Wednesday, September 20, 2006

பொருள் மாறும் திராவிடம்

பொருள் மாறிக் கொண்டே வரும் திராவிடம் தேவைப்படுகிற ஆய்வு!

திராவிடம் என்பது தமிழ் என்பதே ‘திரமிள்’- திரமிட்’ என்றும், பின்னர் ‘திராவிட’ என்றும் சமஸ்கிருத ஆரியத்தினரால் கூறப்பட்டு வந்தது என்பது பாவாணரின் தெளிவுரை.

“நாகர் நிலமாய் விரிந்திருந்த நாவலந் தீவின் மக்களான நாகர்களின் மொழியான தமிழ்-திரமிள்-திரமிடம்-திராவிடம் எனத்திரிந்து வழங்கப் பெற்றது” என்று ஆய்ந்து விளக்கினார் அம்பேத்கார்.


‘பவழத்தை’ - ‘பிராவளம்’ –என்றும், ‘படி’யை –ப்ரதி- என்றும் கூறியது போல் ‘தமிழை’த் திரமிள்- திரமிட்- திராவிட் என்றனர்.

தமிழ் என்பதை உலகத்தில் அன்றைய மொழி வழக்கினர் பலர் அவ்வகையில் ஒலிப்பு மாற்றியே சொல்லிவந்தனர். தமிழை ‘தமிரிகே’ என்று ரோமானியர்கள் டாலமி- ரேவண்ணா ஆகியோரின் உலகப் படவரைவில் குறிப்பிட்டிருந்தனர்.

அதே போல சமக்கிருத இலக்கியங்களில் தமிழை ‘த்ரமிட்’ என்றே குறிப்பிட்டு வந்தனர்.

ஆக தொடக்கத்தில் தமிழ் என்பதன் ஒலிப்புச் சிதைவே திராவிடமாக குறிப்பிடப்பட்டது. எனவே தான் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்குள் பரவியிருந்த சமணத்தால் தமிழ் பாலிமொழிக் கலப்பால் –தமிழர்கள் ‘திராவிடர்’ என்பதாக ஒலிப்பு ச்சிதைக்கப் பட்டு ‘திராவிடச்சங்கம்’ என்கிற வகையிலேயே இயங்கினர்.

அதன் பின்னர் தொடர்ந்து தமிழர்கள் தமிழைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் தமிழ் என்பதாகவும், ஆரியக் கருத்தொற்றியவர்களால் எழுதப்பெற்ற இடங்களில் எல்லாம் திராவிடம் என்பதாகவும் கூறப்பட்டது.


திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லல்ல. மாறாக அது சமக்கிருத சொல்..

................................


ஆரியத்தை எதிர்த்த தமிழிய இலக்கியங்கள் ஆரிய ஆதிக்க அரசுகளால் அழிக்கப் பட்டன. தமிழில் வளர்ந்து இருந்த சிறந்த வானியல், மருத்துவ, மெய்யியல் இசை மற்றும் பிற அறிவு சார்ந்த நூல்கள் சமக்கிருத மொழிமாற்றம் செய்யப்பட்டதோடு மூல தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டன. பிறக்காலச் சோழர்களது ஆட்சியிலும் நாயக்கர் காலத்திலும் மராட்டிய சரபோசி ஆட்சிக்கால அரசுகளும் இவற்றையே திட்டமிட்டு செய்தன.

18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த ‘கால்டுவெல்’ எனும் மொழியியல் அறிஞரால் திராவிடம் பற்றிய கருத்துக்கள் வலுப்பெற்றன.

இந்தச்சூழலில் ‘திராவிடம்’ என்கிற கருத்தும், ‘திராவிடர்’ எனும் இனக்கோட்பாடும் திராவிடம் எனும் மொழி இருந்ததாகவும் பெருமளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதே சூழலில் தமிழ் அறிஞர்கள் அதை ஒப்புக் கொள்ளவில்லை. திராவிடம் எனும் மொழியில்லை என்றும், தமிழிலிருந்து தான் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் ஆரியக் கலப்பால் உருக்கொண்டன என்பதை நிறுவினர்.

“ கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன் உதிரத் துதித் தெழுந்து
ஒன்றுபல வாயிடினும்”

- என்னும் கருத்துக்களில் தமிழிலிருந்து பிறமொழிகள் தோன்றின எனக்கூறியதோடு, அம்மொழிகள் இணைந்த ‘திராவிடர்’ என்பதால், திராவிடர் எழுச்சிப் போராட்டமாகவும் மாறியது.

வேதங்களும் வைதீகமும் ஆரிய வர்க்கம் என்பதை இந்தியா என்பதகவும்...... பார்ப்பன எதிப்பு பார்ப்பனர் ஆளுமைக் குரிய நாடான இந்தியாவை மறுத்து திராவிட நாட்டு அடையாளமாக அந்த நான்கு மொழிகளின் பயன்பாட்டுக்குரிய பகுதியை அடையாளப் படுத்தியது.


திராவிடத்தை உருவாக்கிய ஆரியம்

இந்திய நாட்டிற்கு எதிராக திராவிடநாடு அடையாளப் படுத்தப் பட்டது திராவிட நாட்டு எழுச்சி தமிழகத்தில் வீறுகொண்டு எழுந்தது. இதற்கிடையில் திராவிடம் என்பதை மொழிக்கூறில் உள்ள ஒற்றுமை என்கிற வகையில் மட்டுமே ஒப்புக்கொண்ட தமிழ் அல்லாத பிற மொழியினரால் திராவிட நாடு கோரிக்கையோடு ஒன்று பட இயலவில்லை.


...............................
திராவிடம் என்பது வரையறுக்கப் பட்ட தேசமோ, ஒரு சமுகமோ, ஒர் இனமோ அல்ல என்பதால்தான் அதனால் ஒரே காரணம் கொண்டு எழுச்சியுறவோ, போராடவோ போராடி ஆரியத்தி வீழ்த்தவோ முடியாது என்கிற முடிவுக்கு வரமுடிகிறது.

.......................

திராவிடம், திராவிடம் என வரலாறு அறியாமல் இல்லாத திராவிடத்தை ஒரே அணியில் திரட்டுவதில் நம்பிக்கை கொண்டு அதில் தமிழ்த் தேச எழுச்சி அமிழ்ந்து போனதால் எற்பட்ட பின்னடைவு போக,.......

இந்தியப் பார்ப்பனியத்தின் மீதும், பார்ப்பனக் கட்டமைப்பின் மீதும் ஓங்கை அறைந்து அவற்றை உடைத்தெரிகிற பேராற்றலைத் தமிழ்த் தேச உணர்ச்சிக்கு ஊட்டி வளர்க்க வேண்டிய தேவைக்குரிய சூழலாகும் இது..............................

(முக்கியப்பகுதி மட்டுமே வெளியிடப் ப்ட்டுள்ளது)

நன்றி: உழைக்கும் மக்கள் தமிழகம்

Tuesday, August 08, 2006

புலிகள் ஆதரவு - அடங்கிப்போக வேண்டுமாம்

புலிகள் இயக்கத்தை தடை செய்ததற்கு சரியான காரணத்தை இந்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

அதனால் தான் தமிழக முதல்வர் விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை விவாதிக்கலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் ஈழம் கிடைத்தால் அது தமிழகத்தில் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணியே இந்திய அரசு தமிழர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறது.

வங்கதேச விடுதலையை எந்த அடிப்படியில் இந்தியா ஆதரித்தது?. முன்பு கூட இலங்கை அரசை தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் தான் இலங்கை போராளி அமைப்புகளுக்கு இந்தியா பயிற்சி அளித்தது. வங்க தேசத்திற்கு ஆதரவு அளித்த அதே அடிப்படையில் ஈழப்போராளிகளுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும்.

இது அரசியல் சமுகப்பிரச்சனையேத் தவிர தனிப்பட்ட அரசியல் விரோத நடவடிக்கை இல்லை என்பதை உணர வேண்டும்.

  • தேசிய விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக இழிவு படுத்தாதே!
  • விடுதலைப் புலிகள் மீதான் தடையை நீக்கு!
  • தமிழ் ஈழத்தை அங்கீகரி!
  • சிங்கள இனவெறி அரசுக்கு உதவிகள் செய்யாதே!
  • சிங்கள இராணுவமே தமிழ் ஈழப்பகுதியிலிருந்து உடனே வெளியேறு!

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 27-07-2006 அன்று திருவண்ணாமலையிலும், 31-07-2006 அன்று திருப்பத்தூரிலும் புரட்சிகர இளைஞர் முண்ணனி என்ற அமைப்பு பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: சிங்கள இனவெறி அரசை கண்டித்து கடந்த 31ம் தேதி புரட்சிகர இளைஞர் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் பேரணி நடத்த
அனுமதி கேட்டுள்ளனர். பேரணி உட்பட ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 150 பெண்கள் உட்பட 400 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் எந்த பதட்டமும்
இல்லை. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த அளவுக்கு ஆர்ப்பாட்டம் நடப்பது ஏற்கத்தக்கது தான்.

ஜனநாயக்கப்பூர்வமான முறையில் முறியாக காவல்துறையின் அனுமதியின் அடிப்படையில் தான் இந்த அமைப்பு ஆர்ப்பாட்டத்தையும் பேரணியையும் நடத்தியுள்ளது. அதனால் தான் முதல்வர் கருணாநிதிகூட இது ஏற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். சட்டப்படி இந்த ஜனநாயக அமைப்பு முறையில் உள்ள முறைகளைப் பயன்படுத்தித்தான் இவர்கள் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

ஆனால், இத்தகைய சனநாயக உரிமைகளைக்கூட மறுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதை பிரச்சனையாக்குவது இவர்களின் தமிழர் விரோதப் போக்கையே காட்டுகிறது.

தமிழனை அழிக்க தமிழ் மண்ணில் பயிற்சி கொடுக்கும் போது அதை வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஞானசேகரன் சட்ட ஒழுங்கு மீது மிகவும் அக்கரையாக இருப்பதாகவும் இந்திய இரையாண்மை மீது அக்கரை உள்ளவர் போல் பேசி யிருக்கிறார். இந்திரா காந்தி கால கட்டதில் இலங்கை இரையாண்மைக்கு எதிராக காங்கிரசார் செயல்பட்டதை அவர் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

இராசீவ் கொலை காங்கிரசு காரர்களுக்கே தொடர்பு உள்ள நிலையில் மன்மோகன் சிங் அமெரிக்க உளவாளி என்ற தலைப்பில் முன்னணிப் பத்திரிகைகளில் வந்த தகவல் அடிப்படையில் சில தகவல்களை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.

"சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் சி.ஞானசேகரன் இப்பிரச்னையை கிளப்பினார்.

இலங்கையில் தமிழர்கள் போராட்டத்தை ராஜிவ்காந்தி கொலைக்கு முன்பு ஆதரிக்காதவர்கள் யாரும் இல்லை. இப்பிரச்னையில் கி.மு., கி.பி., என்பதைப் போல ராஜிவ் கொலைக்கு முன்பு, ராஜிவ் கொலைக்கு பின்பு என்று தான் பார்க்க வேண்டும். "

என்று அவர் குறிப்பிட்டது சோனியா விதவை ஆகிவிட்டார் என்பது தான் இவரின் வருத்தம். நாமும் அதற்காக வருத்தப்படலாம். ஆனால், இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இலங்கை அரசால் கொல்லப் பட்டு விதவைகளாக்கப் படும் போது அதனை கண்டிக்கக் கூடாது என்று அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி நியாயமாகும்.

Thursday, August 03, 2006

காவிரி நடுவர் மன்றம் - எறுமையில் பயணம்

காவிரி நடுவர் மன்றத்திற்கு மீண்டும் ஆறுமாதம் நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 1991 ஆம் ஆண்டு ஜீன்-25ல் இடைக்கால தீர்ப்பாக 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

அதன் பின் என்னத்தை செய்தார்கள் என்று தெரியவில்லை. மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக வாழ்க்கை நடத்தி வரும் இவர்கள். மக்கள் பிரச்சனைகள் மீது கொஞ்சமும் அக்கரை இல்லாத போக்கினால் தான் இந்த தீர்ப்பு வழங்க 16 ஆண்டுகளுக்கு மேல் எடுத்து கொள்கின்றனர். ஆனால் இன்னும் தீர்ப்பு வழங்கிய பாடில்லை. மேலும் ஆறு மாதம் வேண்டும் என்று கோரி மத்திய அரசிடம் கேட்டு பெற்றுள்ளனர்.

அப்படி என்ன பெரிய வேலை இந்த நடுவர் மன்றத்தில் என்றால் மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இழுத்தடிக்கும் போக்கின் ஒரு வடிவம் தான் இத்தகைய நீதி மன்றங்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக காவிரி நீர் இருந்து வந்துள்ளது. ஆனால், இவர்களின் மெத்தனப் போக்கால் தமிழக மக்கள் என்ன பதினாறு ஆண்டுகள் பாதி சோறு சாப்பிட்டுவிட்டு (அ) பட்டினிக்கிடந்தா சாகமுடியும்.

இடைக்காலத் தீர்ப்பு வழங்கி இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டிருப்பது இவர்களின் சமூக அக்கரையற்ற தன்மையாக தெரிகிறது.

இத்தனைக்கும் காவிரி நதிநீர்த் தொடர்பாக இந்த மாநில அரசுகள் பல்வேறு புள்ளிவிவரங்களை அளித்துள்ளது. இந்த பிரச்சனை நீண்ட நெடும் வரலாறு கொண்டதால் இதுபற்றிய தகவல்கள் பற்றி பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. பல ஆதாரங்கள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றுதான் பெரிய அளவில் தேடி அலைய வேண்டியதில்லை.

இத்தகைய ஆதராம் கண்ணெதிரே கிடந்தாலும் விசாரணைக் கமிசன் என்றால் எப்படி பிரச்சனை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கலாம் என்பதற்கு காவிரி நடுவர் மன்றம் ஒரு சிறந்த உதாரணம்.

16 ஆண்டுகளாக இவர்கள் என்னத்தைக் கிழித்தார்கள் என்றுதான் தெரியவில்லை.

ஆனால், சர்வதேச நதிநீர்ச் சட்டப்படி பல நாடுகளிடையேயான நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஆனால், காவிரி நதிநீர் பிரச்சனை ஏன் தீர்க்கப் படாமல் இருக்கிறது எனத்தெரியவில்லை.

சர்வதேச நதிநீர் சட்டம் இந்த பிரச்சனை தொடர்பாக மிகத் தெளிவான வரையறையைக் கொண்டுள்ளது.

அதாவது, இயற்கையாக வரும் நதிநீரை வரலாற்று ரீதியாக ஒரு பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தால் அந்த நதி நீரை வரலாற்று ரீதியாக பயன்படுத்தும் மக்களுக்கு பதிப்பில்லாத வகையில் அந்த நதியில் மேல் நிலையில் உள்ளவர்கள் நதி நீரைப் பயன் படுத்திக்கொள்ளலாம்.

அந்த நதியின் கீழ் நிலையில் உள்ளவர்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்கள் அனுமதி இல்லாமல் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் அணைகள் ஏதும் கட்டக்கூடாது. நதியில் கீழ்நிலையில் பாதிக்கின்றவகையில் நீரை செயற்கையாக தடுத்து உபயோகிக்கக் கூடாது என்று சர்வதேச நதிநீர்ச் சட்டம் சொல்கிறது. இதன் அடிப்படையில் தான பலநாடுகளில் நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

பல நாடுகளிடையே நதிநீர்ப் பிரச்சனை தீர்க்கப்படும் போது மாநிலங்களிடையேயான நதிநீரை சர்வதேச சட்டத்தின் கீழ் மிக எளிதாக தீர்த்திருக்க முடியும். ஆனால் ஏன் இப்படி இழுத்தடிக்கப்படுகிறது என்றால் தமிழன் தான் எல்லோருக்கும் எமாளி என்பது இவர்களுக்கும் தெரிந்து உள்ளதால் தான் இப்படி நடந்திருக்குமோ என்று தான் கருத வேண்டியுள்ளது.

Wednesday, July 12, 2006

ஆரியர்கள் பூர்வகுடிகளா?

ஆரிய இனம் ஒன்று இல்லை. என்று சொல்லி அதற்கான ஆராச்சியில் ஈடுபட்டு புதிய குழப்பங்களை ஆதாரமாக காட்டப்படுகிறது.
இது போன்ற பொய் செய்திகளை எழுதிவிட்டு பின்னர் இதை வேறு ஒருவர் ஆதாரமாக காட்டி நிறுபணம் செய்யும் வேலையை இவர்கள் செய்வது இன்று நேற்றல்ல.
இவர்கள் நீண்ட நெடுங்காலமாக செய்து வருவதுதான்.
இங்கே பார்ப்பன இனத்தை சேர்ந்த சிலரும் மற்றவர்களும் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்ப்போம்.
"உலகில் தென் இந்தியா மிக உயர்ந்த இடத்தை( ஸ்தானத்தை) ஒரு காலத்தில் வகித்து வந்தது - அது திராவிடர்களால் ஆளப்பட்டு வந்தது. பின்னர் அது நாடோடிகளான ஆரியர்கள் வசமானது."
(பண்டிதர் நேரு - உலக சரித்திரம். - முதல் பாகம்- பக்கம் 2002-2003) 
"இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர்கள் பரவியதைக் குறிப்பதாகும். " (பண்டிதர் நேரு - டிஸ்கவரி ஆப் இந்தியா - பக்கம் - 82)
"இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ- ஆரியர் காலத்தையும் இவர்களுடைய வெற்றிகளையும் உள்நாட்டு சண்டைகளையும் பற்றிக்கூறுவதாகும். இவைகளை நான் உண்மை என்று நான் நம்பவேயில்லை. பஞ்ச த்ந்திரம் அராபியன் இரவுகள் போன்று இது ஒரு கற்பனைக்கதை தான் என்பதே என்கருத்து" (பண்டிதர் நேரு - டிஸ்கவரி ஆப் இந்தியா - பக்கம் - 76-77)


ஆரியர் என்ற ஒரு இனம் இல்லை என்றால் நேரு எதைக் குறிப்பிட்டார்.
"ஆரியர் ஆதிக்கத்தினால் திராவிடர்கள் அடிமை சாதி மக்களாக ஆக்கப்பட்டார்கள்: ஆரியர்கள், தங்கள் நாட்டில் புல்தரை இல்லாததினாலும், மங்கோலியர்கள் அவர்களை விரட்டி அடித்ததினாலும் பிழைப்புக்காக இடம் கண்டுபிடிப்பதற்காகவே வந்தார்கள்". - ஏ. எல். சாண்ட்ர்ஸ்.
"ஆரியர்கள் சமசுகிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்கு கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கே தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண்டார்கள்." -எச். ஜி. வெல்ஸ்
 
பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் திராவிட இனத்தவராகவே இருக்க வேண்டும். அப்படி அவர்களை திராவிடர்கள் தாம் என்றால் ஆரியர் யார் என்று வரையறுக்க வேண்டும். ஆரியரே இந்நாட்டுக்கு வரவில்லை என்றால் பார்ப்பனர்கள் நிறத்தாலும், மொழியாலும், பழக்க வழக்கத்தாலும், குலத்தாலும் வேறுபடுவது ஏன் என்று விளக்க வேண்டும். (பெருஞ்சித்திரனார்- ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள் பக்கம் -15)
இவர்மட்டுமா?
கீழே கேளுங்கள்...........
ஆடுமாடு ஓட்டிகிட்டு பொழைக்க வந்த!- அப்படியே
ஆத்தங்கரை ஓரத்தில டெண்டடிச்ச!
வேத இதிகாசமின்னு சரடு விட்ட!
எங்கள வேசிப்பய புள்ளங்கன்னு எழுதிபுட்ட!
போரதெல்லாம் போகட்டுன்னு பொருத்துகிட்டா!.........
நீதான் பூர்வ குடி இங்கிரியேடா- புளுகு மூட்ட!
போதும் நிறுத்து, போதும் நிறுத்து போதும் நிறுத்தடா!.........
உன் வேசம் இப்போ கலஞ்சிபோச்சி பேச்சை நிறுத்தடா!.............
தொடப்பம் எடு எடு..........,
செறுப்ப எடு எடு...........
ஓடடா ஓடு, .................ஓடடா ஓடு....................
( அசுர கானம் : ம.க.இ.க -வின் பாடல்).


மேலே குறிப்பிட்டுள்ளவற்றை பார்த்தால் ஆரிய இனம் என்று இருந்தது என்பதை ஆரியர் நேருவே குறிப்பிட்டுள்ளார் என்பதை நாம் அறியலாம்.
இவர்கள் எப்போதும் வரலாற்றை திருத்தி எழுதுபவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
" தமிழரிடமிருந்த பல அரிய விசயங்களையும் மொழி பெயர்த்து தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்ததைப் போலவும் வட மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது போலவும் காட்டி தமிழ் ஓலைச்சுவடிகளை அழித்தனர்.பரிதிமாற் கலைஞர்- வி.கே. சூரிய நாராயண சாஸ்திரி (தமிழ் மொழியின் வரலாறு : பக்கம்-33)
" இவர்கள் இமயமலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாவில் வசித்திருந்தவர்கள் தங்கள் ஆடுமாடுகளுக்கு புல்லைத்தேடிக் கொண்டு ஊர் ஊராய் திரிந்தவர்கள்". பரிதிமாற் கலைஞர்- வி.கே. சூரிய நாராயண சாஸ்திரி
(தமிழ் மொழியின் வரலாறு : பக்கம்-29).

உ.வே. சாமிநாத அய்யர் தமிழுக்கு தொண்டு செய்தார். ஆனால், அவர் தன் பெயருக்கு அருகிலேயே அய்யர் என்ற சொல்லை, தன் உயர்நிலை என்று கருதும் ஒன்றை எப்போதும் தன்பெயர் அருகில் வைத்துக்கொண்டிருந்தார்.
அந்த பார்ப்பனர் எப்படியெல்லாம் திருத்தல் வேலைகளை செய்தார் என்பதை பார்ப்போம்.
புறநானூற்றில் " ஆண்முலையறுத்த" என்று தொடங்கும் பாடலின் ஒரு சொல் "அறவோர்" என்று வந்துள்ளது . இதனை யாழ்ப்பணத்து பழைய வெளியீடு ஒன்றில் சொல்லப்படுகிறது. ஆனால், உ.வே.சா அவர் பதிப்பில் அந்த சொல் "பார்ப்பனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாட வேறுபாடாகக்கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை.
"அறவோக்குக் கொடுமை செய்தல் கூடா" - தெனும் அறம் பற்றிச் சொல்லும் அப்பாடலை "பார்பார்க்குக் கொடுமை செய்தல் கூடா" -தென்பதாக இவர் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு "
கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக்கொலை"
என்ற காஞ்சி புராண அடியை மேற்கோள் காட்டியுள்ளார்.
இப்படி வரலாற்றை இவர்கள் திருத்துவது இன்று நேற்றல்ல.
காலம் காலமாக செய்து வருவதுதான்.

அன்று மன்னன் அதிகாரத்தை வைத்து இவர்கள் அதிகாரம் செய்தார்கள்.
மனுநீதி எழுதி உலக நீதியை கெடுத்தார்கள்.
தமக்கு மட்டும் தனிநீதி எழுதிக் கொண்டார்கள்.
பின்னர் செய்தி ஏடுகளில் எழுதி ஊரைக் கெடுத்தார்கள்.
இன்று இணையம் உள்ளிட்ட வற்றில் எழுதி நம்மைக் கெடுக்கிறார்கள்.
நிகழ்ச்சி ஒன்றுதான் காலம் இடம் தான் வேறு படுகிறது.


*******************************
பிற விவாதங்களை நண்பர் தமிழினி பதிவில் பார்க்கலாம்.
ஒரு தமிழனின் பார்வை: வஜ்ராவின் திராவிட கூத்து

Wednesday, June 21, 2006

அனைத்துக்கட்சிக் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும், உண்மை நிலையை கண்டறியவும் அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கூட்டமைப்பின் செயலர் கோ. சுகுமாரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமைதிப்பேச்சு வார்த்தையை சீர்குலைத்து ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இலங்கை அரசு அறிவிக்கப்படாத போரைத் தொடங்கி தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது. இதை தடுக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழ் எம்.பிக்களை அழைத்து இலங்கை நிலவரம் குறித்துப்பேச வேண்டும்.

உலகத்தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்துள்ளது. 'தமிழர்கள் மீது போர்தொடுத்தால் ராணுவத் தளவாடங்களை திரும்பப்பெருவோம்' என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். எனவே இந்திய தளவாடங்களை திரும்பப் பெறவேண்டும்.

அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தி வருகின்றனர். தமிழக அரசு அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து தாக்கிவருகிறது அதனை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை தமிழக அரசு மெளனமாக இருந்த வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

ஈழத்தமிழர்களை பாதுகாக்க இந்தியா உடனடியாக தலையிட வேண்டும். எனபன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தார்.

இப்பேட்டியின் போது, ஈழமக்கள் ஆதரவு கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. அழகிரி, தந்தைப்பெரியார் தி.க புதுவை தலைவர் திரு. லோகு. ஐயப்பன், இராட்டிரிய சனதா தளம் தலைவர் திரு. சஞ்சீவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Friday, June 16, 2006

புதுவையில் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் இன்று மாலை (16-06-2006) 5.00 மணியளவில் புதுவை திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இலங்கை அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இலங்கை தமிழர்கள் மீது மிகவும் கொடுமையான தாக்குதலை இலங்கை அரசு நடத்தி வருகிறது. தன் சொந்த நாட்டு மக்களையே இரக்கமின்றி தாக்கி வரும் இராணுவம் தமிழ் மக்கள் மீது கொலை வன்புணர்ச்சி உள்ளிட்ட மனித உரிமை மீரல் செயல்களை செய்து வருவது மிகவும் கண்டிக்கத் தக்கது. விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி அப்பாவித்தமிழ் மக்களை அச்சுறுத்தி இனப்படுகொலை செய்யும் இலங்கை அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழர் தேசிய இயக்கத்தின் புதுவை பொருப்பாளர் திரு. இரா. அழகிரி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகிக்கிறார்.

ம.தி.மு.க. வின் புதுவை பொருப்பாளர் திரு. முத்து, விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் திரு. வணங்காமுடி, திரு.பாவாணன், திரு.அமுதவன், பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் புதுவைச் செயலர் திரு. கோ. சுகுமாரன், செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் திரு. ந.மு. தமிழ்மணி, தந்தைப்பெரியார் திராவிடர்க்கழகத்தின் புதுவைத் தலைவர் திரு அய்யப்பன், இராவணன் படிப்பகத்தின் திரு வீராசாமி, பியூச்சர் அமைப்பைச் சேர்ந்த திரு. இராதா, அம்பேத்கார் தொண்டர் படையைச் சேர்ந்த திரு. மூர்த்தி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் கலந்து கொள்கின்றன.

இரா. சுகுமாரன், ந. இளங்கோ, கோகுல் காந்திநாதி உள்ளிட்ட பலர் இக்கண்ட ஆர்ப்பட்டதில் கலந்து கொள்கின்றனர்.

Saturday, June 03, 2006

மதங்களும் வன்முறையும்

இந்து மதம் வன்முறையானது என்பதற்கு இந்த படம் ஒரு ஆதாரம்.

இந்த படத்தில் ஒரு பெண்ணின் குடலை உறுவி திண்பது போல ஒரு தோற்றம். காலில் ஒரு உடலைப்போட்டு மிதித்துக் கொண்டு சூலத்தால் குத்திக் கொண்டிருக்கிறது.

அதே போல ஆயுதம் இல்லாத கடவுள் இந்து மதத்தில் இல்லை. ஒன்றிரண்டு இருக்கலாம்.

அதே போல இரண்டு மனைவிகள் போன்ற சீரழிவுகள் இந்த கடவுள்களிடம் உள்ளது.

உலகளாவிய முஸ்லீம் மதவாதம் பேசப்படுவது போல் இந்த இந்துமத ஆயுதக் கலாச்சாரம் அதிகம் பேசப்படுவதில்லை.

கிருத்துவின் நம்பிக்கையாளரான புஷ் உலகம் முழுதும் உள்ள மக்களை தம் நாட்டின் ஆயுத பலத்தால் கொன்று குவிக்கிறார். இந்த பயங்கரவாதம் கண்டிக்கத் தக்கது. அவர் ஏற்றுக் கொண்டிருக்கிற மதம் அன்பை மட்டும் போதிக்கும். ஆனால், புஷ்ஷை கண்டிக்காது.

காந்தியை என் கொன்றாய் என்று "கேட்சே"யை கேட்ட போது இந்து மதம் ஆயுதம் ஏந்தியது ஆனால், காந்தி கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது என்று சொல்லி இந்துக்களை கோழையாக்கி விட்டார். எனவே இவரை நீண்ட நாள் விட்டால் இந்துக்களை கோழையாக்கி முஸ்லீம்களின் ஆதிக்கம் பெற்ற நாடாக மாற்றிவிடுவார் எனவே தான் அவரை கொல்ல நேர்ந்தது என்று குறிப்பிட்டார்.

இந்து மதம் ஆயுத கலாச்சாரத்தை ஆதரிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

காந்தியை கொன்ற ஆர். எஸ், எஸ் காரர்களின் ஆயுதமும், சூலம் தான்.

Thursday, May 25, 2006

தேசிய இன வாதம் - சந்திப்பு அவர்களுக்கு பதிலாக

தேசிய இன விடுதலை பிரிவினை வாதமல்ல

இந்தியாவிற்கு ஒரே பிரதமர், ஒரே தேசியக் கொடி, ஒரே தேசியகீதம், ஆனால், எங்கள் தமிழ்ப்படத்தை 7 வாரம் கழித்துத் தான் கர்நாடகாவில் ரீலீஸ் செய்யமுடியும். ஆனால் கோக், பெப்சி கம்பெனிகள் தங்கள் சரக்குகளை அங்கே விற்று பணத்தை அள்ளிச் செல்ல முடியும். இதற்குப் பெயர் தான் தேசிய ஒருமைப்பாடு?.

திரைப்பட இயக்குனர் சீமான் (மே-10-06 இந்தியா டுடே தமிழ் பக்கம்- 5).

திரைப்பட இயக்குனர் தெரிவிக்கும் தகவல் என்ன?. மொழி வாரியான தேசிய இன எழுச்சி தலை தூக்கியுள்ளது என்பதையே காட்டுகிறது. ஒரே நாட்டில் காவிரி நதி நீர்ப்பிரச்சனை தீர்க்கப் படாமல் இருப்பது ஏன்? ஆனால் இரண்டு வேறு பட்ட நாடுகள் இடையே கூட நதிநீர்ப் பிரச்சனைகள் எளிமையான முறையில் தீர்க்கப்பட்டதாக வரலாறு உள்ளது.

கர்நாடகத்தில் காவிரியும், ஆந்திராவில் பாலாறும், கேரளாவில் பெரியாறு அணையும் தமிழர்களுக்கு பிரச்சனையாக உள்ளது. ஒரே இந்தியா என்ற உணர்வு இவர்களுக்கு இல்லையா? தமிழ் தேசியம் பற்றிப் பேசினால் இங்கு எதிர்கின்ற பொதுவுடைமை கட்சி, கர்நாடகத்தில் காவிரி நீரை தமிழகத்திற்கு விடவேண்டாம் என முடிவு செய்கிறது. ஆனால் தமிழகத்திலோ அந்த கட்சி காவிரி நீரை விடவேண்டும் என்கிறது. ஒரே கட்சி இருவேறு மாநிலத்தில் வேறு வேறு நிலைப்பாடுகள் ஏன்?. அதே போல காங்கிரசு, பா.ச.க ஆகிய கட்சிகள் அந்த மாநிலத்தில் ஒரு மாதிரியும் தமிழகத்தில் வேறு மாதிரியான நிலையையும் எடுக்கிறது.

தைரியமாக காவிரி நீரை விடவேண்டும் என்றோ, அல்லது விடவேண்டாம் என்றோ அந்த கட்சிகள் அறிவிக்க தயாரா?. அறிவிக்க மாட்டார்கள்.

அதாவது மொழி அடிப்படியிலான, இன அடிப்படையிலான உளவியல் மாற்றம் எல்லா மாநில அரசுகளிடமும், மக்களிடமும் காணப்படுவது உண்மை என்பதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.

காவிரி நீர் தமிழக மக்களின் உயிராதாரமான பிரச்சனையாக உள்ளது. காவிரி பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படவில்லை. எனவே, தனிநாடாக பிரிந்து போனால் தான் சர்வதேச நதிநீர் சட்டப்படி மாநிலங்களுக்கு சேர வேண்டிய நீரை பெறமுடியும் என்கிறது “ஒடுக்கபட்டோர் விடுதலை கழகம்” என்ற அமைப்பு.

“இரு தேசிய இனங்கள் பிரிந்துதான் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தொழிலாளர் வர்க்க போரின் அடுத்த கட்ட நன்மைக்கு அவற்றைப் பிரித்து விடுவதே நல்லது” – என்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இந்தியா என்றொரு பேரரசு இருந்ததில்லை. எனவே இந்தியா என்பது பூகோள ரீதியிலான அரசியல் பெயரே தவிர அது ஒரு இனம் சார்ந்த நாட்டில் பெயரல்ல.

இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியா முழுவதும் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே உள்ளது. ஒரு மொழி அழிந்தால் அந்த இனம தன் அடையாளத்தை இழக்கிறது. அது அழிந்து போகிறது என்று பொருள்.

செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சமக்கிருதம் யாருமே பேசாத மொழியாக உள்ளது. ஆனால் தமிழ் உலகம் முழுதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பேசும் மொழியாக உள்ளது. ஆனால் அந்த மொழிக்கு சமக்கிருததிற்கு இணையான தகுதி வழங்கப்படவில்லை. எனவே இந்திய அரசு ஒரு மொழி ஒடுக்கும் அரசாக உள்ளது. அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படுவதில்லை என்பது உண்மை.

திராவிடத் தேசியம் என்பது இன்றைக்கு கன்னடம், ஆந்திரம், கேரளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொல்லப்படவில்லை. இன்று திராவிடம் என்பது ஒரு அடையாளச் சொல்லே தவிர அரசியல் சொல்லாக அது இல்லை.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டாலும் 56 நவம்பரிலிருந்து கவனித்தால் அவர் எந்த இடத்திலும் அவர் திராவிடத் தேசியத்தை வலியுறுத்த வில்லை என்பது விளங்கும். 56 க்குப்பின் இந்திய வரைபடத்தை எரிக்கப்போகிறேன் என்று பெரியார் சொன்னபோது தமிழ்நாடு நீங்கலாக என்று சொன்னாரே தவிர திராவிடநாடு தவிர என்று சொல்லவில்லை.

இப்படி சிறிய தேசிய இனங்களாக இருந்தால் அமெரிக்கா போன்ற நாடுகளால் வல்லரசு ஆத்திக்கம் இருக்கும் என்கிறார்கள் சிலர். உலகத்திலேயே மிகப்பெரிய நாடாக இருக்கிற இந்தியா மீது அமெரிக்க ஆதிக்கம் இல்லையா?. இன்று உலகத்திலுள்ள மிகப்பெரிய நாடுகளும் ரஷ்யா உள்பட அமெரிக்காவைப் பார்த்து அஞ்சுகின்றன.

அமெரிக்காவைப் பார்த்து அஞ்சாமல் இருக்கிற சின்னஞ்சிறிய நாடு கியூபா என்பதை மறந்து விடவேண்டாம்.

பாரதீய சனதாகட்சியின் அத்வானி சிந்தி இனத்தை சேர்ந்தவர். பாகிஸ்தானிலிருந்து அகதியாக வந்தவர். எனவே பாகிஸ்தானின் சிந்தி இன உரிமைப் போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தருகிறார். காங்கிரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் அவ்வாறு சிந்தி இன விடுதலைக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தன . ஆனால் அதை நாம் பேசினால் அதற்கு பெயர் “பிரிவினைவாதம்” அவர்கள் பேசினால் அதற்கு பெயர் தேசப்பற்று.

பாகிஸ்தானில் வங்க மக்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய போது இந்திய இராணுவத்தை அனுப்பி அவர்களுக்கு உதவி செய்தது. எனவே இந்தியாவில் தேசிய இனங்கள் விடுதலை அடையக்கூடாது. அன்னிய நாடுகளில் விடுதலை அடையாலாம் என்பது இந்திய அரசின் கொள்கை மட்டுமல்ல பல கட்சிகளின் நிலையாகவும் உள்ளது.

தேசிய இனம் தொடர்பாக பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளரான சந்திப்பு அவர்கள் இனவாத்தில் நம்பிக்கை இல்லை என்கிறார்.

//இறுதியாக ஜாதி, மதம், இனம் இதன் பெயரால் தளம் இயங்குவது படிப்படியாக பாசிசத்திற்கு துணை புரியும்!//

என்று அவர் தன் வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் ஆதரிக்கும் கட்சி தேசிய இனம் தொடர்பாக என்ன சொல்கிறது என்பதை கீழேக் காண்போம்.

இந்திய பொதுவுடைமைக் கட்சி ஒன்றுபட்ட கட்சியாக இருந்த போது கீழ்ககண்டவாறு முடிவெடுத்தது. 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கட்சியின் மாநாட்டில் தேசிய இனச்சிக்கல் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பலதேசிய இனங்கள் அடங்கிய பெருநாடே இந்தியா என்பதை ஏற்றுக்கொண்ட அத்தீர்மானம் மேலும் அது பற்றி பின்வறுமாறு விளக்கமளித்துள்ளது.

“இத்தீர்மானத்தின் 3(ஏ) பகுதியில் பின்வறுமாறு குறிப்பிட்டுள்ளது. ஒரு தொடர்ச்சியான நிலப்பகுதியைத் தாயகமாகக் கொண்டு பொதுவான வரலாற்றுப் பாரம்பரியம், பொதுமொழி, பொதுவான பண்பாடு, பொதுவான மனவியல் பண்பாடுகள், பொதுவான பொருளாதார வாழ்க்கை ஆகியனவற்றைக் கொண்ட ஒவ்வொரு மொழிவழி மக்களும் தனித்தேசிய இனமாகக் கொண்டக் கருதப்பட வேண்டும்.

விடுதலை பெற்ற இந்தியாவில் சுயாதிக்க அரசாக (Autonomous state) விளங்ககூடிய உரிமையும் விரும்பினால் அந்தத் தேசிய இனத்திற்குப் பிரிந்து செல்லக்கூடிய உரிமையும் இருக்க வேண்டும். ........................ .இவ்வாறு பிரிந்து அமைக்கப்பட்ட பல்வேறு தேசிய இனங்களின் சுயாதிக்க அரசுகளின் கூட்டமைப்பாக இந்தியா திகழும் ”.

இந்தத் தீர்மானத்தின் ஐந்தாம் பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “ஆனால் இந்த விதத்தில் பிரிந்து போகும் உரிமையை அங்கிகாரிப்பதன் மூலம் உண்மையில் மாநிலங்கள் பிரிந்து விடும் என்று கருதத் தேவையில்லை. தேசிய இனங்களுக் கிடையிலான பரஸ்பர சந்தேகங்களைப் போக்குவதன் மூலமும், செயற்பாட்டை ஒருமையைக் கொண்டு வருவதன் மூலமும் சுதந்திர இந்தியாவில் மகத்தான ஒற்றுமையைக் கட்டிக்காக்க முடியும். இத்தகைய தேசிய ஒற்றுமையே எல்ல தேசிய இனங்களுக்கும் ஒருங்கிணைய வேண்டிய அவசரத்தேவையை அவற்றுக்கு உணர்த்தி சுதந்திர இந்தியாவை உருவாக்கும். அத்தகைய சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இன அரசும் சுதந்திரமாகவும், சம மதிப்புக்கொண்ட உறுப்பாகவும் பிரிந்து செல்லும் உரிமை கொண்டதாகவும் இருக்கும். நாம் அடையவிருக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்குரிய ஒரே வழி இதுவாகும்.”

பொதுவுடைமைக் கட்சியின் இத்தீர்மானம் மிகத்தெளிவாகவும், உறுதியாகவும் தேசிய இனங்களின் தன்னுரிமையை வலியுறுத்துகிறது.

இந்தியா ஒன்றுபட்டு இருக்க வேண்டுமானால் தன்னுரிமை கொண்ட தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியா திகழ்வதன் மூலமே உண்மையான ஒற்றுமை நிலவும் என்பதையும் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

1946ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசின் சார்பில் வந்த கிரிப்ஸ் தூதுக்குழுவிடம் தனது கருத்துக்களை பொதுவுடைமைக்கட்சி சமர்ப்பித்திருந்தது. அப்போதைய பொதுச்செயலாராக இருந்த பி.சி.ஜோஷி இக்குழுவிற்கு அளித்த அறிக்கையில் “தேசிய இனங்களுக்குத் தங்கு தடையற்ற சுயநிர்ணய உரிமை” (Unfiltered Self-determination) வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டிருந்தது.

1947ஆம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதத்தில் நடைபெற்ற அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுத்தீர்மானதில் பின்வறுமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

“தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை மறுப்பதன் வாயிலாக காங்கிரசு கட்சி அதே குற்றத்தை இன்று செய்து வருகிறது. மேலாண்மை செலுத்துகிற முதலாளிவர்க்கத்தின் நலன் கருதி காங்கிரசு இவ்வாறு செய்கிறது. காங்கிரசின் இந்தப்போக்கு தேசிய இனங்களுக்கிடையே பகை உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும். எனவே இந்த விசயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைமை தந்தால் ஒழிய இந்த அபாயத்தைப் போக்க இயலாது”. என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே பொதுவுடைமக்கட்சி இனவிடுதலையை ஏற்கிறது என்பது உண்மை. உண்மையை வலைப்பதிவர் சந்திப்பு புரிந்து கொள்ளவேண்டும்

ஐ.நா சபை கூட உலகெங்கும் உள்ள தேசிய இனங்களுக்குத் தன்னுரிமை உண்டு என்பதை அங்கிகரித்துள்ளது. அதைதான் நாம் வலியுறுத்துகிறோம்.

தன்னுரிமை (Ritht to self detiermination.) ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை ஆகும். தமிழ் தேசிய இனம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களும் தன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தன்னுரிமை பெற்ற தேசிய இனங்கள் தாமாக விரும்பி இணைந்த ஒன்றியமாக இந்தியா விளங்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.

*************
உதவிய நூல்கள்:
1. தன்னுரிமையா? மாநில சுயாச்சியா?- (தமிழர் தேசிய இயக்கம்).
2.பேருருவம் கொள்ளும் தமிழ்த்தேசியம்- (தமிழர் தேசிய இயக்கம்.)
3. அன்னம் சிற்றேடு ஏடு 7, 1994
4. தமிழ் உரிமை மிட்போம், (தமிழ் உரிமைக்கூட்டமைப்பு திண்டிவனம்.)
5. தன்னுரிமைத் தமிழ்தேச எழுச்சி முரசு – (மார்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சி)

Saturday, May 20, 2006

2060 - தேர்தலை நடத்தப்போவது யார்?

தேர்தல் 2060 பற்றி சொல்ல வேண்டுமானால், நான் 54 ஆண்டுகள் முன்னோக்கி சிந்திக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் நாம் கடந்து வந்த பாதைகளைப் பற்றி 54 ஆண்டுகளுக்கு மேல் பின்னோக்கியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

1952 ஆம் ஆண்டு நிலையுடன் அரசியல், பொருளாதார, சமூக மாற்றம், முன்னேற்றம் இவைகளுடன் அறிவியல் வளர்ச்சி சேர்ந்ததுதான் 2006.

அதேபோல,2006 ஆம் ஆண்டு நிலையுடன் அரசியல், பொருளாதார, சமூக மாற்றம், முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி மற்றும் உலக மயமாக்கலினால் ஏற்பட இருக்கும் பிற மாற்றங்கள் சேர்ந்தது தான் 2060.

என்பது தான் எனது சுருக்க குறியீடு!

இந்த குறியீட்டை அடிப்படையாக வைத்து கடந்த கால தேர்தல்கள் எந்த அளவு இந்த தேர்தலில் ஒத்துப்போகின்றன என்பதையும், எதிர்காலத்தில் எந்த அளவு மாறுபடும் என்பதையும் நாம் கணிக்க முடியும். எனக்கருதுகிறேன்.

1952 முதல் 2006 வரை தேர்தல் அரசியலை திரும்பிப் பார்ப்போம்.

அரிசியும் அரசியலும்

1967ஆம் ஆண்டு தேர்தலில் ரூபாய்க்கு 3 படி அளிப்போம் என்றார் அண்ணா,எப்படி முடியும் என்று கேட்ட போது, 3 படி லட்சியம், 1 படி நிச்சயம் என்றார். சென்னையிலும், கோவையிலும் சிலகாலம் ஒருகிலோ ஒரு ரூபாய் என சிலகாலம் வழங்கப்பட்டது. ஆனால் தொடர முடியவில்லை.

ஆனால், 2006 தேர்தலில் 10 கிலோ, 15 கிலோ, இலவசம் எனவும், 2 ருபாய்க்கு ஒரு கிலோ எனவும் அரிசி அரசியல் நடைபெற்றது. இந்த அரசு இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடர்ந்து தருமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

திரைப்படமும் அரசியலும்

தமிழகத்தில் திரைப்பட அரசியல் தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 1952 பராசக்தி படத்தில் என். எஸ் .கிருஷ்ணன் தினா............. முனா.......... கானா.......... என்று தொடங்கும் பாடலில் தி.மு.க விற்கு ஆதரவாக பெரியார், அண்ணா, தி. மு. க பற்றி மறைமுகமாக பிரச்சாரம் செய்தார்.

திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிவந்த கருணாநிதி அண்ணா மறைவிற்கு பிறகு தி.மு.க இயக்கத்தை எதிரிகளிடமிருந்து தனது சாதுரியமான நாவன்மையால் பாதுகாத்தார். ஆனால், தி.மு.க எம்.ஜி.ஆர் தலைமையில் பிளவுபட்ட போது, தி.மு.க பின்னடைவை சந்தித்தது. எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களால் மக்களிடம் செல்வாக்கு படைத்த ஒருவராக திகழ்ந்தார். அவரது செல்வாக்கு இன்றுவரை அந்த கட்சிக்கு பலமாகவே உள்ளது.

அவருக்கு பின் அந்த கட்சியை அவருடன் படத்தில் நடித்து வந்த செயலலிதா கைப்பற்றினார் இன்று விசயகாந்த் சமீபத்தில் கட்சி தொடங்கி கணிசமான வாக்குகளை வாங்கி இருப்பதுடன் இந்த தேர்தலில் திரைப்பட நட்சத்திரங்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

எனவே, திரைப்படமும் அரசியலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத் தேர்தலில் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.

சமூக பொருளாதார மாற்றங்கள்

அன்றைய மக்கள் தகவல் தொடர்பு வசதியில் மிகவும் பின்தங்கியிருந்தனர் அதனால் உலக செய்திகளை அவர்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன.

ஆனால், இன்றோ அவ்வப்போது, நேரடியாக உலக விசயங்களை தொலைக்காட்சிகள், தகவல் தொடர்பு வசதிகள் மூலம் வழங்கி மிகப்பெரிய மாற்றத்தினை உருவாக்கியுள்ளது. இவை மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான அடிப்படைகளையும் நமக்கு வழங்கியிருக்கிறது.

தஞ்சைப்பகுதி காவிரி நீரையும் பிற பகுதிகள் அந்தந்த பகுதி நதிகளை நம்பி பயிர்செய்யும் நிலப்பரப்பாக இருந்ததால் பெருமளவு மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். காவிரி நீர் வராமையால் பலர் நகர்புறம் நோக்கி கட்டுமானத்தொழில் உள்பட பலதொழில் செய்ய நாடோடிகள் போல் ஆகியுள்ளனர்.

அறிவியல் வளர்ச்சி

அன்றைய தேர்தலில் வாக்கு சீட்டுகள்தான் பயன்படுத்தப்பட்டன, முடிவு அறிவிக்க 3 நாட்கள்வரை ஆகும். ஆனால் இன்றோ அறிவியல் வளர்ச்சியினால், மின்னனுவியல் இயந்திரங்கள் பயன் படுத்தி சிலமணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது.

பழைய காலங்களில் நேரடி தேர்தல் பிரச்சாரம் இருந்த்து. ஆனால், 1984 ஆம் ஆண்டு எம்.ஜிஆர் அமெரிக்க மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட போது அவர் மருத்துவமனையில் படிப்பது, உணவு அருந்துவது உள்ளிட்ட காட்சிகளை வீடியோ காட்சி காட்டப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார்.

ஆனால் இந்த தேர்தலில் நேரடி ஒலிபரப்பாக பிரச்சார தளத்திலிருந்து உலகம் முழுதும் ஒளிபரப்பப்பட்டது. .இந்த பிரச்சாரம் அக்கட்சிக்கு வெற்றி தேடித்தந்த முக்கிய காரணங்களில் ஒன்று.

அத்துடன் கைத்தொலை பேசியில் குறுந்தகவல் மூலமும் தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதுதான் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான தேர்தல் அரசியலின் சுருக்க வரலாறு.இந்த சுருக்கவரலாற்றை வைத்துக் கொண்டு தான் நாம் வருங்கால அரசியலின் போக்கை வரையறுக்க முடியும்.

இனி தேர்தல் 2060 எப்படி இருக்கும் என்று கணிப்போம்.

தேர்தல் 2060

அரிசியும் அரசியலும் - தேர்தல் 2060

54 ஆண்டுகள் கழித்தும் அரிசி அரசியல் இருக்காது என்று நான் உறுதி சொல்வதற் கில்லை. ஏனெனில், அமெரிக்க நிறுவனம் ஒன்று தென்னிந்தியா இன்னும் 40 ஆண்டுகளில் பாலைவனமாகும் என்று ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது.

அதற்கேற்றார் போல், நம் நிலத்தடி நீர் குறைந்து வருவதோடு அரசுகளின் அக்கரையின்மையும் நமக்கு தெரிகிறது, நிலம் குளம், குட்டை, வாய்க்கால், ஏரிகள் மூடப்பட்டு வீடுகளாக்கப் பட்டுள்ளன. விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளன. காவிரி நீர் கானல் நீரோ! என்ற கேள்வி இன்னும் நிலை பெற்றுள்ளது. இடைக்கால தீர்ப்பு நிரந்தரத் தீர்ப்பானாலும், வருங்கால அரசுகள் தொடர்ந்து நீர் வழங்குமா? என்பது கேள்விக் குறிதான்.

எனவே, காவிரி நீர் கேள்விக்குறியதாகவே உள்ளதால் தேர்தல் 2060-இல் அரிசி அரசியல் இருப்பது தவிர்க்க முடியாமல் போகலாம்.

அரிசி இல்லை யென்றாலும் உணவு பற்றிய அரசியல் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதைக் காண முடிகிறது.

திரைப்படமும் அரசியலும் - தேர்தல் 2060

தமிழக வரலாற்றில் திரைப்பட அரசியலின் பங்கு மிக அதிகம் தான். இவ்வளவு முன்னேறிய சமூக அமைப்பில் நடிகர் “விஜய்” ஐ ஏன் பிடிக்கும் என்று கேட்டபோது அவர் பாய்ந்து பாய்ந்து சண்டைபோடுகிறார். அதனால் அவரை பிடிக்கும் என்கிறான் ஒரு ரசிகன். அதன் பின்னால் கயிற்றை கட்டி இழுக்கும் தொழில் நுட்ப ஏமாற்று வேலை உள்ளதை புரிந்து கொள்ள மறுக்கும் இளைஞனைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும் என்கிறார் இயக்குனர் சீமான்.

இப்படிப்பட்ட அப்பாவிகள் 2060-இல் இருக்கமாட்டார்கள் என நான் உறுதி அளிக்க முடியாது. எனவே, திரைப்பட அரசியல் 2060 தேர்தலிலும் திரைப்பட ஆதிக்கமில்லாத அரசியல் அமையும் வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ளது.

அறிவியல் வளர்ச்சியும் தேர்தல் 2060 - ம்

மிகவும் முன்னேறிய தொழில் நுட்பம் பயன் படுத்தப்படும். வாக்குச்சாவடிக்கு வராமலே வாக்களிக்கும் தேர்தல் முறை வரலாம். எங்கிருந்தாலும் அவர் வசிக்கும் பகுதி வேட்பாளருக்கு இணைய வழி வாக்களிப்பு முறை அல்லது அதைவிட முன்னேறிய வழிகளில் தேர்தல் நடைபெறலாம்.

இப்போதுள்ள வங்கி அட்டை (ஏ.டி.எம்) மாதிரி வாக்காளர் குறியீட்டு அட்டை வழங்கப்படலாம். கணிப்பொறித்திரை முன் வந்து நின்றால், கணிப்பொறி தானாக முகம் பார்த்து அங்கிகரித்து வாக்களிக்க அனுமதிக்கலாம். மனித உபயோகம் குறைக்கப்படலாம்.

அல்லது இணைய வழி தேர்தலோ, மின்னனு முறைத்தேர்தல், கைத் தொலைபேசி மூலம் வாக்களிக்கும் வசதியும் ஏற்படலாம். அல்லது இவைகள் எல்லாம் அடங்கிய பல்நோக்கு முறையில் கூட தேர்தல் நடத்தப்படலாம்.

2006 தேர்தலின் சிறப்புக் கூறுகளும் 2060 தேர்தலும்

முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பது தான் வழக்கம். ஆனால் இப்போது மத்தியிலும் மாநிலத்திலுமே கூட்டணி ஆட்சிகள் நடைபெறுகிறது.

கூட்டணிகட்சிகள் விலகினால் ஆட்சிகள் கவிழும் நிச்சயமற்ற நிலை இப்போது உள்ளது. பாராளுமன்றம் நிலையற்ற நிலையில் இருக்கும் அதே வேளையில் பாராளுமன்ற அமைப்பு முறை வலுப்பெற்று வருகிறது. மக்கள் வாக்களிக்கும் விகிதம் மாறுபட்டுள்ளது. பாராளுமன்ற அமைப்புமுறையில் நம்பிக்கை ஏற்படும் வகையில் விதிமுறைகள் அதிகமாகியுள்ளது.

இப்போது தேர்தல் நடைபெற்றால் ஐந்து ஆண்டுகள் ஆட்சியாளர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை. எனவே தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை திருப்பி அழைக்கும் உரிமையை இப்போது சிலர் கோரிவருகின்றனர்.

அவ்வாறான உரிமை பிற்காலத்தில் வழங்கபட்டால் தேர்தல் 2060 ஆண்டு ஆட்சியில் நிச்சயமற்ற போக்கு மேலும் அதிகமாகும்.

அரசியலில் ஊழல் நேர்மையின்மை, நம்பிக்கை இழக்கச் செய்தாலும் அரசின் நிறுவனமய மாக்கலின் மூலம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.தேர்தல் நடப்பதில் பணம் வழங்குதல், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றத்தடை போன்ற கட்டுப்பாடுகள் விதித்தல் என்பது நிறுவனமயமாக்கலின் தன்மையேயாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற சட்டமன்ற அமைப்புகளைவிட நீதித்துறை, தேர்தல் துறை போன்றவை தம்மை வலுவாக அமைத்துக் கொள்ளும் போக்கு வளர்ந்துள்ளது.

இதுபோன்ற நிறுவனமயமாக்கல் என்பது ஒரு ஆபத்தான போக்காகும். ஏனெனில் இந்திய இரையாண்மைத் தொடர்பான வழக்கொன்று நீதிமன்றத்தில் வருமானால் அந்த நீதிமன்ற தலைமை நிதிபதியை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி இரையாண்மையை கேலிக்கூத்தாக்க முடியும்.

எனவே, அதிகாரக்குவிப்பின் வடிவமான நிறுவனமயமாக்கல் என்பது கைவிடப் படவேண்டும். ஆனால் தேர்தல் 2060 -இல் நிறுவனமயமாக்கல் அதிக்கப்படும் வாய்ப்பே அதிகம் உள்ளது. இத்தகைய மாற்றம் உலகமயமாக்கல் சூழலில் இந்தியாவிற்கான பாதுகாப்பற்ற தன்மையை அதிகரிக்கும் என்றே சொல்லமுடியும்.

தேர்தல்பற்றிய விழிப்புணவுகள் இப்போது மாறிவருகின்றன. இதற்கு முன் எப்போது இல்லாத வகையில் தேர்தலைப் புறக்கணிப்பவர்கள் 49 ஓ சட்டப்பிரிவு பற்றிய விழிப்புனர்வு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் துறையானது இதுவரை தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதை சரிபடுத்துவது பற்றித்தான் அதிகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் தேர்தல் முறைகளில் உள்ள குறைபாடுகளை களைவதில் அக்கரை காட்டவில்லை.

நான்குக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேச்சைகள் உள்ளிட்டவர்கள் போட்டியிட்டால் தேர்தல் முடிவுகள் சனநாயகப்பூர்வமாக இருப்பதில்லை. எனது முந்தய பதிவு
தேர்தல்முறை ஜனநாயகம் இதில் தேர்தல் முறையிலுள்ள குறைபாடுகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் சனநாயகத்தின் தூண்கள் என்று கருதப்பட்ட பத்திரிக்கைகள். தொழில் முறை நிறுவனங்களாகியுள்ளன. தாம் விரும்பும் கட்சிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு அல்லது வேறுவகையான ஆதாயங்களை பெற்றுக் கொண்டு தனது சனநாயக்கடமைகளை ஆற்றும் பணியிலிருந்து தம்மை தவிர்த்துக்கொண்டன. இந்த நிலைமை 2060 ஆண்டு தேர்தலில் மிகவும் வலுவான நிலைமைகளில் காணப்படும் நிலையில் உள்ளது.

உலகமயமாக்கல் சூழலில் இந்தியா

உலகமயமாக்கல் பின்னணியில் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. நதிகள் தனியார் மயமாக்கப்பட்டுவருகிறது. இப்போது விவசாயத்தில் சிரமப்படும் விவசாயிகள் மேலும் துன்பம் எதிர்கொள்ளலாம். இது தேர்தலில் எதிரொலிக்கும். சமூக மாற்றம் உலக அளவிலான கலாச்சார மாற்றம் இருக்கும். உலகில் எப்பகுதியும் உலகமய பின்னணியின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்.

இப்போது அன்னிய மூலதனத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. அவ்வாறு தொடங்கினால் அதற்கான இலாபம் முழுக்க வெளிநாடுகளுக்கே செல்லும், எனவே இந்தியவில் மூலதன பற்றாக்குறை ஏற்படும்.

2005-2006 ஆம் ஆண்டு மட்டும் உள்நாட்டு வெளிநாட்டு கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி மட்டும் ரூ; 2, 09 ,904 கோடி ( தினமணி 17-05-2006 ப. சிதம்பரம் அறிக்கை) ஆக உள்ளது.

இவ்வளவு பெரிய தொகை மேலும், கடன் வட்டி என மிகப்பெரிய கடன் தொகையாக மாறிப்போய் இருக்கும். இவ்வளவு கடன் வாங்கும் இந்திய அரசு அதனை அடைப்பதற்கான திட்டம் எதையும் வைத்திருப்பதாக தெரியவில்லை. அல்லது நீண்டகாலப் போக்கிலேனும் அதற்கான திட்டம் வகுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

என்வே, இன்னும் பெரிய கடன்கார நாடாக இந்தியா மாற இருப்பதால், கடனை அடைக்க முடியாமல் போகும் வாய்ப்புகள் அதிகம். பின்னர் சமாளிக்கலாம் என்று நீங்கள் சொன்னால், இப்போதே அப்படி சமாளிக்கலாம் இல்லையா?. இப்போது, உலகவங்கி, சர்வதேச செலாவணி நிதியத்தின் ஆணையின் பேரில் தான் திட்டம் போடுகிறது இந்திய அரசு.

பிற்காலத்தில் அமெரிக்க கைப்பாவையான உலகவங்கி உத்தரவுப்படி இந்திய அரசு ஒரு காலணிய அரசாகவோ அல்லது இதைவிட முன்னேறிய அரைக்காலணிய அல்லது காலணிய நாடாக இந்தியா மாறி வரும் சூழல் வளர்ந்து வருகிறது.

இந்தியா முன்னர் இங்கிலாந்து காலணியானது, போல, இப்போது அமெரிக்க காலணி நாடாகும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை. அமெரிக்க போர் உளவியல் நமக்கு அளிக்கும் பாடம் இவை.

அப்படி நடந்தால், 2060 தேர்தலை இந்தியாவின் அமெரிக்க காலணி அரசு அல்லது அதன் கைப்பாவை அரசாக இந்திய அரசு தான் இங்கு தேர்தல் நடத்தும் என்றும் நாம் கருதலாம்.

Saturday, May 13, 2006

மார்க்சியம்- வலைப்பதிவர் கேள்வியும் பதில்களும் பகுதி-3

மார்க்சியம் அறிவியல் பூர்வமானதா?

முந்தைய விவாதங்களின் தொடர்ச்சியாக இது வெளிவருகிறது.
கார்ல் பெப்பர் அவர்களின் விவாதம் தொடர்பாக சோதிப் பிரகாசம் என்பவர் எழுதியுள்ள தொடர்ச்சிகளை கீழே தொடுப்பில் இணைத்துள்ளேன்.

ஒரே பதிவில் அதிக இணைப்பு இருந்தால் படிப்பதில் அதிக சிரமம் இருக்கும் என்பதால் இரண்டு பகுதிகளாக அவை பிரிக்கப்பட்டுள்ளது.

சோதிப் பிரகாசம் அவர்களின் விவாதங்களின் இரண்டாவது பாகமாக அடுத்த நான்கு பகுதிகளுக்கு இங்கு இணைப்பு சொடுக்கப்பட்டுள்ளது.

கார்ல் பாப்பரின் வெங்காயம்-5
கார்ல் பாப்பரின் வெங்காயம்-6
கார்ல் பாப்பரின் வெங்காயம்-7
கார்ல் பாப்பரின் வெங்காயம்-8

இந்த விவாதம் வலைப்பதிவர்க்ளுக்கு பதிலாக அமையும் என கருதுகிறேன்.

என்னுடைய வேலையை மிகவும் இலகுவாக்கிய திரு. சோதிப் பிரகாசம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.