காட்டினார். ஆட்சி போனாலும் பரவாயில்லை அணு ஒப்பந்தந்தத்தை நிறைவேற்று என அமெரிக்க மோகன் சிங்கிற்கு எசமான் அமெரிக்கா உத்தரவை ஏற்று இந்த நாடகம் முடிந்துள்ளது.
இந்தியாவிற்கு உடனடியாக ஒரு அடிமை சாசனம் எழுத அதரவாக 275 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். எதிராக 256 பேர் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.
Saturday, June 14, 2008
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நடத்தும் இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் கருத்தரங்கம் - சுவரொட்டி
நிகழ்ச்சி இடம் புதுச்சேரி பேருந்து நிலையதிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, புதுச்சேரி அண்ணாசிலை அருகில் உள்ள கம்பன் கலை அரங்கம் அருகில் ரூபாய் 2.50 கொடுத்து டெம்போவில் வந்து இரங்கலாம், அருகில் உள்ள பெட்ரோல் வங்கியை ஒட்டிய வழியாக நடந்தால் சுமார் 120 அடி நடந்தால் கிழக்கு நோக்கி செல்லும் வீதி கந்தப்பா வீதி இடதுபுறமாக இரண்டாவது கட்டிடம் "ஓட்டல் லீ ஹெரிட்டேஜ்" அனைவரும் வருக.

(சுவரொட்டியில் திருவள்ளுவர் படம் சரியாக இல்லை, எனவே திருவள்ளுவர் படம் "போட்டோ சாப் வேலைப்பாடு")
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் " புதுச்சேரியில் கருத்தரங்கு
இதில் தமிழ்மணம் நிர்வாகி திரு சொ. சங்கரபாண்டி அவர்கள்இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் பற்றியும்,
தமிழ்மணத்தின் நிறுவனரான திரு காசி. ஆறுமுகம்தமிழ்மணம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பிலும்
திரு தமிழ் சசிஉலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் வலைப்பதிவுகள்
என்ற தலைப்பில் கருத்துரையாற்றுகின்றனர். அனைவரும் வருக,
அழைப்பு இணைத்துள்ளேன்.
வருக வருக அனைவரும் வருக.

Thursday, June 12, 2008
சாகித்திய அகாதமியைக் கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்
சாகித்திய அகாதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக புதுச்சேரி அரசின் பரிந்துரையின்படி மகரந்தன, தமிழக அரசின் பிரதிநிதியாக இராம.குருநாதன், பல்கலைக்கழக பிரதிநிதியாக இரா.மோகன் மற்றும் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாக சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தமிழ்மொழியின் ஒருங்கிணைப்பாளராக சிற்பி பாலசுப்ரமணியத்தை மற்ற மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து தேர்வு செய்தனர். மேலே உள்ள நான்கு பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து மேலும் 6 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படியில் புதுச்சேரி மகரந்தன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மூவர் பெயரை ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்ரமணியத்திடம் அளித்துள்ளார். ஆனால், இவர் பரிந்துரை செய்த ஒருவரையும் நியமிக்காமல் தன்னிச்சையாக தனக்கு வேண்டிய ஒருவரை சிற்பி நியமித்துள்ளார். பரிந்துரையின் அடிப்படையிலோ அல்லது மற்ற உறுப்பினர்களை கலந்தாலோசனையின் அடிப்படையிலோ அவர் தேர்வு செய்யாமல் தன்னிச்சையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது புதுச்சேரி இலக்கிய வட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பணத்தில் இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் தமது உறுப்பினர்களுக்கே வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் போது, பொதுமக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க இயலும் என்று இந்த தமிழ் அமைப்புகள் கோருகின்றன.
மேலும் புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒன்பது திட்டமங்களை மகரந்தன் அளித்திருந்தார் அதில் அத்தனையும் அதன் ஒருங்கிணைப்பாளர் நிராகரித்துள்ளார். புதுச்சேரியோ அதன் அருகிலுள்ள மாவட்டங்கள் எதிலும் நிகழ்ச்சி எதற்கும் இதன் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு ஏன் புதுச்சேரி பகுதியிலிருந்து ஒரு பிரதிநிதி என்று புதுவையைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுபபினர். சென்ற பத்து ஆண்டுகளாக புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக இரண்டே இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன.
அத்துடன் ஆரோவில் (தமிழகம்) பகுதியைச் சேர்ந்த இரா.மீனாட்சி என்பவரை சிற்பி அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர். அவர் தமிழ் இன விரோத சிந்தனை கொண்டவர். எனவே, அவரை திரும்பப் பெற வேண்டும். புதிதாக புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கோரினர்.
புதுவைத் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்தாளர் கழகம், பெரியார் திராவிடர்க் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி பூர்வ குடிமக்கள் உரிமைப் பாதுகாப்பு பேரவை, மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழர் தேசிய இயக்கம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், சமூக நீதி போராட்டக் குழு இராவணன் பகுத்தறிவு இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை உள்ளிட்ட 27 அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் ஒரு தொடக்கம் தான் “சாகித்திய அகாதமியின்” நடவடிக்கை ஏதும் மேற் கொள்ளாமல் புதுச்சேரியைத் தொடர்ந்துப் புறக்கணிக்குமானால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் தெரிவித்தார்.
Sunday, April 06, 2008
நேபாளம் செல்கிறார் புதுவை கோ.சுகுமாரன்

புதுச்சேரி, ஏப். 5: நேபாள நாட்டில் நடக்கும் தேர்தலையொட்டி சர்வதேச தேர்தல் பார்வையாளராக புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்ட மைப்பின் செயலர் கோ.சுகுமாரன் அங்கு செல்கிறார்.
அரசியல் நிர்ணய சபைக் கான தேர்தல் நேபாளத்தில் இம் மாதம் 10-ம் தேதி நடக் கிறது. இதையொட்டி நேபாளத்தைச் சேர்ந்த 148 அரசுசாரா அமைப்புகள் சார்பில் 92 ஆயிரத்து 245 பேரும், உலக அளவில் 500- க்கும் மேற்பட்டவர்களும் தேர்தல் பார்வையாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள 9,801 தேர்தல் மையங்களையும், 20 ஆயிரம் தேர்தல் பூத்துகளையும் பார்வையிடுகின்றனர். கடந்த 1999-ல் நடந்த பொதுத் தேர்லின்போது நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்களை விட இது 30 மடங்கு அதிகம்.
அரசியல் நிர்ணய சபை தேர்தல் பார்வையாளர் கள் அமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் சுகுமா ரன் நேபாளம் செல்கிறார். வரும் ஏப்ரல் 7 முதல் 14- ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து தேர்தல் பணிக ளைப் பார்வையிடுகிறார். பின்னர் திரும்புகிறார்.
தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர தேர்தல் நடக் கும் எந்தப் பகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்கள் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
Saturday, February 09, 2008
புதிய ஒருங்குறி பற்றி பொன்னவைகோ அவர்களிடம் ஒரு நேர்காணல்...........!!!
இலவச கணினி வழங்கி பயிற்சி அளிக்கு விழா வரும் திங்கள் கிழமை பிப்ரவரி 11-ஆம் நாள் காலை 10 மணி அளவில் அந்த ஊரின் நடுநிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை திரு பன்னீர்செல்வம் செய்து வருவதாக வெள்ளி அன்று இரவு துணைவேந்தர் அவர்கள் எனக்கு தொலைபேசியில் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சி பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்து அவர்களை அழைத்துவரும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டுள்ளது. வானூர் பகுதியின் பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு இந்த செய்தி தெரிவித்துள்ளேன்.
இந்நிகழ்ச்சியில் அனவரும் கலந்து கொள்ளுமாறு நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.
....................
சென்ற மாதம் 23, 24 சனவரி 2008 – இல் யுனிகோடு நிறுவனத்துடன் சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்அவர்களும், முனைவர் பொன்னவைகோ அவர்கள் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் அறிந்திருப்பீர்கள்,
வாய்ப்பிருந்தால் புதிய யுனிகோடு நிலைமைகள் பற்றி அவரிடம் ஒரு உரையாடல் அல்லது காட்சிப்படம் எடுக்கலாம் எனத் திட்டம். எனவே, முனைவர் பொன்னவைக்கோ அவர்களிடம் புதிய ஒருங்குறி தொடர்பாக குறிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய தகவல் ஏதெனும் இருந்தால் அன்புகூர்ந்து எனக்கு எழுதும் படி நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
நாளை ஞாயிறு (10-02-2008) மற்றும் திங்கள் அன்று அவரை புதுச்சேரியில் சந்திப்போம். நண்பர்கள் கேள்விக்கான பதில் அவரிடம் கேட்டு வரும் திங்கள் அன்று தெரிவிக்கப்படும் என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.